சீனாவின் பட்டுப் பாதைக்குப் போட்டியாக ஜி-7 நாடுகள் வகுக்கும் திட்டம்!

சீனாவின் முன்னெடுப்புக்குப் போட்டியாக 600 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜி-7 உட்கட்டமைப்பு திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கை அமெரிக்கா பகிர்ந்து கொள்ளும் என்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பிடன் கூறினார்.

சீனாவின் பட்டுப் பாதைக்குப் போட்டியாக ஜி-7 நாடுகள் வகுக்கும் திட்டம்!

எழுவர் குழு என்பது தான் ஜி-7 என்று அழைக்கப்படுகிறது. ஜி-7 என்பது அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஃப்ரான்ஸ், ஜப்பான், இத்தாலி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கூட்டணியாகும்.  

ஜி-7 நாடுகளின் சந்திப்பு

கடந்த ஜூன் 26 தொடங்கி ஜூன் 28 வரை ஜி-7 நாடுகளின் 48வது கூட்டம் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

ஜி-7 நாடுகள் உலகெங்கிலும் உள்ள வளம் குறைந்த நாடுகளின் உள்கட்டமைப்பில் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளன, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா இந்த்த் தொகையில் மூன்றில் ஒரு பங்கை செலுத்துகிறது. ஜெர்மனியில் ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது, இந்த முதலீடு சீனாவின் பட்டுப்பாதை முன்முயற்சிக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஜி-7 குழுவின் மற்ற தலைவர்களுடன் குழுமியிருக்கும் போது, மேற்கத்திய நாடுகள் வளரும் மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில், உயர்தரமான, நிலையான உள்கட்டமைப்புக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளன என்றார்.

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் அதிக முதலீடு செய்வதன் மூலம் சீனா தனது செல்வத்தை ஆயுதமாக்குவதாக அமெரிக்கா நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது. டிரம்ப் நிர்வாகம் பெய்ஜிங் அதன் கடன் வாங்குபவர்களிடம் "கடன் பொறி இராஜதந்திரத்தை" பின்பற்றுவதாகக் கூறியது. கடன் பெறுபவர்களுக்கு திருப்பிச் செலுத்த முடியாத கடன்களையே வழங்குகிறார்கள் என்றும் கடன் செலுத்தாதவர்களிடம் அந்த கடன் மூலமாக கட்டப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை பிணையமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் அமெரிக்கா கூறி வருகிறது.

2.5 டிரில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ள அதன் உலகளாவிய உள்கட்டமைப்பு முதலீடுகள் தனக்கும் தான் கடன் வழங்கும் நாடுகளுக்கும் பயனளிக்கும் என்று கூறியுள்ள சீனா, அமெரிக்காவின் இந்தக் கூற்றை நிராகரிக்கிறது. பெரும்பாலான பணம் சாலைகள் மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றிற்கு செல்கிறது, இது சீனாவை வெளிநாட்டு வளங்கள் மற்றும் சந்தைகளுக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதாக சீனா கூறுகிறது.

உலகளாவிய உட்கட்டமைப்புத் திட்டம்

ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு  பட்டுப் பாதை திட்ட்த்திற்கான முன்முயற்சி தொடங்கப்பட்டதில் இருந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவின் திட்டத்திற்கு மாற்றாக ஒன்றை வழங்க முயற்சித்து வருகின்றன. கடந்த ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள கார்ன்வாலில் நடந்த ஒரு சந்திப்பின் போது, ​​ஜி-7 நாடுகள் தங்கள் சொந்த திட்ட்த்தை அறிவித்தன, "சிறந்த உலகத்தை மீண்டும் கட்டியமைப்போம்"(BBBW) என்று அத்திட்ட்த்திற்கு பெயரிடப்பட்டது. பிடன் நிர்வாகத்தின் உள்நாட்டுத் திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், அது இருந்ததால் பல்வேறு தரப்பினரால் இது புறக்கணிக்கப்பட்டது. பின்னர் உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டிற்கான கூட்டாண்மை(PGII) என மறுபெயரிடப்பட்டது.

இது உதவியோ அல்லது தொண்டோ அல்ல என்று பிடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் தனது உரையின் போது கூறினார். இது அமெரிக்க மக்கள் மற்றும் நமது அனைத்து நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் வருமானத்தை வழங்கும் ஒரு முதலீடு என்று அவர் கூறினார். 

இது எங்கள் எல்லாருடைய பொருளாதாரத்தையும் மேம்படுத்தும், மேலும் எதிர்காலத்திற்கான எங்கள் நேர்மறையான பார்வையைப் பகிர்ந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாகும், மேலும் உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் மற்றும் ஜனநாயக நாடுகளுடன் எங்களுடன் கூட்டு சேருவதன் மூலம் உறுதியான நன்மைகளைத் அவர்களே பார்ப்பார்கள்  என பிடன் கூறினார்.

ஓய்வூதிய நிதியம், தனியார் காப்பீட்டு நிதியம் போன்ற முதலீட்டாளர்களின் தனிப்பட்ட மூலதனத்துடன் அமெரிக்க அரசின் நிதியையும் இணைப்பதன் மூலம் அமெரிக்கா வழங்கும் 200 பில்லியன் டாலர்  ஈடுசெய்யப்படும் என பிடென் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டு டிசம்பரில் பட்டுப் பாதை திட்ட்த்திற்கு பதிலாக 300 பில்லியன் யூரோ மதிப்பிலான தனது சொந்த திட்டத்தை அறிவித்தது என்பது குறிப்பிட்த்தக்கது.

 ஜி-7 நாடுகளின் இந்த்த் திட்டம் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் விதமான உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி ஆதாரங்கள், பாதுகாப்பான தகவல் தொடர்பு, பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் திட்டங்கள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட நான்கு முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் நடந்து வருகின்றன என்று கூறிய அவர், அதில் ஒரு சில திட்டங்களைப் பற்றிக் கூறினார்.

ஒரு சிறிய மாடுலர் ரியாக்டர் (SMR) ஆலையை உருவாக்க ரூமேனிய நாட்டின் முயற்சிகளுக்கு ஆதரவாக 14 மில்லியன் டாலர். மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா வழியாக சிங்கப்பூரை பிரான்சுடன் இணைக்க கடலுக்கடியில் தொலைத்தொடர்பு கேபிளை உருவாக்க 600 மில்லியன் டாலர் ஒப்பந்தம்; மற்றும் கோட் டி இவோரியில் மருத்துவமனைகளைக் கட்ட 320 மில்லியன் டாலர் தனியார் மேம்பாட்டுத் திட்டம் போன்றவற்றைக் குறிப்பிட்டார்.

பொலிட்டிகோ போன்ற சில செய்தி நிறுவனங்கள் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மேற்கத்திய முதலீட்டுத் திட்டங்கள் ஏற்கனவே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது என்றும் அது போதிய பலனை தரப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளன.

 - ஜோஸ்