பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது ஏன்? சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் வந்த கருத்துக்கள் என்ன?

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது ஏன்? சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் வந்த கருத்துக்கள் என்ன?
Published on
Updated on
2 min read

பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன், சட்டப்பேரவையில் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பார்ப்போம்...

மூன்றாம் நாள் கூட்டத்தொடர்:

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கியது. அதன்படி மூன்றாம் மற்றும் இறுதி நாளான இன்று கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.  சட்டசபையின் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன், சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் கருத்துகளை முன்வைத்தனர்.

1. வேல்முருகன்:
 
அதன்படி முதலாவதாக பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன், "பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும், 700 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த விவசாய நிலங்களை அவர்கள் இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தார். இதேபோன்று  கலைஞர் ஆட்சி காலத்தில் புதிய விமான நிலையம் குறித்த கருத்து வந்த போது , வீடுகள் இல்லாத, விளைநிலங்களை பாதிக்காத அளவிற்கு நடவடிக்கை எடுத்தார். அது போன்று விவசாயிகளை பாதிக்காத அளவிற்கு வேறு இடத்தில் விமான நிலையத்தை அமைப்பதற்கோ, அல்லது இத்திட்டத்தை கைவிடுவதற்கோ தமிழக அரசு முன்வர வேண்டும்", என்று வலியுறுத்தினார்.

2. ராமச்சந்திரன்:

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராமச்சந்திரன் பேசிய போது, "பரந்தூர் விமா ன நிலைய திட்டம் விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது" என்று கருத்து தெரிவித்தார்.

3. நாகை மாலி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி பேசுகையில், "பரந்தூர் விமான நிலைய திட்டம் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இது தொடர்பாக மக்களிடையே தொடர்ந்து தமிழ்நாடு அரசு பேச வேண்டும். அவர்களுடைய அனுமதியோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீடுகளை தர வேண்டும்" என்று கருத்து தெரிவித்தார்.

4. ஜிகே மணி:

பாமக உறுப்பினர் ஜிகே மணி பேசியபோது, "புதிய விமான நிலையம் அவசியம் தேவை. திட்டத்திற்கு நாங்கள் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்று கூறிய அவர், மக்கள் தங்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கருத்து கேட்பு கூட்டங்களின் போது தெரிவித்திருக்கிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்தி மக்களின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டும்",  என்று வலியுறுத்தினார்.

5. செல்வப்பெருந்தகை:

காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசுகையில், "பரந்தூர் விமான நிலைய திட்ட விவகாரத்தில் சில சக்திகளும், சில தீய இயக்கங்களும் மக்களிடையே விஷ விதைகளை தூவி வருகின்றனர். தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் மக்கள் தன்னை நம்புகிறார்கள். நான் முதலமைச்சரை நம்புகிறேன். மக்கள் பாதிக்காத அளவிற்கு தமிழக அரசு  இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார். 

இப்படியாக இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் கருத்துகளை தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com