குழந்தைகளின் எதிர்காலம் வீணாவதை அரசு வேடிக்கை பார்க்கின்றதா? :ஆவின் விவகாரம்!

குழந்தைகளின் எதிர்காலம் வீணாவதை அரசு வேடிக்கை பார்க்கின்றதா? :ஆவின் விவகாரம்!

சென்னை: ஆவினில், 30க்கும்  மேற்பட்ட குழந்தை தொழிலார்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீப காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆவின் நிறுவனம் மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளது. சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில், ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக 30க்கும் மேற்பட்ட சிறார் தொழிலார்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 

சிறுவர்கள் ஐஸ் கிரீம் பேக்கிங் பிரிவில் பணியமர்த்தப்பட்டதாகவும், அது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, சிறார்கள் கடந்த இரண்டு ஆண்டுகள் பணியாற்றியதாகவும், அவர்களுக்கு உரிய ஊதியத்தை, சம்பத்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் வழங்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், நேற்று ஆவின் நிறுவனத்தின் நுழைவு வாயில் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், " ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்ற வாய்ப்பே இல்லை. அவ்வாறு, அவர்கள் பணியாற்றியது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இந்நிலையில், குழந்தை தொழிலாளர்கள் பிரச்னையில் ஒப்பந்ததாரரை காப்பாற்ற ஆவின் அதிகாரிகள் முயற்சிப்பதாக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும், குழந்தை தொழிலாளர்களை ஆவின் பால் பண்ணையில் பணியமர்த்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

இந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்," தி.மு.க ஆட்சியில், ஆவின் நிறுவனம் தான் சீரழிந்து வருகின்றது என்றால், ஆவினில் குழந்தை தொழிலார்களை பணியில் அமர்த்தி, குழந்தைகளின் எதிர்காலத்தை அரசே சீரழிப்பது, கண்டனத்திற்குரியது" என தெரிவித்துள்ளார். 

மேலும்," ஆவின் நிறுவனம் உட்பட அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் குழந்தை தொழிலார்களை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்த்து, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" எ ன்றும் தெரிவித்துள்ளார்.  

ஆவினில் பணியாற்றிய குழந்தை தொழிலார்களுக்கு, அவர்களின் இரண்டு மாத நிலுவை சம்பளத்தை வழங்கியும், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார்.

இதற்கு அடுத்ததாக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், "குத்தகை தொழிலாளர் முறையின் மனித உரிமை மீறல்களுக்கு, ஆவின் அத்துமீறல்களே சான்றாக உள்ளது" என குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை அடுத்த அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கடந்த சில மாதங்களாக குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு கடந்த இரு மாதங்களாக  ஊதியம் கூட வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், "அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகைத் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்" என்றும்  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிகழ்வு குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் சிறார் தொழிலார்கள் பணியில் அமர்த்தப்படுவது தடுக்கப்படும் எனவும் எதிர்பாக்கப்படுகிறது.