ஒரு எம்.எல்.ஏ ஆதரவு கூட இல்லை,..விரக்தியில் சசிகலாவை சந்திக்க  சென்ற ஓ.பி.எஸ்.! -ஹோட்டலில் சந்தித்து டீல் பேசிய இ.பி.எஸ்.! 

ஒரு எம்.எல்.ஏ ஆதரவு கூட இல்லை,..விரக்தியில் சசிகலாவை சந்திக்க  சென்ற ஓ.பி.எஸ்.! -ஹோட்டலில் சந்தித்து டீல் பேசிய இ.பி.எஸ்.! 

ஜெயலலிதா இருக்கும் போதே இரண்டு முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும் முதல்வராக்கப்பட்டார். ஆனால் சசிகலாவுடனான மோதல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்து மெரினா கடற்கரையில் தர்மயுத்தம் நடத்தினார். அவருக்கு ஆதரவாக சில எம்.பி. எம். எல்.ஏக்களும் திரண்டனர். இவர்கள் தனி அணியாக செயல்பட்டார்கள். அதைத் தொடர்ந்து சசிகலா சொத்துசேர்ப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல வேண்டி வந்ததால் எடப்பாடி பழனிசாமி திடீர் முதல்வரானார். மேலும் அதிமுகவும் இரண்டாக உடைந்தது.

அதன்பின் ஆர்.கே.நகர் இடைதேர்தல், தினகரனோடு மோதல், பாஜக தலையீடு என்று சென்று ஒருவழியாக சசிகலா குடும்பத்தினரை கழட்டிவிட்டு இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்தன. பன்னீர் செல்வமும் கட்சி ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் என இரட்டை பதவியில் அமர்ந்தார். ஆனால் அதன் பின் கட்சியும், ஆட்சியும் முழுக்க முழுக்க  எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தன்னை நம்பி வந்த எம். எல்.ஏக்களுக்கும் கட்சியினருக்கும் பன்னீர் செல்வம் ஏதும் செய்யாததால் அவர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பினர். 

இதன் தாக்கம் சட்டமன்ற தேர்தலில் எதிரொலித்தது. கட்சியில் எடப்பாடிக்கு அதிக ஆதரவு கிடைக்க அவரே முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்கு பிறகு அதிமுக எதிர்க்கட்சியான நிலையில், அதிக எம். எல்.ஏக்கள் ஆதரவால் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் எம். எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒரு எம். எல்.ஏ கூட  பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வேறு வழி இன்றி எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சி தலைவராக்க சம்மதித்த அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அவர் சமூகத்தை சேர்ந்த சசிகலாவை பகைத்துக் கொண்டதால் அவர் சமூக ஆதரவும் இல்லாமல் போனது. இதன் காரணமாகவும் கட்சியில் அதிகாரம் செலுத்தும் எடப்பாடி பழனிசாமியை கட்டுப்படுத்தவும்  பன்னீர் செல்வம் சசிகலாவோடு இணைந்து செயல்பட விரும்பியதாகவும், இது தொடர்பாக இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும், விரைவிலேயே சசிகலாவை கட்சிக்குள்  பன்னீர் செல்வம் கொண்டுவருவார் என்றும் கூறப்பட்டது.

இந்த தகவலை அறிந்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு முன் நட்சத்திர விடுதியில்  பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசி கட்சிக்குள் அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் தருவது போன்ற வாக்குறுதிகளை கூறி  பன்னீர் செல்வம் சசிகலா பக்கம் செல்வதை தடுத்துள்ளார் என்றும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.