சூர்யாவை தாக்கினால் ரூ.1லட்சம் பரிசு அறிவிப்பு..! பாமகவினரின் பேட்டியால் பரபரப்பு..!

வலுக்கும் பாமக vs ஜெய்பீம் பட விவகாரம்..!

சூர்யாவை தாக்கினால் ரூ.1லட்சம் பரிசு அறிவிப்பு..! பாமகவினரின் பேட்டியால் பரபரப்பு..!

பாமகவினருக்கும், சூர்யாவுக்கும் இடையேயான பதற்றமான சூழல் தற்போது தீப்பிடித்து எரியத் துவங்கியுள்ளது. பாமக மாவட்ட செயலாளர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து westandwithsuriya என்ற ஹேஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். 

கடந்த 2- தேதி ஓடிடி தளத்தில் வெளியாகியான படம் ஜெய் பீம். நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சூர்யா உட்பட, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஷிசா விஜயன் உட்பட பலர் நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 1990-களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இருளர் இன மக்கள் படும் பாட்டையும், அவர்களது இன்னல்களையும் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் வாதாடிய வழக்கறிஞர் பெயர், பாதிக்கப்பட்ட இருளர் இனத்தை சேர்ந்த இளைஞரின் பெயர்கள் அனைத்துமே அப்படியே இருக்கும். ஆனால் குற்றவாளியும், அரக்க குணம் படைத்த காவலரின் பெயர் அந்தோனி சாமி என்ற உண்மை பெயருக்கு மாற்றாக குரு மூர்த்தி எனவும், அவரது வீட்டில் அக்னி கலசம் படம் பொருந்திய காலண்டரும் தொங்க விடப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது. 

இந்தப் படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியிருப்பதாக திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் படத்தின் இயக்குநர் மோகன் ஜி குற்றம்சாட்டியிருந்தார். அதனை தொடர்ந்து காலண்டரின் படம் மாற்றப்பட்டது. இருப்பினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு, 9 கேள்விகளை உள்ளடக்கிய கடிதத்தை எழுதியிருந்தார் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ். சமூக வலைதளங்களில் வைரலான இந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சூர்யாவும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இருப்பினும் சூர்யாவின் பதில் திருப்திகரமாக இல்லை எனக் கூறி பாமகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தான் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி நேற்றைய தினம் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியது.

மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பியிடம் சுகுணாசிங்கிடம் பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில், பாமகவினர் ஜெய்பீம் பட தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார். அதில், படத்தில் ஒரு குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் தங்கள் குலத்தின் அடையாளமான அக்னிகுண்டத்தை காட்டியும், மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குரு பெயரை வில்லனுக்கு வைத்து அவரது புகழுக்கு மிகப்பெரிய கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், வன்னிய சமுதாய மக்கள் அனைத்து சமுதாய மக்களுடன் இணக்கமாக பழகிவரும் வேலையில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு எதிராக வன்னியர்கள் செயல்படுவது போல் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்துவது போல் படத்தை எடுத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். எனவே ஜெய்பீம் பட தயாரிப்பாளரான சூர்யா, ஜோதிகா இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த பழனிச்சாமி, "ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய சூர்யாவை மயிலாடுதுறை பகுதியில் நடமாடவிட மாட்டோம்... இந்த பக்கம் எந்த தியேட்டரிலும் அவரது படத்தை திரையிட விடமாட்டோம்... இது தமிழ்நாட்டின் அனைத்து இடங்களில் நடைபெறும்... இனி சூர்யா, ஃபிளைட்டில் தமிழ்நாட்டினுள் சுற்ற வேண்டும்... சாலை வழியில் போக முடியாது என்பதை எச்சரிக்கையாக சொல்லி கொள்கிறோம் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளா பழனிசாமி. அதுமட்டுமல்லாது கைதி என்ற கார்த்திக் படத்தில் வரும் டயலாக்கை போல, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்" என்று அதிரடியாக அறிவித்திருந்தார். இவரது இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்திலும், திரைத்துறையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.