அடுத்தக்கட்ட ஆளுமைகள்!

தமிழ் சமூகத்தின் அடுத்தக்கட்ட ஆளுமைகளோடு மாலைமுரசு செய்திகள் ஊடகத்தின் உரையாடல்...

அடுத்தக்கட்ட ஆளுமைகள்!

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உள்ளது, நல்ல சமேரியன் மனநல காப்பகம். இதனை நடத்தி வருபவர்கள் கிளாட்வின் ஜோசப் -ஜெயரேவதி தம்பதியினர். இவர்களோடு இவர்களது மூன்று மகன்களும் ஒரு மகளும் இந்த சேவையில் பங்காற்றி வருகின்றனர். 

குடும்பத்தினராலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு தெருவோரம் அனாதைகளாக இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து அவர்களை தங்களது காப்பகத்ததில் வைத்து இவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இங்கு சிகிச்சை பெற்ற பலர் குணமடைந்து தற்போது தங்கள் வீடுகளுக்கே திரும்பிவிட்டனர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையோரம் யாராவது மனநலம் பாதிக்கப்பட்டவர் சுற்றித்திரிந்தால் காவல்துறை முதலில் அழைப்பது இவர்களைதான். இந்த வாரம் இவர்களோடு சில கேள்விகள்.  

1.நீங்கள் எவ்வளவு காலமாக இந்த மனநல காப்பகத்தை நடத்தி வருகிறீர்கள்? 

நாங்கள் சுமார் 15 வருடங்களுக்கு முன்பிருந்தே தெருவோரம் வசிக்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சேவைகளை செய்து வருகிறோம். ஆனால் அப்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்து பாதுகாக்கும் அளவிற்கு எங்களிடம் போதிய வசதியில்லை.  கடந்த 2014 ஆம் ஆண்டு 'நல்ல சமேரியன் மனநல காப்பக'த்தை தொடங்க அரசில் பதிவு செய்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்த கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, இந்த காப்பகத்தை நடத்தி வருகிறோம்.


2.உங்களது இந்த முயற்சிக்கு சமூகத்தில் போதுமான ஆதரவு கிடைக்கிறதா?

சமூகத்தில் ஆதரவு கிடைக்கின்றது. ஆனால் போதுமானதாக இல்லை. சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் தங்களது பிறந்தநாள் மற்றும் திருமணநாள் போன்ற நாட்களில் இங்கு வந்து எங்கள் இல்லத்தை சேர்ந்தவர்களோடு இணைந்து கொண்டாடி செல்கின்றனர். ஆனால் இது போன்ற ஒரு காப்பகத்தை நடத்துவதற்கு இந்த ஆதரவு போதமானதாக இல்லை. 

3.மனநலம் பாதிக்கப்பட்டு தெருவோரம் இருக்கும் நபர்களை மீட்கும் போது நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன?

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாலை ஓரங்களிலோ அல்லது பேருந்து நிலையங்களிலோ இருந்தால் பொதுமக்கள் எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். சில சமயங்களில் காவல் நிலையத்திருந்தும் அழைப்புகள் வரும். இப்படி தகவல் அறிந்து நாங்கள் அங்கு செல்லும் போது, அங்கு இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் அழைத்த உடனே எங்களுடன் வந்துவிடுவதில்லை. இவர்கள் சாதாரண நபர்களை விட மிகவும் கோபமாக இருப்பார்கள். கையில் இருக்கும் ஆயுதங்களால் தாக்குவார்கள். மோசமான வார்த்தைகளால் திட்டுவார்கள். அடிப்பார்கள். நகங்களால் கீற முயற்சிப்பார்கள். கடிக்க வருவார்கள் தங்களை அறியாமல் மிகக் கோபமாக நடந்து கொள்வார்கள். இவற்றையெல்லாம் கடந்து தான் நாங்கள் அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வருகின்றோம். இங்கு வந்து அவர்களுக்கு மனநல ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கப்பட்டு சில காலத்திற்கு பின்னரே அவர்கள் அமைதியைடைவார்கள்.

4.உங்களது காப்பகங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர்களது குடும்பத்தினர் வந்து சந்திக்கிறார்களா?

நாங்கள் பெரும்பாலும் தெருவோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிபவர்களை எடுப்பதனால் அவர்களை பார்க்க யாரும் (குடும்பத்தினர்) வருவதில்லை. ஏனென்றால் குடும்பத்தினர்களுக்கு அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது. மனநலம் பாதிக்கபட்டவர்களுக்கும் அவர்களை குடும்பத்தை பற்றிய தகவல் நினைவிருக்காது.

5.குடும்பத்தில் எவருக்கேனும் மனநல பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை அக்குடும்பத்தினர் எப்படி கையாள வேண்டும்?

