அடுத்த நகர்வை நோக்கி பயணிக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ் ; யார் கையில் இருக்கிறது முடிவு? 

அடுத்த நகர்வை நோக்கி பயணிக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ் ; யார் கையில் இருக்கிறது முடிவு? 

ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் மோதல்:

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாகு தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்காக அங்கீகரிக்கபட்ட திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட  9 கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அதேபோன்று அதிமுக சார்பில் ஈ.பி.எஸ்-க்கு கடிதம் அனுப்பினார். இதனை எதிர்த்த ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தின்படி தான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்பதை மேற்கோள்காட்டி, கடிதம் எழுதினார். அதனை ஏற்ற மாநில தேர்தல் ஆணையம் ஓ.பி.எஸ் தரப்பிற்கும் அழைப்பு விடுத்தது. அதன்படி நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஓ.பி.எஸ் சார்பில் கோவை செல்வராஜ் கலந்து கொண்டார்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் வெடித்த மோதல்:

மாநில தேர்தல் ஆணையர் அனுப்பிய கடிதத்தை ஏற்று ஓ.பி.எஸ் சார்பில் கோவை செல்வராஜூம் , ஈ.பி.எஸ் தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் இருவரும் பங்கேற்றனர். அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலாவதாக சென்ற கோவை செல்வராஜ் அதிமுக பெயர் பலகையின் முன்பு அமர்ந்திருந்தார். அதன்பிறகு சென்ற ஈ.பி.எஸ் தரப்பினர் கோவை செல்வராஜ் முன்பு இருந்த அதிமுக பெயர் பலகையை நகர்த்தி தன் முன் வைத்துக்கொண்டார். இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. 

ஜெயக்குமார் பதிலடி:

அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஜெயக்குமார், கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்காளை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாங்கள் தான் அதிமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டோம். ஓ.பி.எஸ் தரப்பில் கலந்து கொண்டவர்கள் எந்த கட்சி என்றே தெரியாது  என்று கூறி பதிலடி கொடுத்தார். 

மாநில தேர்தல் ஆணையரின் பதில்:

அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பிரச்சனையில் ஏற்பட்ட மோதல் தற்போது அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்திலும் தொடர்ந்து வந்ததால், அதிமுக யாருக்கு என்பது குறித்தான முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிராதசாகு கூறியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன?:

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த உட்கட்சி பிரச்சனையில், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மதுசூதனன் இருவருக்கும் கட்சி பொறுப்பினை வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம். அதேபோன்று தற்போது ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவருக்கும் நடக்கும் மோதலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவு என்னவாக இருக்கும்? இவர்கள் இருவருக்கும் நடக்கும் ஒற்றை தலைமை பிரச்சனையில் சட்ட ரீதியாக போராடி ஈ.பி.எஸ் வெற்றியை ஈட்டி வருகிறார். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும், கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்ததை போன்று கட்சியையும் கட்சி சின்னத்தையும் ஓ.பி.எஸ் கையில் ஒப்படைக்குமா? அல்லது முடக்குமா? என்பது போன்ற கேள்விகள் அரசியல் வல்லுநர்களிடையே நிலவி வருகிறது.