இலங்கை வந்த சீனக் கப்பல்... இந்திய அரசு அச்சப்படுவது ஏன்!

இலங்கை வந்த சீனக் கப்பல்... இந்திய அரசு அச்சப்படுவது ஏன்!

சர்ச்சைக்குறிய சீன கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!

சீன ஆய்வுக் கப்பல்

இந்தியா மற்றும் சீனா இடையே சர்ச்சையை ஏற்படுத்திய சீன விண்வெளி ஆய்வுக் கப்பல் யுவான் வாங்-5 இலங்கை  அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியின் பேரில் இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதிருப்தியில் இந்தியா

இந்தக் கப்பலின் வருகை குறித்து இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்தது. சர்ச்சைக்குரிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சீனக் கப்பலின் வருகையை எதிர்வரும் 10ஆம் தேதி  ஒத்திவைக்குமாறு சீன அதிகாரிகளிடம் இலங்கை வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும், இந்த கப்பல் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சகம் அதிகாரபூர்வ அனுமதி வழங்கியுள்ளதுடன், உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி வரை கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்திய அரசின் அச்சத்திற்கான காரணம்

யுவான் வாங்-5 கப்பல் இலங்கை வருவதையொட்டி தனது அதிருப்தியை வெளியிட்டிருந்த இந்திய அரசு, இந்த விண்வெளி ஆய்வுக் கப்பலை உளவுக் கப்பல் என கூறி வருகிறது. சீன கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ளதன் நோக்கமே இந்திய இராணுவ நிலைகளைப் பற்றிய உளவுத் தகவல்களை சேகரிப்பதற்குத் தான் என இந்தியத் தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் கப்பலின் வருகையால் இந்திய அரசு கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை சீனா விளக்கம்

 இந்தக் கப்பலின் வருகை குறித்து இலங்கை அமைச்சர் குணவர்தன செய்தியாளர்களிடம் "இதற்கு முன்பும் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து இலங்கைக்கு கப்பல்கள் வந்துள்ளன. இந்தக் கப்பல்கள் வர அனுமதித்துள்ளோம். அதேபோன்று சீனக் கப்பலையும் நிறுத்த அனுமதித்துள்ளோம்"எனக் கூறினார்.

அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகத்தை இயக்குவதற்கு 2017 ஆம் ஆண்டு 99 வருட குத்தகை ஒப்பந்தத்தில் சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் என்ற சீன நிறுவனம் கையெழுத்திட்டது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், சீன கப்பல் வேறு எந்த நாட்டிலும் தலையிடவில்லை."யுவான் வாங் 5 கடல்சார் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது ... எந்த நாட்டின் பாதுகாப்பு அல்லது பொருளாதார நலன்களைப் பாதிக்காது மற்றும் மூன்றாம் தரப்பினர் அதில் தலையிடக்கூடாது," என்று அவர் பெய்ஜிங்கில் இது குறித்து கூறினார்.