திமுக ஆட்சியின் ஓராண்டு பயணத்தை 29 C பேருந்தில் கேட்டறிந்த முதல்வர்!

திமுக ஆட்சியின் ஓராண்டு பயணத்தை 29 C பேருந்தில் கேட்டறிந்த முதல்வர்!

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு  பேருந்தில் ஏறி பயணம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பேருந்து பயணத்தின் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.   

2011 ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரை தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மே மாதம் 2ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் திமுக தலைமையிலான அணி 159 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. அதனால் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மே 7ம் தேதி 2021ம் ஆண்டு ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதனால் இன்று காலை தனது தாயார் தயாளு அம்மாளிடம் முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அவர் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது காரில் சென்றுகொண்டிருந்த அவர், திடீரென காரை நிறுத்தி அரசு பேருந்தில் ஏறி திமுக அரசின் ஓராண்டு ஆட்சி குறித்து கேட்டறிந்தார். இது பற்றியும், 29சி பேருந்தில் பயணம் செய்த அனுபவம் பற்றியும் சட்டப்பேரவையில் பேசிய அவர், " மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம் என்ற ஒரு திட்டம் பெண்கள் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மட்டும் தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். இப்போதுகூட, இந்தச் சட்டமன்றத்திற்கு வருவதற்கு முன்பு, கோபாலபுரத்திற்கு, தலைவர் கலைஞர் அவர்களுடைய இல்லத்திற்குச் சென்று, அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு, என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு, நானும், நம்முடைய அவை முன்னவர் அவர்களும் மற்றும் அமைச்சர் பெருமக்கள் எல்லாம் காரிலே வந்து கொண்டிருந்தபோது, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையிலே ஒரு பேருந்து நிலையத்திலே இறங்கி நின்றபோது, ஒரு பேருந்து வந்தது.

‘நீங்கள் எல்லாம் காரிலேயே உட்கார்ந்திருங்கள், நான் அந்தப் பேருந்திலே கொஞ்சம் நேரம் பயணம் செய்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லி, 29-C அந்தப் பேருந்தில் ஏறினேன். 29-C பேருந்து என்னுடைய வாழ்நாளிலே மறக்கமுடியாத பேருந்து. ஏனென்றால், பள்ளிப் பருவத்திலே இருந்தபோது, நான் கோபாலபுரத்திலிருந்து 29-C மூலம் பள்ளிக்குச் சென்று வந்தேன்.

அப்போது தலைவர் கலைஞர் அவர்கள், பொதுப் பணித் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார். நான் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி பேருந்து நிறுத்தத்திலிருந்து, 29-C பேருந்தைப் பிடித்துத்தான் என்னுடைய பள்ளிக்கு, ஸ்டெர்லிங் சாலையில் இறங்கி, அங்கிருந்து சேத்துப்பட்டிற்கு நடந்து போய், பள்ளிக்குச் சென்று படித்தேன். 29-C என்ற அந்தப் பேருந்தில்தான் இன்றைக்குக் காலையில் நான் ஏறி பயணித்தேன். அந்தப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த மகளிரிடத்திலே, ‘எப்படி இந்த ஆட்சி நடக்கிறது – ஒரு வருடம் ஆகியிருக்கிறது; இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம் – உங்களுக்குத் திருப்தியாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘ரொம்ப திருப்தியாக இருக்கிறது.

உங்களைப் பார்த்ததே அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.’ என்று சொன்னார்கள். இந்த இலவசப் பயணத்தினால் உங்களுக்கு என்ன இலாபம், எவ்வளவு மிச்சமாகிறது? என்ற கேள்விகளையெல்லாம் கேட்டேன். அதற்குரிய விளக்கத்தையெல்லாம் சொன்னார்கள்.

இந்தத் திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினப் பெண்கள் அதிக அளவிலே பயன்பெற்று வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதிலும் குறிப்பாகப் பட்டியலினப் பெண்கள் அதிகமாக பயனடைந்திருக்கிறார்கள்” என பேசியுள்ளார். தற்போது அவர் பேருந்தில் பயணம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஓராண்டை நிறைவு செய்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்,பிரபலங்கள், நடிகர்கள், கவிஞர்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.