70 ஆண்டுகளாக துவக்கப் பள்ளிக்காக காத்திருக்கும் கிராம மக்கள்... 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே 70 ஆண்டுகளாக துவக்கப்பள்ளிக்காக காத்திருக்கும் கிராம மக்கள். 

70 ஆண்டுகளாக துவக்கப் பள்ளிக்காக காத்திருக்கும் கிராம மக்கள்... 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரம் அருகில் முஸ்லீம் நகர் என்ற கிராமம் உள்ளது.இங்கு சுமார் ஆயிரத்தி இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.நூறு சதவீதம் சிறுபான்மை மக்கள் வசித்து வரும் இந்த ஊரில் துவக்கப்பள்ளி இல்லாததால் இங்குள்ள குழந்தைகள் ஆண்டார்குப்பம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். முஸ்லீம் நகரில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் கூலி வேலைக்கு செல்வதால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்கு நேரமிருப்பதில்லை. இதனால் ஆண்டார்குப்பத்தில் உள்ள நெடுஞ்சாலையை கடந்து குழந்தைகள் பள்ளிக்கு நடந்து சென்று வருகின்றனர்.

நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கில் வாகனங்கள் செல்வதால் குழந்தைகள் தினந்தோறும் ஆபத்தான சூழ்நிலையில் சாலையை கடந்து வருகின்றனர்.சில நேரங்களில் கிராமத்து இளைஞர்கள் குழந்தைகள் சாலையை கடப்பதற்கு உதவுகின்றனர். ஆனால் அவர்களுக்கும் பல்வேறு பணிகள் இருப்பதால் அனைத்து நாட்களிலும் இது சாத்தியமில்லாமல் போகிறது. நெடுஞ்சாலையை கடக்கும்போது ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள் சிலர் படுகாயமடைந்து உயிர் பிழைத்துள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

சில குழந்தைகள் அருகில் உள்ள மாதவரம் சென்று அரசுப்பள்ளியில் படித்து வருகின்றனர்.சாலை வழியே சென்றால் அதிக தூரமாக இருப்பதால் வயக்காட்டு வழியில் மாணவர்கள் சென்று வருகின்றனர்.இந்த வழியில் விஷ ஜந்துகளின் தொந்தரவும் அதிகமாக உள்ளது.தினந்தோறும் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருவது கயிற்றின்மீது நடப்பதைபோலவும் நித்தியகண்டம் பூரண ஆயுசாக இருப்பதாகவும் பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். துவக்க கல்வி இல்லாது போனதால் ஒருகட்டத்தில் சின்ன சின்ன வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். இதனால் இந்த கிராமத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாகவே காணப்படுகின்றனர். இதன் விளைவாக குழந்தைகளின் கல்வி கனவு கானல்நீராகவே மாறிப்போனது.

இதுமட்டுமல்லாமல் இன்னொரு அதிர்ச்சியான தகவலையும் இங்குள்ள இளைஞர்கள் கூறுகின்றனர். அதாவது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த கிராமத்தில் இதுவரை வெறும் 12 பேர் மட்டும்தான் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்கள். இந்த புள்ளி விபரத்தை அதிர்ச்சியாக மட்டுமல்ல சமூக அவமானமாகவும் பார்க்க வேண்டும்.தங்களது கிராமத்திற்கு துவக்கப்பள்ளி வேண்டும் என பல ஆண்டுகளாக எத்தனையோ அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் தங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை என கிராம மக்கள் ஆதங்கப்படுகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் கிராமத்திற்கு வாக்கு கேட்க வரும் அரசியல்வாதிகள் நிச்சயமாக பள்ளிக்கூடம் வரும் என வாக்குறுதி கொடுத்து விட்டு செல்வதாகவும் ஆனால் இதுநாள்வரை தங்கள் ஊருக்கு பள்ளிக்கூடம்தான் வரவில்லை என மக்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.

துவக்கப்பள்ளி தங்கள் கிராமத்தில் இருந்து விட்டால் போதும், பின்னர் குழந்தைகளுக்கு கொஞ்சம் விபரம் தெரிந்து விடும், அதன்பிறகு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு என கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் கிராமத்து பிள்ளைகள் உயர்கல்வி படித்து நல்ல வேலைக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் தங்கள் கிராமம் வளர்ச்சி பெறும் எனவும் பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் விதிமுறையின்படி ஒரு கிராமத்தில் குறைந்தது முன்னூறு என்ற அளவில் மக்கள் தொகையிருந்தால், 30லிருந்து 50 மாணவர்கள் இருந்தால் அந்த கிராமத்தில் துவக்கப்பள்ளி அமைக்க வேண்டும்.கிராமத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் பள்ளி இல்லாவிடில் சம்மந்தப்பட்ட கிராமத்தில் துவக்கப்பள்ளி அமைத்திட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மூன்று தகுதிகள் இருந்தும் இந்த கிராமத்தில் துவக்கப்பள்ளி அமைக்கப்படாதது புரியாத புதிராகவே உள்ளது.
 
தங்களது நீண்டகால கோரிக்கையை கல்வித்துறை அதிகாரிகள் கனிவுடன் பரிசீலித்து தங்கள் குழந்தைகளின் கல்வி கனவை நனவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முஸ்லீம் நகர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பெற்றோர்களின் நியாயமான ஆசை நிறைவேறுமா, இந்த கிராமத்திற்கு துவக்கப்பள்ளி வருமா என்பதே பொறுத்திருந்து பார்ப்போம்!