தடுப்பூசி பற்றிய அரசின் அறிவிப்புகளால் குழம்பும் மக்கள்.! தீர்வு எப்போது என குமுறல்.!  

தடுப்பூசி பற்றிய அரசின் அறிவிப்புகளால் குழம்பும் மக்கள்.! தீர்வு எப்போது என குமுறல்.!  

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் அதிவேகமாக பரவிவருகிறது. அதைத் தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. அரசின் இந்த தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றாலும் பல ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கு அரசின் கவனக்குறைவே காரணம் என பொதுமக்கள் கூறுகிறார்கள்.

கொரோனாவின் முதல் அலை இந்தியாவை தாக்கியபோது அரசு தேவையான முன்னெடுப்புகளை எடுக்கவில்லை. அதனால் தான் மாஸ்க், சானிடைசர் போன்ற உபகரணங்களை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தது. இதன் காரணமாக கொரோனா ஆரம்ப காலத்தில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் மேற்கூறிய பொருள்களுக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டது.

ஆனால் இந்த பாதிப்பில் இருந்து அரசு எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது தடுப்பூசி விவகாரத்தில் வெட்டவெளிச்சமாகியது. கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட போதிலும் வணிக நோக்கங்களுக்காக ஏற்றுமதி செய்ய  ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தது. இதன் காரணமாக இரண்டாம் அலை இந்தியாவை தாக்கிய போது போதுமான தடுப்பூசிகள் அரசின் கையிருப்பில் இல்லை. இதன் விளைவை தற்போதும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். 

இந்தியாவில் தற்போது வரை கோவிசீல்டு ,கோவாக்ஸின் போன்ற தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களுக்கு பெரிய அளவில் ஆர்வம் இல்லை என்றாலும் தற்போது ஆர்வத்துடன் தடுப்பூசி போட முன்வருகின்றனர். ஆனால் இந்த தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. 

இதனிடையே மாநிலங்களுக்கு போதிய அளவு தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதில்லை என்று ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. டெல்லி, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இதை நேரடியாகவே தெரிவித்தும் விட்டன. ஆனால் போதிய தடுப்பூசிகள் கொடுத்து வருகிறோம் என்று ஒன்றிய அரசு சார்பில் சொல்லப்பட்டு வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே நடக்கும் இந்த வார்த்தை போரில் சிக்கி மக்களே பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். தடுப்பூசி இருக்கிறது என்று ஒரு அமைச்சரும், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது என்று ஒரு அமைச்சரும் கூறி வருகிறார்கள்

ஒரு நாளுக்கு இத்தனை தடுப்பூசிகள் தான் போடுவோம் என்று அரசு அறிவிக்காததால் தடுப்பூசி போட வரும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீண்ட வரிசையில் நின்றும் தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால் மக்கள் திரும்பி செல்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் இந்த நிலையே தொடர்கிறது. இதற்கு அரசின் சார்பில் எந்த தீர்வும் முன்வைக்கப்படவில்லை. 

இப்படி 18 க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்துவிட்டு தடுப்பூசி தீர்ந்துவிட்டது என்று சொல்வதற்கு பதில் முதலில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு அதன்பின் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு போடலாமே என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதன் மூலம் குழப்பமும், வீண் அலைச்சலும் தீர்க்கப்படும் என்று நினைக்கிறார்கள். பொதுமக்களின் இந்த கருத்தை அரசு கேட்டு இதற்கு தீர்வை அரசு அளிக்குமா என்பது காத்திருந்தால் தான் தெரியும்.