காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு அரசின் திட்ட நடவடிக்கைக் குழு வில் மேற்குலகின் முகவரான எரிக் சோல்கைம் இடம்பெற்றுள்ளார்.
காலநிலை மாற்றம்
காலநிலை மாறுபாடு உலகளாவிய சிக்கலாக மாறி வரும் சூழலில் அதனைத் தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு காலநிலை மாற்றத்திற்கான திட்ட செயற்குழுவை அமைத்திருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் ஒற்றுமை நாடுகளின் சூழலியல் திட்டத்திற்கான தலைவரான எரிக் சொல்கைம் தமிழ்நாடு அரசின் குழுவில் இடம்பெற்றிருப்பது தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு ஏற்புடைய செயலாக கருத முடியவில்லை.
வளரும் நாடுகளுக்கு எதிரான கொள்கை
சோல்கைம் ஏற்கனவே வளர்ந்த நாடுகளுக்கான ஓ.ஈ.சி.டி(OECD), டி.ஏ.சி(DAC),போன்ற பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்கான கொள்கை வடிவமைப்பு நிறுவனங்களில் பணியாற்றியவர். இந்த அமைப்புகளில் உறுப்பு வகிக்கும் நாடுகள் பெரும்பான்மையானவை காலநிலை மாற்றத் தடுப்புக் கொள்கையில் வளரும் நாடுகளுக்கு எதிரான கொள்கை நிலைப்பாடு கொண்டவை. மேலும் பசுமை சந்தையை பெரும் மூலதன ஆற்றல்களின் கையில் ஒப்படைக்க முனைபவை.
வல்லரசுகளின் முகவர்
எரிக் சோல்கைம் அண்மையில் தமிழ்நாடு அரசுடன் நெருக்கம் காட்டுவதை அவருடைய சூழலியல் பதவிக்கானதாக மட்டும் பார்க்க முடியாது. ஆசியாவை குவிமயப்படுத்தி மேற்குலகம் மற்றும் அமெரிக்க வல்லரசுகள் தங்களது அரசியல் கூட்டாளிகளை உருவாக்குவதற்கான முகவாண்மை வேலைகளுக்கானதாகவும் பார்க்க வேண்டும். தமிழ்நாடு அந்த குவிமையத்தில் அமைந்திருப்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
எரிக் சோல்கைம் தமிழ்நாடு அரசின் திட்ட குழு ஒன்றில் இடம்பெறுவது தமிழ் உலகிற்கு அவ்வளவு உவப்பானதாக அமையாது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.
- குமரன்
(அரசியல் செயற்பாட்டாளர்)
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் கருத்து கட்டுரையாளருடையது. நிறுவனத்தின் கருத்தல்ல.