என்ன இந்த மின்சார சட்டத் திருத்த மசோதா? ஏன் அதற்கு இவ்வளவு எதிர்ப்பு?

நேற்று, மின்சார திருத்த மசோதாவை அரசு அறிமுகம் செய்ததை அடுத்து, இதற்கு பலதரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

என்ன இந்த மின்சார சட்டத் திருத்த மசோதா? ஏன் அதற்கு இவ்வளவு எதிர்ப்பு?

மின்சார சட்டத் திருத்த மசோதா ஆகஸ்ட் 8ம் தேதி மக்களவையில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை எதிர்க்கட்சிகள் எதிர்த்ததோடு, தமிழ்நாட்டு ஆளுங்கட்சியான திமுகவும் எதிர்த்தது. அப்படி ஒரு சேர எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு அந்த மசோதாவில் என்ன கூறப்பட்டுள்ளது? இதைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

மேலும் படிக்க: மின்சார சட்ட திருத்த மசோதா: அதிமுக எதிர்க்காதது ஏன்?.. அமைச்சர் செந்தில்பாலாஜி சாடல்..!

எதிர்மறை கருத்துகள்:

மின்சாரப் பயன்பாட்டிற்கான கட்டணம் செலுத்துவதை ஒழுங்குப் படுத்தும் மற்றும் வாரியங்களுக்கான போட்டியை அறிமுகப்படுத்தும் வகையிலும் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், மின்சாரத் தேவை அதிகரிப்பு மற்றும் விநியோக பிரச்சனைகளுக்கு இடையில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கருத்துகள் வெளியாகி வருகின்றன.

முன்பே எதிர்பார்த்தது:

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியே, மின்சார சட்டத்தில் திருத்தம் வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வெளியான மசோதா, பெரிதாக அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால், விவசாயிகளுக்கு இந்த திருத்தம் ஆபத்தானதாக அமையும் என்று எதிர்கட்சிகளால் கூறப்படுகிறது.

அப்படி என்ன தான் அந்த திருத்தம் சொல்கிறது?

மின்சார சட்டத்தின் 14, 42, 62, 146, 152,166 உள்ளிட்ட பிரிவுகளில் திருத்தம் செய்ய இந்த மசோதா வகை செய்கிறது. இந்த சட்டத்திருத்தம், ஒரு பகுதியில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் விநியோகஸ்தர்களை அனுமதிக்க முன்மொழிகிறது. இதன் மூலம், மக்கள், தங்களுக்கு பிடித்த விநியோகஸ்தரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும், அவர்களுக்கு இடையே நல்ல விநியோகஸ்தர் யார் என்ற போட்டியும் நிலவும் என்றும் மசோதாவை அறிமுகப்படுத்த்ய அமைச்சர் ஆர் கே சிங்க் கூறினார். மேலும், இந்த முதல் படி, 2003ம் ஆண்டு எடுத்து வைக்கப்பட்டது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மாற்றம்:

மின்சாரம் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் வர்த்தகம் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துதல் தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைக்க, 2003ம் ஆண்டில் இயற்றப்பட்ட மின்சாரச் சட்டத்தில் தான் தற்போதைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சுற்றுசூழலுக்காகத் தான் மாற்றம்:

இந்த சட்டத்திருத்தம், பசுமை ஆற்றலின் மூலம் சக்தியைப் பெறுவதற்கும், அதன் முக்கியத்துவத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யவும் கொண்டுவரப்பட்டுள்ளது எனக் கூறிய அமைச்சர், உலகளாவிய சுற்றுசூழல் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு தான் மாற்றம் கொண்டுவரப்பட்டது எனவும் கூறினார். மேலும், மின் விநியோகத்தில் ஒழுங்குமுறை கொண்டு வரவும், சட்டத்தில் ஒரு தீர்ப்பளிக்கும் முறையை வலுப்படுத்துவதும், விநியோக உரிமதாரர்களின் மேம்பட்ட பெருநிறுவன நிர்வாகத்தின் மூலம் நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதும் அவசியமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

செயல்திறனை மேம்படுத்தும்:

மின் விநியோக உரிமதாரர்கள் மற்ற உரிமதாரர்களின் வலையமைப்பைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மசோதா முன்மொழிகிறது. இது அவர்களுக்கு இடையே சிறந்தவருக்கான போட்டியை அதிகரிக்கும், ஏனென்றால் இது புதிய விநியோகஸ்தர்களுக்கு உள்கட்டமைப்பு தடைகளை சமாளிக்க உதவும் என்றும் மின் விநியோக வலையமைப்பின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும் என்றும் கூறுகிறது.

இழப்புகளை ஈடுகட்டும்:

மின்சாரம் வழங்கும் போது ஏற்படும் இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகள் மட்டுமே இது வரை, 16 சதவீதம் வரை இருக்கிறது. சராசரி வழங்கல் செலவுக்கும் சராசரி வருவாய்க்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே பகுதியில் பல உரிமங்கள் இருந்தால் மின்சாரம் வாங்குதல், தவறான கட்டணம் பெறுதல், அதீத மானியம் மற்றும் குறுக்கு மானியம் ஆகியவற்றை நிர்வகிக்கவும் இந்த மசோதா முன்மொழிகிறது.

கட்டுப்பாட்டாளர்களைக் கட்டுப்படுத்தும்:

மேலும், விநியோகஸ்தர்களுக்கிடையே ஆரோக்கியமற்ற விலை நிர்ணயம் குறித்த பிரச்சனைகளை ஊக்கப்படுத்த குறைந்தபட்ச கட்டண உச்சவரம்பு மற்றும் நுகர்வோர் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அதிகபட்ச உச்சவரம்பை கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டாளர்களை செயல்படுத்துவதையும் இந்த மசோதா நோக்குகிறது.

