இலவசங்கள் தொடர்பான வழக்கில் நீதிபதி ரமணா அளித்த இறுதி உத்தரவு என்ன...?

இலவசங்கள் தொடர்பான வழக்கில் நீதிபதி ரமணா அளித்த இறுதி உத்தரவு என்ன...?

தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளுக்கு தடைக்கோரி தொடர்ந்த பொதுநல வழக்கை, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து, அடுத்து எந்த அமர்வு என்பதை அடுத்த தலைமை நீதிபதி முடிவு செய்வார் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்:

இலவசங்கள் குறித்த வழக்கு:

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசம் குறித்தான வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க கோரி பாஜக தரப்பு வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த பொதுநல வழக்கானது, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.

ஆகஸ்ட் 24:

அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில், கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, அனைத்து தரப்பு வாதங்களையும், கருத்துக்களையும் கேட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, வழக்கின் முக்கியத்துவம் கருதி விரிவான விவாதம் தேவைப்படுகிறது என்பதால், இந்த வழக்கை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட  அமர்வுக்கு மாற்றம் செய்யப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

நேரலையில் மீண்டும் உத்தரவு பிறப்பித்த நீதிபதி:

இந்நிலையில், இன்றுடன் ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா, இலவசங்கள் தொடர்பான பொதுநல வழக்கின் மீதான விசாரணையை இன்று கையில் எடுத்தார். அப்போது,  உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையில் இலவசங்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பானது நேரலை ஒளிபரப்பில் உத்தரவிடப்பட்டது.

திவால் நிலைக்கு தள்ளப்படும் மாநில அரசு:

உத்தரவில், இலவசங்கள் தொடர்பான அறிவிப்பு என்பது ஒரு மாநில அரசு உடனடி திவால் நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலையை உருவாக்கலாம் என்றும், அத்தகைய இலவசங்கள் கட்சியை பிரபலபடுத்தவே பயன்படுத்தபடுகிறது என்றும், தேர்தலின் போது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான உண்மையான அதிகாரம் ஜனநாயக முறையில் மக்களுக்கு இருப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அடுத்த நீதிபதி முடிவு செய்வார்:

மேலும், வழக்கின் சிக்கலான தன்மை கருதியும், 2013ம் ஆண்டு சுப்பிரமணிய பாலாஜி தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் கருதியும் இவ்வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக தெரிவித்தார். அதே நேரத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு எந்த அமர்வு? என உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி முடிவு செய்வார் எனவும் இப்போதைய தலைமை நீதிபதி என்.வி ரமணா தெரிவித்தார். 

மேலும் படிக்க : https://www. malaimurasu.com/posts/cover-story/Election-is-free---instructions-to-form-a-committee

நிபுணர் குழுவை அமைக்கலாம்:

தொடர்ந்து, இத்தகைய சிக்கலான பிரச்சனைகளை ஆராய

  1. "நிபுணர் குழுவை" அமைக்கலாம் என ஆலோசனை வழங்கிய தலைமை நீதிபதி,
  2.  இலவசங்கள் தொடர்பான இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவைப்படுவதாக கூறினார். அதுவும் குறிப்பாக இவ்விவகரத்தில்,
  3.  நீதித்துறையின் தலையிடு எந்த அளவுக்கு இருக்கலாம்? என்றும்,
  4.  நீதிமன்றத்தால் நிபுணர் குழுவை நியமிப்பது இந்த விவகாரத்தில் எந்த அளவிற்கு உதவும்? என்றும்,
  5.  2013ம் ஆண்டு இலவசங்கள் கூடாது என வழங்கப்பட்ட சுப்ரமணிய பாலாஜி வழக்கு பரிசீலிக்க பட வேண்டுமா? என்பதற்கு விரிவான விசாரணை தேவை என்பதையும் தெரிவித்தார்.

வழக்கு மாற்றம்:

மேலும், 2013ம் ஆண்டு சுப்பிரமணிய பாலாஜியின் தீர்ப்பை இவ்வழக்கின் தீவிரம் கருதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்த தலைமை நீதிபதி, அரசியல் கட்சிகளின் அனைத்து அறிவிப்புகளையும் இலவசங்களாக கருத முடியாது என தெரிவித்தார். எனவே, இந்த வழக்கின் தீவிரம் கருதி  3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து, அடுத்து எந்த அமர்வு என்பதை அடுத்த தலைமை நீதிபதி முடிவு செய்வார் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்: தொடர்ந்து,  இவ்வழக்கு நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

கேள்விகள்:

தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளுக்கு தடைக்கோரி தொடர்ந்த பொதுநல வழக்கில் அடுத்து வரும் தலைமை நீதிபதி வழக்கின் விவாதங்களை எப்படி பார்ப்பார்...வழக்கின் தன்மையை எப்படி ஆராய்வார்...தீர்ப்பு என்னவாக இருக்கும்...அடுத்த அமர்வு எப்போது? என்ற கேள்விகள் எழும் நிலையில் வழக்கு தொடர்பான விவரங்களை  பொறுத்திருந்து பார்ப்போம்...