ஈவிகேஎஸ் இளங்கோவன் வருகை....பதவி இழக்கிறாரா செல்வ பெருந்தகை?

ஈவிகேஎஸ் இளங்கோவன் வருகை....பதவி இழக்கிறாரா செல்வ பெருந்தகை?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் தாக்கத்தால் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற குழுத்தலைவர் யார்? என்பது குறித்த பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஈரோடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ்கே மீண்டும் அத்தொகுதியை ஒதுக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று காங்கிரஸின் சட்டமன்ற எம்.எல்.ஏவாக இருந்த திருமகன்  ஈ.வெ.ரா மறைவையொட்டி, தேர்தல் ஆணையம்  அத்தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது.  யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற குளறுபடிகளுக்கு மத்தியில் மீண்டும் அத்தொகுதியை காங்கிரஸிக்கே வழங்கியது திமுக. மறைந்த திருமகன் ஈ.வெ.ரா-வின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது.

பொதுவாகவே, ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் என்றாலே, அதில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்ற எழுதப்படாத வரலாறு உண்டு. மேலும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால், தனது ஒட்டுமொத்த அமைச்சரவையையும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அனுப்பி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  90 சதவீதம் வெற்றி வாய்ப்பு ஆளும் கட்சிக்கு தான் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதியாகியுள்ளதாகும் பேசப்பட்டு வருகிறது.  1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன் முறையாக ஈரோடு சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல் வாய்ப்பிலேயே வெற்றி பெற்றார். அதன்பிறகு தொடர்ந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வந்த அவர், காங்கிரஸ் ஆட்சியில் மத்திய இணை அமைச்சராகவும், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர், தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயர்ந்த பதவிகளை வகித்து வந்தவர். இந்நிலையில் தற்போது மகன் மறைவையொட்டி, சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

தற்போது சட்டமன்ற உறுப்பினராக ஈவிகேஎஸ் வெற்றி பெறும் பட்சத்தில், அவரை காங்கிரஸ் கட்சி வெறும் சட்டமன்ற உறுப்பினராக மட்டும் இல்லாமல், காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் பதவியும் வழங்கவுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. முக்கிய பதவிகளில் அமர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் ஈவிகேஎஸ்க்கு குழுத்தலைவர் பொறுப்பை அளித்தால், ஏற்கனவே அந்த பொறுப்பில் உள்ள செல்வ பெருந்தகையின் பதவியிலிருந்து பறிபோகவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 18 எம்.எல்.ஏக்கள் இருக்கும் நிலையில், அதில் 13 பேர் புதிய முகங்கள் என்பதால் சீனியர் என்ற அடிப்படையில் கடந்த முறை செல்வ பெருந்தகை தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஆனால், தற்போது ஈவிகேஎஸ் வெற்றி பெற்றால் காங்கிரஸின் மூத்த தலைவர், மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வகித்தவர் என்ற அடிப்படையில் சட்டமன்ற குழுத்தலைவர் பதவி ஈவிகேஎஸ்க்கு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்களிடையே பேசப்படுகிறது. மேலும் ஈவிகேஎஸ் மூத்த தலைவர் என்பதால் தற்போதுள்ள குழுதலைவர் செல்வபெருந்தகை இதற்கு எந்த ஆச்சயபனையும் தெரிவிக்கமாட்டார் என்பதும் குறிப்பிடதக்கது. ஆனால் இவைகள் எல்லாம் ஈவிகேஎஸ் வெற்றிபெறும் பட்சத்திலே.