பாஜகவின் பிம்பங்களை உடைத்து சவால்களை சாதனைகளாக மாற்றுவாரா அசோக் கெலாட்!!!

பாஜகவின் பிம்பங்களை உடைத்து சவால்களை சாதனைகளாக மாற்றுவாரா அசோக் கெலாட்!!!

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராகயிருந்த ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டுத் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து 2017ஆம் ஆண்டிற்குப் பின்னர் சோனியா காந்தி மீண்டும் 2019ல் காங்கிரஸ் கட்சியின் தேசிய இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உறுதியான ராகுல் காந்தி:


 
ராகுல் மீண்டும் கட்சியின் தலைவராக வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் பலர் வலியுறுத்தி வரும் நிலையில் "நான் கட்சிக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் களத்தில் நின்றுப் போராடுகிறேன் ஆனால் உறுதியாக நான் தலைவர் பதவிக்குப் போட்டியிடமாட்டேன்" என திட்டவட்டமாக ராகுல் காந்தி கூறியுள்ளார். தனது உடல்நிலை மற்றும் வயது மூப்பின் காரணமாக அடிக்கடி ஓய்வுவெடுக்க வேண்டியிருப்பதால் சோனியா காந்தியும் கட்சியின் தலைவராக முடியாது என்றுத் தெரிவித்துள்ளார்.

யார் தேசியத் தலைவர்?

சசி தரூரும், அசோக் கெலாட்டும் தேர்தல் அறிவிப்பிற்குப் பின்னர் சோனியா காந்தியை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து  இருவரில் தலைவராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் இருக்கிறது என்ற எதிர்ப்பார்ப்பு காங்கிரஸை சார்ந்தத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது, எனினும் அசோக் கெலாட்டிருக்கு அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

நம்பிக்கை நாயகன்:

பாஜக ஆட்சியைப் பிடித்ததிலிருந்து காங்கிரஸ் தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறது. உள்கட்சியில் ஏற்படும் பிரச்சனைகள், கட்சி தாவல்கள் என காங்கிரஸின் பலம் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டேயிருக்கிறது. ஆபரேஷன் தாமரையை செயல்படுத்தி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கர்நாடகாவிலும் மத்திய பிரதேசத்திலும் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.

அதே பாணியில் ராஜஸ்தான் அரசையும் கவிழ்க்க நினைத்தது, ஆனால் அசோக் கெலாட் தனது சாமர்த்தியத்தால் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்து பாஜகாவின் ஆபரேஷன் தாமரையைத் தோல்வியுற செய்தார். இதனால் ராகுல் காந்தி குடும்பத்தின் "நம்பிக்கை நாயகனாக"  அசோக் கெலாட் இருப்பதால் கட்சியின் தலைவராகும் வாய்ப்பு அவருக்கே அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

மூன்று முறை ராஜஸ்தான் முதல்வராக இருந்த அசோக் கெலாட், திறமையான அரசியல்வாதி. அவர் காங்கிரஸ் தலைவரானால், கட்சியை மீண்டும் கட்டமைப்பதை விட அவருக்கு மிகப்பெரிய சவால் காத்துள்ளது.

சவால்கள்:

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான போட்டியில் முதல்வர் அசோக் கெலாட் முன்னிலை வகித்து வருகிறார்.  காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் பதவியேற்றால், நலிவடைந்த கட்சிக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இது தவிர, கட்சிக்கு வெளியே சவால்கள் இருக்கும் அளவுக்கு, கட்சிக்குள்ளும் அதை விட சவால்கள் இருக்கும். அசோக் கெலாட் தலைவரானால் அவர் முன் என்ன சவால்கள் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கட்சி பூசல்:

2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இது தவிர, நாட்டின் பழமையான கட்சி ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு சட்டசபை தேர்தல்களிலும் தோல்வியையே தழுவியது. இதனால் விரக்தியுற்ற பல எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறினர். தொண்டர்கள் மத்தியிலும் அதிருப்தியே நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். 

அதிருப்தி தலைவர்கள்:

காங்கிரஸில் முதல்முறையாக காந்தியல்லாத குடும்பம் தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட் தலைவர் பொறுப்பை ஏற்றால், மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கமாக நடக்க வேண்டும். இதனுடன், அதிருப்தி தலைவர்களின் குழுவான  ஜி 23 என்பதும் கெலாட்டுக்கு முக்கிய சவாலாக இருக்கும். ஜி23இல் உள்ள தலைவர்கள் எப்போதும் விரிவான  மாற்றத்தை கோரிக்கை வைத்து வருகின்றனர். 

ராஜஸ்தான்:

இது தவிர, ராஜஸ்தானில் உள்ள உள் முரண்பாடுகளைச் சமாளிப்பது கெலாட்டுக்கு மிகவும் கடினமாக இருக்கும் . அசோக் கெலாட் தலைவரானதும் சச்சின் பைலட் முதலமைச்சரானால், கெலாட் தனது ஆதரவாளர்களை நம்ப வைப்பதில் சிரமம் ஏற்படும். பல சட்டமன்ற உறுப்பினர்கள் பைலட்டை முதலமைச்சர் ஆவதை எதிர்க்கலாம்.  கெலாட் முதலமைச்சராக பைலட்டை தேர்வு செய்யாவிட்டால் பைலட் பிரிவு கிளர்ச்சி செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், கெலாட் தனது சொந்த மாநிலத்திலேயே முரண்பாட்டை சந்திக்க நேர்ந்தால் காங்கிரஸ் தலைவராக  தோல்வியுற்றவராகவே கருதப்படுவார். 

கட்சியின் செயல்திறன்:

காங்கிரஸை புத்துயிர் பெற அவர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக நாட்டில் ஆட்சி செய்த கட்சியின் நிலை, தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், அடுத்த தேர்தலில் கட்சியின் செயல்திறனை மேம்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

இந்துத்துவா அரசியல்:

புதிய தலைவர் முன் இருக்கும் மிகப்பெரிய சவால் பா.ஜ.க.வுடன் போட்டி போடுவதுதான். தேசியவாதம் மற்றும் இந்துத்துவா பிரச்சினையில் பாஜக தேர்தல் களத்தில் இறங்கி காங்கிரசை சுற்றி வளைத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், அசோக் கெலாட் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றால், பாஜகவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வியூகத்தை அவர் வகுக்க வேண்டும். 

முதல் சோதனை:

அதே நேரத்தில் 2023 சட்டமன்ற மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸின் செயல்திறனை மேம்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். குஜராத் மற்றும் ஹிமாச்சல் தேர்தல்களில், புதிய தலைவருக்கான சவால் பெரிய அளவில் இருக்கும். 

பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன வாக்கு வங்கி:

அசோக் கெலாட் மாலி சமூகத்தைச் சேர்ந்தவர். ஓபிசி வாக்குகளை குறிவைப்பது கெலாட்டுக்கு எளிதாக இருக்கலாம் ஆனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூகத்தின் வாக்குகளைப் பெற அவர் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடியரசுத் தலைவர் தேர்தல் முதல் மாநிலங்களவைத் தேர்தல் வரை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் கட்சி என்ற பிம்பத்தை பாஜக உருவாக்கியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், பாஜகவின் இந்த பிம்பத்தை உடைத்தால் மட்டுமே, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூகத்தினரின் அதிகபட்ச வாக்குகளைப் பெற முடியும். இதனுடன், சத்திரியர்கள், ஜாட்கள் மற்றும் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தும் ராஜஸ்தானின் அரசியலையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

                                                                                                                             -நப்பசலையார்

இதையும் படிக்க:  ’அண்ணா மாடல்’ vs ’மோடி மாடல்’