”ஆடு நனைந்தால் ஓநாய் அழுவது போல” அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்மந்தம்? ஜெயக்குமார் கேள்வி

”ஆடு நனைந்தால் ஓநாய் அழுவது போல” அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்மந்தம்? ஜெயக்குமார் கேள்வி

ஆடு நனைந்தால் ஓநாய் அழுவது போல அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்மந்தம்  என்று கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையிலான கூட்டணி தான் தேர்தலை சந்திக்கும் என்று மாலைமுரசின் பிரத்யேக பேட்டியில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஐ இணைக்க முயற்சி:

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சசிகலா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது, அதிமுகவை ஒற்றுமையுடன் கொண்டு செல்லவே ஓபிஎஸ்-இபிஎஸ் ஐ இணைக்க முயற்சி செய்து வருகிறேன் என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் நிச்சயமாக நாங்கள் அனைவரும் ஓரணியில் இணைவோம் என்றும் சசிகலா தெரிவித்திருந்தார்.

மாலைமுரசு தொலைக்காட்சியின் பிரத்யேக பேட்டி:

சசிகலா கூறியது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், நமது மாலைமுரசு தொலைக்காட்சி பிரத்யேக பேட்டி நடத்தியது. அதில் பேசிய அவர், ஆடு நனைந்தால் ஓநாய் அழுவது போல அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்மந்தம் என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் ஓபிஎஸ்க்கும் அதிமுகவுக்கும் என்ன சம்மந்தம். ஓபிஎஸ்சை பொறுத்தவரையில் அதிமுக பொதுக்குழுவில்  ஒருமனதாக நீக்கப்பட்டவர்.

மூவரும் அதிமுகவில் கிடையாது:

ஏற்கனவே, இது குறித்து தெளிவுபடுத்திய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் எப்போதும் கிடையாது என்றும், எந்த காலத்திலும் கட்சியில் சேர்க்கப்போவதில்லை என்றும், அவர்களுடன் எந்தவிதமான கூட்டணியும் வைக்கப்போவதில்லை என்றும் கூறிவிட்டார்.  இதனால் அவர்கள் மூவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் எங்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணையும் என்று சசிகலா கூறியுள்ளார்; அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, 

பதிலளித்த ஜெயக்குமார், கட்சி நாங்கள் தான்; தலைமை கழகம் எங்களிடம் தான் உள்ளது, இரட்டை இலையும் எங்களிடம் தான் உள்ளது; எடப்பாடி பழனிசாமி பொதுகுழுவால் ஒருமனதாக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்; இப்படி கட்சியே எங்களிடம் இருக்கும்போது, நாங்கள் ஏன் அவர்களுடன் கூட்டணி வைக்கவேண்டும். அப்படி ஒரு சூழல் இதுவரை உருவாகவில்லை என்று கூறியவர், 
நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி தான் அமையும் என்றும், அந்த கூட்டணி கட்சிகளுக்கும் நாங்கள் தான் இடஒதுக்கீடு செய்வோம் என்றும், அந்த கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி ஆகிய மூவரும் கிடையாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.