முடக்கப்பட்ட ஆ. ராசாவின் 55 கோடி மதிப்பிலான சொத்துக்கள்?!!!

முடக்கப்பட்ட ஆ. ராசாவின் 55 கோடி மதிப்பிலான சொத்துக்கள்?!!!

சுற்றுச்சூழல் அனுமதிக்காக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ஆ.ராசா வாங்கிய லஞ்ச தொகையில் இந்த நிலம் வாங்கப்பட்டுள்ளது.  ஆ. ராசா 2004 முதல் 2007 வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார்.

ஆ.ராசா மீது சிபிஐ வழக்கு :

கடந்த 2015 ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் , மற்றும் தற்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஆ ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம் சுமத்தி, சிபிஐ அவர் மீது வழக்கு ஒன்றை பதிவு செய்தது.  அதில் ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராசாவின் உறவினர் பரமேஷ்குமார், அவரது நெருங்கிய கூட்டாளி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் சில தனியார் நிறுவனங்களையும் இணைத்து மொத்தமாக 16 பேர் மீது இந்தக் குற்றவழக்கு  பதிவுப்செய்யப்பட்டது.

சிபிஐ சோதனை:

இந்த வழக்கின் பின்னணியில், ஆ.ராசாவுக்கு சம்பந்தப்பட்ட  20 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. அதுமட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டிருந்த 16 பேரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நடைபெற்ற இந்த சோதனையானது, டெல்லி, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன.  குறிப்பாக, சென்னையில் 6 இடங்களில் நடைபெற்ற சிபிஐ சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ-யின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏழு வருடத்திற்கு பிறகு:

இந்நிலையில் ஆ ராசா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு மீதான விசாரணை கிட்டதட்ட ஏழு வருடத்துக்கு பின்பு முடிந்தது.  அதில் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ ராசா உள்ளிட்ட ஐந்து பேர் மீது சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் சுமார் 5.53 கோடி அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாகவும்  குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ தெரிவித்திருந்தது.  இதனிடையே இந்த குற்ற பத்திரிக்கைக்கு எதிராக ஆராசா தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகயிருந்தது.

பறிமுதல்:

இந்நிலையில் திமுக எம்பி ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகளை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளது.  பறிமுதல் செய்யப்பட்ட 45 ஏக்கர் சொத்தானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறையின் அறிக்கையின் படி சுற்றுச்சூழல் அனுமதிக்காக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ஆ.ராசா வாங்கிய லஞ்ச தொகையில் இந்த நிலம் வாங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆ.ராசா 2004 முதல் 2007 வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.  நீலகிரி மக்களவைத் தொகுதி எம்.பி.யான ராசா, 2ஜி அலைக்கற்றை வழக்கில் பணமோசடி விசாரணை தொடர்பாகவும் அமலாக்கத்துறையின் விசாரணையின் கீழ் உள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மீண்டும் மாஸ்க் அணியலாம்....பிரதமரின் கொரோனா அறிவுரைகள்!!!