பாதுகாக்க மாற்றம் தேவை:

மின்சார விநியோக அமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், நாட்டில் மின்சார அமைப்பின் பொருளாதார மற்றும் திறமையான செயல்பாட்டிற்காகவும் தேசிய சுமை அனுப்பும் மையத்தின் (National Load Despatch Centre) செயல்பாட்டை வலுப்படுத்தவும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால், மின்துறை ஊழியர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஏன் எதிர்ப்பு?

All India Power Engineers Federation (AIPEF) அதாவது, அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பு, இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல லட்ச மின்துறை ஊழியர்கள் மற்றும் மின் பொறியாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் என தெரிவித்தது. மின்சாரத்தை தனியார் மயமாக்குதலை எதிர்ப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மானியங்கள் கேள்விக்குறியாகும்!

மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பல மானியங்களும் சலுகைகளும் இழக்கப்படுவதால், அவர்களது வாழ்க்கைகளும் பாதிக்கப்படும் என்றகுற்றச்சாட்டை வைத்திருக்கிறது அக்குழு. இந்தியா முழுவதும் பல லட்ச மின்துறை ஊழியர்கள், தங்களது வேலையை தற்காலிக நிறுத்தம் செய்து, கதவுகளில் நின்று கூட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இந்த குழு அறிவித்திருந்தது.

கடனில் இருக்கும் மின்துறை:

சமீபத்தில் கட்டணச் சிக்கல்கள் காரணமாக பல புகார்கள் எழுந்தது அனைவரும் அறிந்ததே. மோசமான நிதிநிலை காரணமாக கோல் இந்தியா லிமிடெட் மின்சரத் துறை விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய பணம், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்-யும் கடந்திருக்கிறது.

பல இடங்களில் மின்தடை:

கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வெயில் காரணமாகவும், கொரோனா தடுப்புகள் தளர்த்தப்பட்டதால் பல இடங்களில் அதீத மின்சாரப் பயன்பாடு இருந்தது. இதனால், பல இடங்களில் மின்தடைகள் இருந்தன. இதனால், வளர்ந்து வரும் மின் தேவைகளுக்கு ஏற்ப, கோல் இந்தியாவால், மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதற்கான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருண்டு வருகிறது.

விளக்கமளித்த அரசு:

இது போன்ற தேவைகளை சரி செய்யவே இந்த மாற்றங்கள் தேவை என அரசாங்கத் தரப்பில் இருந்து கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டம், துறையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், எதிர்கட்சிகளுக்கு இடையில் இந்த மசோதா நல்ல வரவேற்புப் பெறவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

என்ன எதிர்ப்பு?

இந்த சட்டத்திருத்தம், பல நிறுவனங்களை இந்த துறைக்குள் புகுத்தும். இதனால், தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த திருத்தம் சாதகமாக் இருக்கும் என எதிர்ப்பு தெரிவிக்கிறது எதிர்கட்சி. மேலும், இந்த மசோதா, விவசாயிகளுக்கு பாதகமாக இருக்கிறது.

ஏன் என்றால், விவசாயிகளுக்கு, மாநிலம் குறைந்த கட்டணம் முதல் இலவசமாகக் கூட மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த திருத்தம் மூலம், மின்சாரம் தனியார் மயம் ஆகினால், விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளும், மானியங்களும் நீக்கப்படும் என கூறுகின்றனர். அதாவது, முதலில் கட்டணம் செலுத்தி, பின் மின்சாரம் பெறக்கூடிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படும் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

“இந்த மசோதா ஆபத்தானது”- கெஜ்ரிவால்:

தலைநகர் டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், “இந்த மசோதா மிகவும் ஆபத்தானது” எனக் கூறியுள்ளார். மேலும், இது வரை இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் இந்த திட்டம் இல்லாததாகவும், பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டி, ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் பலனளிக்கும் இந்த மசோதாவை அவசர அவசரமாகக் கொண்டு வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

“சாலை முதல் நாடாளுமன்றம் வரைப் போராடுவோம்”- பக்வாந்த் மன்:

மேலும், சர்ச்சைகளில் சிக்கி, சமீபத்தில் பேசுபொருளாகவே இருக்கும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வாந்த் மன், மாநிலங்களின் உரிமை மீதான மற்றொரு நேரடி தாக்குதலாக இருக்கிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மாநிலங்களை பொம்மை போல மத்திய அரசு ஆட்டி வைக்க முயற்சி செய்வதாகவும் கூறிய அவர், எங்களது உரிமைக்காக சாலை முதல் நாடாளுமன்றம் வரை போராடுவோம் என கூறினார்.

ஆனால், அமைச்சர் ஆர் கே சிங்-கோ, இந்த மசோதா, எந்த மானியங்கள் மீதும் கை வைக்காது என்றும், விவசாயிகளுக்கு பாதிப்பு தரும் எந்த பிரிவும் இல்லை என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துளார்.

தற்போதைய நிலை:

இரண்டு அவைகளிலும் ஏற்கப்படும் திருத்தங்கள் மட்டுமே அமலுக்கு வரும் என்ற நிலையில், மக்களவையில் இந்த திட்டம் பெரும்பான்மையில் எதிர்க்கப்பட்டதால், இந்த மசோதா மறுபரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பட இடங்களில், சட்டத்திருத்தத்தின் காப்பிகளை எரித்தும் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சர்ச்சை பெருமளவில் பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது!

--- பூஜா ராமகிருஷ்ணன்