களத்தில் தாக்குப் பிடிப்பாரா பி.டி.ஆர்...!

களத்தில் தாக்குப் பிடிப்பாரா பி.டி.ஆர்...!

2016 சட்டமன்ற தேர்லில் நேரடி களத்தில் இறங்கிய திமுக முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகனான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.

திமுக ஆரம்பம் முதலே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தொண்டர்களைக் கட்டமைக்க, வழிநடத்த வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை  உருவாக்கியது. அந்த வகையில் வீரபாண்டி ஆறுமுகம், ஆற்காடு வீராச்சாமி, மதுரை முத்து, தங்க பாண்டியன், தர்மலிங்கம், சுப்பு, சைதை கிட்டு, தா. கிருஷ்ணன், காவேரி மணியம், வைகோ, துரைமுருகன் என எண்ணற்ற ஆளுமைகளை உருவாக்கியதே இன்றளவும் அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் மதுரை அரசியல் களம் என்பது சற்று அபாயகரமானதும் கூட, 2000 காலகட்டத்தில் தென்மாவட்டங்களின் அதிகார மையாக தனிப்பெரும் தலைமையாக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.  பின் அரசியலிலிருந்து அவர் முழுவதுமாக ஒதுங்கினார்.

அதன்பின், திமுக ஆட்சியில் இல்லாத அதாவது 2011 முதல் 2016 வரை மதுரை திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி மதுரை மத்திய தொகுதியை 5 வருடங்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், திடீரென வந்த  பி.டி.ஆர் தியாகராஜனுக்காக தனது மத்திய தொகுதியை 2016 தேர்தலில் விட்டுக்கொடுத்தார் கோ.தளபதி. இதனால் குறிப்பிட்ட சமூகம் அதிகம் வசிக்கும் மதுரை மேற்கு தொகுதி தளபதிக்கு வழங்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கு அது சாதகமாக அமைந்து விட்டது. இதனால் மேற்கு தொகுதியில் தளபதி தோல்வி, மத்திய தொகுதியில் பழனிவேல் தியாகராஜன் சுலபமான வெற்றி. இங்குதான் ஆரம்பமானது யுத்தம் என்று கூடச் சொல்லலாம்.

சட்டமன்ற உறுப்பினரான பின் சென்னை மற்றும் சட்டமன்றம் உள்ளிட்ட பணிகளைக் கவனித்து வந்த பி.டி.ஆருக்கு மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அறிவுசார்ந்த தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் சாதித்தவருக்குக்  கள அரசியல் தெரியவில்லை. தொண்டர்கள்-தொகுதி மக்களின் சுப, துக்க நிகழ்வுகளில் எதிலும் கலந்து கொள்ளாதது கட்சியினர் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், அதுவே அவருக்குப் பெரிய மைனஸ்ஸாகவும் அமைந்தது. 2021 ஆம் ஆண்டு வரை பிரச்சனைகள் பெரிதாக வெளியே தெரியவில்லை. ஆட்சியைப் பிடித்த பிறகு அமைச்சர் பொறுப்பு வழங்கியது,  நீண்ட கால உறுப்பினரும் மாவட்டச் செயலாளருமான கோ.தளபதிக்குச் சற்று மனக்கசப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் 2006 ஆம் ஆண்டு திமுக அமைச்சரவை பட்டியலில் இருந்தவர் தளபதி, தொகுதியில் வெற்றி பெறாததால்  அப்போது அவரது அமைச்சர் வாய்ப்பு பறிபோனது. மாவட்டத்தில் நகர் மற்றும் புறநகருக்கு ஒரு அமைச்சர் என்பதால், புறநகரில் பி.மூர்த்தி தேர்வானார். நகரில் பிடிஆருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இத்தனைக்கும் மு.க.அழகிரியிடம் இருந்து முதலில் பிரிந்து வந்து மு.க.ஸ்டாலின் பக்கம் சென்றவர் தளபதி. 

அமைச்சர் பொறுப்பிலிருந்த பி.டி.ஆரின் தகவல் தொழில்நுட்ப மாநிலச் செயலாளர் பதவியை டி.ஆர்.பி.ராஜாவுக்கு வழங்கப்பட்ட போது கட்சிக்குள் பிடிஆர் ஓரங்கட்டப்படுகிறாரா என்று அரசல் புரசலாக பேச்சு அடிபட்ட நிலையில், நிதியமைச்சர் பொறுப்பு மற்றும் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இரண்டையும் நிர்வகிக்க முடியவில்லை என்று தாமாகவே திமுக தலைவரிடம் தெரிவித்ததாகவும் அதனால் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மூத்த அமைச்சர்கள் தங்கள் துறைக்கான நிதியைப் பெறுவதில் பிடிஆரிடம் இருந்து கேட்டு பெறுவதில் நிறைய சிக்கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு  முன்னாள் அமைச்சரும் திமுகவின் மூத்த உறுப்பினருமான பொன்.முத்துராமலிங்கம் மருமகள் விஜயமெளசுமியும், தங்கம் தென்னரசு உறவினரான பொம்முதேவன் மகள் ரோகிணி, அமைச்சர் ராஜகண்ணப்பனின் உறவினரான வாசுகி சசிக்குமார், முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் மகள் விஜயலெட்சுமி, மாவட்ட செயலாளர் கோ.தளபதி உறவினரான இந்திராகாந்தி உள்ளிட்டோர் ரேசில் இருந்த நிலையில் பிடிஆர் தனது ஆதரவாளரான பொன்.வசந்த் மனைவி இந்திராணிக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது. மதுரை அரசியலை கையில் எடுத்தார் பிடிஆர் என்றெல்லாம் பேசப்பட்டது. மேலும் மேயர் இந்திராணி கட்சியினரிடையே அவ்வப்போது மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் கடந்த வாரம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக குழு தலைவர் ஜெயராமன் தலைமையில் மேயருக்கு எதிராக போர் கொடி தூக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர் தேர்விலும் மதுரை மாவட்ட நகர் மாவட்டச் செயலாளராகத் தனது ஆதரவாளரான அதலை செந்திலை பிடிஆர் முன்னிறுத்தினார். 

திமுகவைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளர் பதவி என்பது மாவட்ட ஆட்சியருக்குச் சமமான பதவியாகப் பார்க்கப்படுகிறது. கோ.தளபதியின் மாவட்டச் செயலாளர் பறிபோகும் சூழல் இருந்த நிலையில் மதுரை தெற்கு மற்றும் மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர்களான மூர்த்தி மற்றும் மணிமாறன் தளபதிக்கு ஆதரவு தெரிவித்தனர். பிரிந்திருந்த மூவரும் இப்பிரச்சனையில் ஒன்றினைந்தனர்.  கள அரசியலில் பழம் திண்று கொட்டை போட்டு  வட்டம், ஊராட்சி என்று படிப்படியாக வந்த கட்சியினரிடம் தனது Strategy எடுபடவில்லை. ஒரு பக்கம் மூத்த அமைச்சர்கள், ஒரு பக்கம மாவட்ட அரசியல் போதாக்குறைக்கு தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக வெளியீடும் ஆடியோ என்று பெரும் மன உலைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என்றே கூறலாம்.