நீக்கப்படுவாரா சி.வி.சண்முகம்..பாமகவுக்கே பம்மிய அதிமுக. பாஜகவுக்கு சைலன்ட்டா இருப்பாங்களா..?

நீக்கப்படுவாரா சி.வி.சண்முகம்..பாமகவுக்கே பம்மிய அதிமுக. பாஜகவுக்கு சைலன்ட்டா இருப்பாங்களா..?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை கைப்பற்றியது. இதனால் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் சற்று அதிருப்தியடைந்தன. அதைத் தொடர்ந்து 'பாமக இல்லையென்றால் 20 இடங்களில்தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும்' என பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். 

அன்புமணி ராமதாஸின் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி "போளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கும், அதிகாரமும் உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் பாமக இல்லை என்றால் அதிமுக 20 தொகுதிகளில்கூட வெற்றி பெற்றிருக்காது என்று பாமகவினர் கூறிவருவது முறையல்ல, ஒவ்வொரு தேர்தலின் போதும், கூட்டணி வைப்பது, பின்னர் தேர்தலில் தோல்வியடைந்து விட்டால் மற்றவர்களை விமர்சிப்பது பாமகவின் வாடிக்கையாகிவிட்டது. பன்னீர்செல்வம் கையொப்பம் போட்டதால்தான் இன்று அன்புமணி ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார்" என பாமகவை கடுமையாக விமர்சித்தார். 

புகழேந்தியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையான நிலையில், புகழேந்தியை கண்டிக்கவேண்டும் என்று பாமக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பெங்களூர் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்டதற்கான காரணத்தை அதிமுக தலைமை கூறாவிட்டாலும் பாமகவை விமர்சித்த காரணத்தால் தான் அவர் நீக்கப்பட்டார் என்பது வெளிப்படையாக தெரிந்தது. 

இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம் "அதிமுக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் என்றுதான் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை. நாம்  பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை சந்தித்தோம். அவர்கள் கூட்டணியால், சிறுபான்மையினரின் ஓட்டுகளை இழந்து விட்டோம்" எனக் கூறி அரசியல் அரங்கை பரபரப்பாகியுள்ளார். 

இதற்கு பதிலளித்த பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன்,"கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசம், கோவா மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் பாஜகவிற்கு சிறுபான்மை மக்கள் வாக்களித்துள்ளனர்.

எங்கள் கட்சித் தொண்டர்கள்கூட தேர்தல் தோல்விக்கு அதிமுகதான் காரணம் என்று நினைக்கின்றனர். அதேபோல அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளைச் சொல்ல முடியும். இது அதிமுகவின் தலைமை முடிவா என்று பார்க்கவேண்டும். இதுகுறித்துப் பழனிசாமி, பன்னீர் செல்வம் கருத்துத் தெரிவிக்கும்போது பாஜக இதற்கு பதில் சொல்லும். பாஜகவுக்கு எல்லோரும் வாக்களிக்கிறார்கள்.

சிறுபான்மை மக்கள் வாழும் ஜம்மு - காஷ்மீரில் 25 எம்.பி.க்கள் வெற்றிபெற்றுள்ளனர். அரசியல் தெரிந்தவர்கள் இப்படிக் குற்றம் சாட்டமாட்டார்கள். இவர் தோற்றதற்கு பாஜகவைக் குற்றம் சாட்டுவதை ஏற்கமுடியாது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி குறித்துத் தேதி அறிவித்த பின்பு மத்திய, மாநிலத் தலைமை முடிவெடுக்கும்" என்று கே.டி.ராகவன் தெரிவித்தார். 

இப்படி இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொள்ள இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பெரிதாவதை உணர்ந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சி மீதும், பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி தொடர்பாக எவ்வித மாற்றுத் கருத்திற்கும் இடமில்லை என்று கூறி இந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

இந்நிலையில், பாமகவை விமர்சித்ததற்காக பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அதேபோல தற்போது எடப்பாடியின் ஆதரவாளர் என்று அறியப்படும் சி.வி. சண்முகமும் நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வெளிப்படையாக இந்த விவகாரத்தை பன்னீர்செல்வம் முடிந்து வைத்தாலும் கட்சிக்குள் இது பெரிய அளவில் வெடிக்கும் என்றும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று தவித்துக்கொண்டிருந்த பன்னீர்செல்வம் இந்த வாய்ப்பை தவறவிடமாட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.