டீக்கடையில் தினக்கூலியாக வேலை செய்யும் தந்தை... விஞ்ஞானி ஆக நினைக்கும் மகள்! ஏழை மாணவியின் கனவு நனவாகுமா...?

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த, ஏழை மாணவி ஒருவர், விஞ்ஞான கல்வியின் மீது கொண்ட ஆர்வதால், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு, நியூயார்க்கில் உள்ள இ.எப். அகாடமியில் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆனால், 70 லட்சம் ரூபாய் கட்டணம் செலத்த வேண்டும் என்பதால், மத்திய, மாநில அரசுகளிடம் உதவி கேட்டு காத்திருக்கிறார். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

டீக்கடையில் தினக்கூலியாக வேலை செய்யும் தந்தை... விஞ்ஞானி ஆக நினைக்கும் மகள்! ஏழை மாணவியின் கனவு நனவாகுமா...?

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர்  அகஸ்தியர்பட்டியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக தினக்கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஸ்ருதி என்ற 15 வயது மகளும், பிரபா சாண்டர் என்ற 12 வயது மகனும் உள்ளனர்.  இவருடைய மூத்த மகள் ஸ்ருதி வீ.கே.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயதில் இருந்தே விஞ்ஞானம் மற்றும் அறிவியலில் மீது அதிக ஆர்வம் கொண்ட ஸ்ருதி, பள்ளி பாடத்திட்டங்கள் தவிர்த்து விஞ்ஞானம் மற்றும் அறிவியல் தொடர்பான பல்வேறு புத்தகங்களை படித்து வருகிறார். அதன் விளைவாக ஸ்ருதி, மூன் வாட்டர், ராக்கெட் கேஸ், சவுத் எர்த் என சுமார் 10 -க்கும் மேற்பட்ட பார்முலாவை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி இவற்றை தனது பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் நாசா விஞ்ஞானிகளிடம் காண்பித்து பாராட்டுகளையும் பெற்றுள்ளாராம் இந்த இளம் விஞ்ஞானி. மேலும், விஞ்ஞானி ஆக வேண்டும்  என்ற கனவில், இணையதளம் மற்றும் தெரிந்தவர்கள் மூலம் விசாரித்ததில்,  உலகிலேயே சிறந்த, விஞ்ஞான ஆராய்ச்சி கல்வி நிறுவனமாக விளங்குவது,  நியூயார்க்கில் உள்ள இ.எப். அகாடமி என்பது தெரியவந்துள்ளது. 

இதனால், இந்த இ.எப். அகாடமியில் படிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு அதற்கான, தேர்வு எழுதி, நேர்காணல்களிலும் கலந்து கொண்டு, அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், தற்போது, ஸ்ருதிக்கு, இ.எப். அகாடமியில் நான் 11 -ம் வகுப்பு, இயற்பியல் பிரிவில் படிக்க இடம் கிடைத்துள்ளது. 

இதனால் ஸ்ருதி மட்டுமின்றி,  அவரது குடும்பமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இந்த அகாடமியில் சேர, ஜூலை 4-ம் தேதிக்குள் ஓராண்டு கல்விக் கட்டணமான, 70 லட்சம் ரூபாய் பணத்தை கட்ட வேண்டும். எனவே தனது கனவு நிறைவேற மத்திய, மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மாணவி ஸ்ருதி கோரிக்கை விடுக்கிறார். 

டீக்கடையில் தினக் கூலியாக வேலை செய்து வரும் தன்னால், தனது மகளின் கனவை நனவாக்க முடியவில்லை என்று தனது இயலாமையை கூறும் தந்தை, தனது வருமானம் முழுவதையும் தனது பிள்ளைகளின் படிப்பிற்காகவே செலவழித்து வருவதாக கூறுகிறார். ஆனால், நியூயார்க்கில் படிக்க  வாய்ப்புக் கிடைத்தும் வசதி இல்லாததால், தனது மகளின் கனவை நனவாக்க அரசு உதவி செய்ய வேண்டும் என தந்தை கோரிக்கை விடுக்கிறார்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், தான் ஆசைப்பட்டதை அடைய இந்த மாணவி எடுத்துக் கொண்ட முயற்சிகள் நம்மை வியக்க வைத்தாலும், இவளின் கனவை நனவாக்குவது, அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது. முயற்சி எடுக்குமா தமிழக அரசு பொறுத்திருந்து பார்ப்போம்...