பழங்குடியின பெண் கவுன்சிலர் டூ ஜனாதிபதி வேட்பாளர்..! யார் இந்த திரௌபதி முர்மு?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பழங்குடியின பெண் திரௌபதி முர்மு குறித்த சில தகவல்களைப் பார்க்கலாம்.

பழங்குடியின பெண் கவுன்சிலர் டூ ஜனாதிபதி வேட்பாளர்..! யார் இந்த திரௌபதி முர்மு?

கவுன்சிலராக தனது அரசியல் பயணத்தைக் தொடங்கி தற்போது பாஜக கூட்டணி கட்சிகளின் பலத்த ஆதரவோடு குடியரசுத் தேர்தலில் களமிறங்கி இருக்கும் திரௌபதி முர்மு குறித்த சில தகவல்கள் இங்கே.

1. திரௌபதி முர்மு, ஒடிசா மாநிலத்தில் உள்ள மாயூர்பஞ்சில் 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 இல் பிறந்தவர். 

2. 15 வயதில் குழந்தைத் திருமணத்தால் இன்னலுக்கு ஆளான முர்மு, புவனேஷ்வரில் உள்ள ராமா தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார்.

3. மாநில அரசியலில் நுழைவதற்கு முன்பு பள்ளி ஆசிரியராகத் தனது பயணத்தைக் தொடங்கிய முர்மு, ராய் ராங்பூர் ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் உதவிப் பேராசிரியராகவும், ஒடிசா அரசின் நீர்ப்பாசனத் துறையில் இளநிலை உதவியாளராகவும் பணியாற்றி உள்ளார். 

4. 1997 இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த முர்மு, ராய் ராங்பூர் நகர் பஞ்சாயத்து கவுன்சிலராக பணியாற்றி உள்ளார். 

5. 2 முறை ஒடிசாவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

6. 2000 - 2005 இல் ஒடிசாவில் பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்த போது, ஒடிசா மாநிலத்தின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து உள்ளார். 

7. 2005 - 2009 இல் மீன்வளம் மற்றும் விலங்குகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். 

8. 2007 இல் ஒடிசா சட்டமன்றத்தால் சிறந்த எம்.எல்.ஏ.வுக்கான நீலகந்தா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

9. 2015 முதல் 2021 வரை ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்ததன் மூலம், ஒடிசாவில் இருந்து நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆளுநர் மற்றும் முதல் பழங்குடியின  பெண் ஆளுநர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். 

10. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலிலும் திரௌபதி முர்முவின் பெயர் பரிசீலிக்கப்பட்டது.

11. 20 வருடங்களுக்கும் மேல், சமூக மற்றும் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் திரௌபதி முர்மு.

இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 29 இறுதி நாள் ஆகும். எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்கா, திரௌபதி முர்முவை எதிர்த்து போட்டியிட உள்ளார்.