முதலில் மனநலம் பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அதிலிருந்து விடுபட மனநல மருத்துவரிடம் தகுந்த சிகிச்சையையும், அறிவுரையையும் பெறவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மீது கோபம் கொள்வோ கடுமை காட்டவோ கூடாது. குறிப்பாக அவர்களை கட்டி வைப்பதோ தனிமையில் அடைத்து வைப்பதோ கூடாது.

மருத்துவர் கொடுக்கும் ஆலோசனைகளை பின்பற்றுகிறார்களா?  மருந்துகளை சரியாக உட்கொள்கிறார்களா? என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ளவில்லை எனில் மனநல மருத்துவமனை அல்லது காப்பகங்களில் வைத்து பராமரிக்க வேண்டும். அவர்களை உதாசீனப்படுத்துவதோ, கோபப்படுத்துவதோ அடிக்கவோ கூடாது. அவர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களை சிறு குழந்தையைப் போன்று அவர்கள் வழியிலேயே கையாள வேண்டும்.

6.மனநல பாதிப்பிலிருந்து குணமடைந்த நோயாளிகளை அவர்களது குடும்பத்தினர் மீண்டும் ஏற்றுக்கொள்கிறார்களா?

குடும்பங்களில் சிலர் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். சிலர் ஒதுக்கப்படுகிறார்கள். எங்கள் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தொடக்கத்தில் இங்கு வரும்போது அவர்களது குடும்பத்தை பற்றி எந்த தகவலும் தெரியாது. சில காலங்கள் கடந்து அவர்களுக்கு மனநிலை தெளிந்த பின்னரே அவர்களை பற்றிய தகவல்கள் அவர்களுக்கு நினைவிற்கு வரும். அப்போது அவர்கள் தரும் தகவல்களை கொண்டு அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொள்வோம். அப்படி முடியவில்லை எனில் வாட்சப் போன்ற சமூக வலை தளங்களில் அவர்களது படம் மற்றும் முகவரியை பதிவிட்டு செய்திகளை பரப்புவோம். அப்போது அதனை பார்க்கும் அவர்களது உறவினர்கள் எங்களை தொடர்பு கொண்டு அவர்களை வந்து அழைத்து செல்கின்றனர். சமீபத்தில் கூட சேலத்தை சேர்ந்த ஒருவரை பற்றிய தகவலை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தோம். அந்த நபர் 7 ஆண்டுகளுக்கு முன்பே மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர். அதைக்கண்ட அவரது தந்தையும் சகோதரரும் உடனடியாக கிளம்பி இருசக்கர வாகனத்திலேயே இங்கு வந்துவிட்டனர். இப்போது அந்த நபர், அவரது குடும்பத்தினரோடு நலமாக உள்ளார்.  கடந்த இரண்டு வருடத்தில் மனநலம் குணமடைந்த 48 பேரை இதுபோல அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளோம்.

ஆனால் ஒரு சிலரை அவர்களது குடும்பங்கள் ஏற்பதில்லை. அப்படி குடும்பங்களால் ஒதுக்கப்படுகிறவர்கள் இறுதி நாள் வரை எங்கள் காப்பகத்தில் எங்களுடன் இருக்கிறார்கள். அவர்களையும் நாங்கள் பராமரிக்கிறோம். இப்படி மனநலம் குணமடைந்தும் வீட்டிற்கு செல்லாமல் இங்கு 12 பேர் உள்ளனர்.

7.மனநல பாதிப்பிலிருந்து விடுபட்டவர்களின் மறுவாழ்வுக்கான தேவைகளாக என்னென்ன இருக்கின்றன?

மனநலம் பாதிக்கப்பட்டு குணமானவர்களுக்கு தகுந்த மன தைரியம் கொடுக்கக்கூடிய ஆதரவான நபர்கள் இருக்க வேண்டியது முதன்மையான தேவை. சிலர் படித்திருப்பார்கள், சிலர் நல்ல வேலையில் இருந்திருப்பார்கள். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட காலங்களில் இவற்றையெல்லாம் விட்டு சிறிய உலகில் வாழ்ந்து வருவார்கள். இந்நிலையில் அதிலிருந்து மீண்ட அவர்களுக்கு தங்களது வேலைகளில் பழைய நிலையை அடைய சில காலம் பிடிக்கலாம். அதுவரை அவர்களது குடும்பத்தினர் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

ஒரு சிறு தொழிலோ அல்லது வேலைவாய்ப்போ ஏற்படுத்திக் கொடுப்பது சிறந்தது. அவர்களையும் நம்மைப் போல் ஒரு சராசரி நபராக கருதி சமமாக நடத்த வேண்டும். அவர்களின் தேவையெல்லாம் தகுந்த சிகிச்சையும், ஆதரவான மனநல ஆலோசனையும், அன்புடன் கூடிய பராமரிப்பும்  கொஞ்சம் நிதி உதவியும் தான்.

