அதிமுகவின் வாக்கு வங்கிக்காக பாஜக மௌனமா? 

அதிமுகவின் வாக்கு வங்கிக்காக பாஜக மௌனமா? 

அதிரடியாக இபிஎஸ் அரியணை ஏறியது முதல். அதிமுக தலைமைக்கழகத்தை ஓபிஎஸ் கைப்பற்றியது வரை அதிமுக உட்கட்சி விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதில், ஓபிஎஸ் தர்ம யுத்தம் செய்த போதும், அதிமுகவில் அணிகள் பிரிந்து இருந்த போதும் சரி, அதன் பின்னணியில் பாஜக இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால், தற்போதைய அதிமுக உட்கட்சி விவகாரங்களையும் இபிஎஸ் ஓபிஎஸ் மோதலையும் கவனிக்கும் போது தமிழ்நாடு மக்களுக்கு இயல்பாக தோன்றும் விஷயம் பாஜக யாருக்கு சாதகமாக இருக்கிறது. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை தான் முதன்மை கேள்வியாக எழுந்துள்ளது.


எந்த பக்கமும் சாயாத பாஜக: 


தேசிய அளவில் கூட்டணியில் பாஜக உடன் அதிமுக கூட்டணியில் உள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை  பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருந்தார். குறிப்பாக, கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில், லேடியா மோடியா எனக்கேட்டு, மோடி அலை தமிழ்நாட்டில் நுழையாமல் தடுத்தார். அவர் மறைவுக்கு பிறகு அதிமுக – பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி, மாநில அளவில் இல்லை என்றாலும் அவர்கள் கூறுவது போல் தேசிய அளவில் மட்டுமே கூட்டணி என்ற நிலையில் உள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு, அவர் வகித்து  வந்த பொறுப்பை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இடையே உள்ள போட்டியில், பாஜக எந்த தலையீடும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.  


அண்ணாமலையின் வாழ்த்து:


அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் பொறுப்பேற்றதும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். ஆனால், இந்த வாழ்த்தை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாஜகவும் அண்ணாமலையும் ஈபிஎஸ்க்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்விக்கும் அதே வேளையில் ஓபிஎஸ்ஸையும் ஓரங்கட்டமால் நம்பிக்கை அளிப்பது போல் உள்ளது பாஜகவின் நடவடிக்கைகள்.  
நடுநிலையில் பாஜக: 


அதிமுகவில் ஒற்றை தலைமை கொள்கை  வலுப்பெற்று, ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டு ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டது வரை பாஜக நடுநிலையாகவே இருந்து வருகிறது.

குடியரசு தலைவராக திரௌபதி முர்மு மனு தாக்கல் செய்த போது ஓபிஎஸ் உடன் இருந்தார்.  அப்போது பேசிய முர்மு உள்கட்சி பூசல்களை கட்சிக்குள்ளேயே தீர்வுக் காண வேண்டும் என்று கூறினார்.  கட்சி அமைப்பு ஈபிஎஸ்க்கு பின் இருப்பதை உணர்ந்ததாலும் குடியரசு மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்  அருகில் வர இருப்பதாலும் பாஜக அமைதி காப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜக அமைதியாக அனைத்தையும் கவனித்து கொண்டு இருக்கிறது என மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர். மேலும் ஓபிஎஸ் நிச்சயமாக அவருடைய வெளியேற்றம் தொடர்பாக நீதிமன்றம் செல்வார் எனவும் பொதுத்தேர்தல் நடைபெற இரண்டு ஆண்டுகள் இருப்பதால் பாஜக அமைதியாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். 


எழுச்சி வீழ்ச்சிக்காக பாஜக காத்திருப்பு: 


அதிமுகவில் உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதால் இதில் யார் வீழ்ச்சி பெறுவார்கள், யார் எழுச்சி பெறுவார்கள் என்பதை கவனிப்பது சற்று சிரமமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பாஜக பொறுமையாக காத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், இபிஎஸ் படகை அசைத்து பார்க்காத அதே வேளையில்  ஓபிஎஸ் படகுடனும் தொடர்ந்து பயணிப்பார்கள் எனவும் பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்.


அதிமுகவின் வாக்கு வங்கிக்காக காத்திருக்கும் பாஜக:

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்ஸை தனிப்பட்ட முறையில் ஆதரிக்க பாஜகவிற்கு விருப்பம் இல்லை எனவும் அவர்களின் ஒரே நோக்கம் அதிமுகவின் வாக்கு வங்கி மட்டுமே எனவும் சிலர் கூறியுள்ளனர்.  அதிமுக பலவீனமடைந்தால் திமுகவின் அதிருப்தி வாக்குகள் பாஜகவிற்கு கிடைக்கும் என அவர்கள் எண்ணுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.


தமிழகத்தில் தற்போது பாஜக வலுவாக வளர்ந்து வருவதாக தெரிகிறது. 2021 தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாஜகவை திமுகவின் வலுவான எதிக்கட்சியாக மாற்றும் முழு முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார். 2024 தேர்தலில் குறைந்தப்பட்சம் 25 தொகுதிகளை கைப்பற்றுவதை இலக்காக கொண்டு செயல்படுவதாக கூறப்படுகிறது.   இதனால், இந்த இடத்தில், திமுக எதிர்ப்பில் பாஜக உறுதியாக இருந்தால், அதிமுக பிளவால் ஏற்படும் அதிமுக தொண்டர்களின் அதிருப்தி பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. எனவே, அதிமுகவின் வாக்கு வங்கியைக் குறிவைத்து பாஜக காய்களை நகர்த்துவதால், இபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் பாஜக மௌனமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.