8.மனநல பாதிப்பு உண்டாவதற்கான காரணங்கள் என்னென்ன?

குடும்பத்தினரின் இறப்பு, விபத்துகளால் ஏற்படும் அதிர்ச்சி, தேர்வு, தொழில், காதல் ஆகியவற்றில் அடையும் தோல்வி உள்ளிட்டவை மன நிலை பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களாக இருந்து வருகின்றன. ஆனால் சமீப காலத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் மனநிலை பாதிப்புகள் அதிகமாக இருந்து வருகின்றன. கஞ்சா மது புகையிலை மற்றம் பல போதை பொருட்களை பயன்படுத்துவதால் தற்கால இளைஞர்கள் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

சில இளைஞர்கள் சினிமா மோகத்தால் கூட மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களிடம் நடிகர் விஜயின் பெண் ரசிகர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் அவரை நாங்கள் சாலையோரம் கண்டெடுத்தோம். சுமார் 32 வயதான அவர், விஜய்தான் தன் கணவர் என்றும், விஜய் வந்தால்தான் சாப்பிடுவேன் தூங்குவேன் என்றும் அடம் பிடித்து வருகிறார்.


9.உங்களது முயற்சிகளுக்கு அரசு தரப்பில் ஏதேனும் உதவிகள் அளிக்கப்படுகிறதா?

அரசு தரப்பிலிருந்து நாங்கள் இங்கு பராமரிக்கும் நபர் ஒருவருக்கு 1200 ரூபாய் பராமரிப்பு தொகை வழங்கப்படுகிறது. ஆனால் அது 50 நபர்களுக்கு மட்டும்தான். இங்கு தற்போது 80 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாங்கள் குடும்பத்தோடு இந்த இல்லத்தில் சேவையாற்றி வந்தாலும். இங்கு பயிற்றுஞர்கள், செவிலியர்கள் போன்றோருக்கான தேவை இருக்கிறது. இவர்களை சம்பளத்திற்கு பணியமர்த்திதான் நாங்கள் காப்பகத்தை நடத்தி வருகிறோம். இவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் 4000, 5000 ரூபாய் சம்பளம் போதுமானதாக இல்லை. அவர்களுக்கு அரசு வழங்கும் சம்பளத்தோடு உள்ளடக்கி 15000 சம்பளம் வழங்கி வருகிறோம். இங்கு சமூக சேவைதுறைக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பதே கடினமான ஒன்றாக உள்ள நிலையும் உள்ளது. நாங்கள் தற்போது இந்த காப்பகத்தை வாடகை கட்டிடத்தில்தான் நடத்தி வருகிறோம். எங்களுக்கு அரசு தரப்பில் இடமும் கட்டிடமும் வழங்கப்பட்டால் இந்த சேவையை தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்தி செய்ய முடியும்.

10.மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை இந்த சமூகம் சரியாக கையாள்கிறதா? 

சமூகம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கையாள்வதே இல்லை. ஒதுக்கித்தான் வைக்கிறது. அவர்களை கண்டு அஞ்சுகிறது. அவர்களை சக மனிதர்களாக பார்க்க மறுக்கிறது. சாலையோரம் மனநிலை பாதிக்கபட்டவர்கள் எவரையேனும் கண்டால் அவர்கள் அருகில் கூட செல்வதில்லை. மனநல பாதிப்பில்லாமல் பிற காரணங்களால் குடும்பத்தினால் கைவிடப்பட்டு வீதிக்கு வந்தவர்கள் கூட தனக்கு பசி என்று எடுத்தால் யாரிடமாவது உதவி கேட்கலாம். அவர்களுக்கு இரக்க குணம் உள்ளவர்கள் உதவுவார்கள். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையை போன்றவர்கள். அவர்களுக்கு, அவர்களது உணர்ச்சியை சரியாக வெளிபடுத்த தெரியாது. பசித்தால் கூட அதனை சொல்லத் தெரியாது. சிலர் குப்பைத் தொட்டியில் கிடக்கும் உணவுகளை கூட உண்பர். ஒரு சிலர் கடைகளில் இருக்கும் உணவை சில நேரம் எடுத்து உண்பர் அவர்களை திருடர்களாக பாவித்து தாக்கும் சம்பவங்களும் இங்கு நடந்தேறுகின்றன. உண்மையில் மனநலம் பாதிக்கபட்டவர்கள் அனைவரும் சமூகத்தின் குழந்தைகள் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வரவேண்டும் அப்போதுதான் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சரியாக நடத்தப்படுவார்கள்.

நேர்காணல் -ச.பிரபாகரன்.