பிரிந்து சென்ற தலைவர்கள்..! பின்னடைவில் பாஜக...! பெங்களூரு தேர்தலில் இனி நிலை என்ன?

பிரிந்து சென்ற தலைவர்கள்..!  பின்னடைவில் பாஜக...!  பெங்களூரு தேர்தலில்  இனி நிலை என்ன?
Published on
Updated on
2 min read

பாஜக இரண்டாம் பட்டியல் வெளியான நிலையில் பாஜக கட்சி மாநிலத்தலைமைக்கு  எதிராக பாஜகவினரே போராடி வருகின்றனர். மேலும், ஒரே நாளில் மூன்று முக்கிய தலைவர்கள் பாஜக கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக தரப்பில் இரண்டாம் கட்ட  வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  212 தொகுதிகளுக்கான இந்த வேட்பாளர் பட்டியலில் 17 நடப்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பல மூத்த தலைவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படாமல் சுமார் 60 புது முகங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியானதில் இருந்து பாஜக கட்சி தலைமைக்கு எதிராக பல மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இவ்வாறிருக்க, நேற்று  ஹவேரி தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நேரு ஒலேகருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர்  பாஜக கட்சிக்கு எதிராகவும் 
முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு  எதிராகவும் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கட்சி தலைமைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய நேரு ஒலேகர் ஆதரவாளர்கள், முதல்வர் பசவராஜ் பொம்மை புகைப்படத்தை செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 

போராட்டத்திற்கு பிறகு தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த நேரு ஒலேகர் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மறுபுறம் பெலகாவி நகரில் பாஜக மேலவை உறுப்பினரும் முன்னாள் துணை முதல்வருமான லக்ஷ்மண் சவதிக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,  பாஜக கட்சியில் இருந்து விலகி அவர் சுயேட்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவரை சமாதானம் செய்ய நேற்று  பாஜகவின்  பெலகாவி மாவட்ட செயலாளர் சென்றார். அப்போது அவரை லக்ஷ்மண் சவதி ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு கடுமையாக வாக்குவாதம் செய்தனர். 

மேலும், அவரைத் தாக்கவும் முயற்சித்தனர். உடனடியாக லக்ஷ்மண் சவதி தனது ஆதரவாளர்கள் மத்தியில் சிக்கிய பாஜக மாவட்ட செயலாளரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் வழி அனுப்பி வைத்தார். பாஜக மாவட்டத் தலைவர் காரில் கிளம்ப முயற்சித்த போதும் பாஜக தொண்டர்கள் காரை முற்றுகையிட்டு காரை தாக்கியதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அதேபோல் பெங்களூரு நகரில் உள்ள பைத்தராயணபுர  தொகுதியில் முனேந்திர குமாருக்கு பாஜக வாய்ப்பு மறுத்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் தொகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

'மூடிகரே' தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.பி. குமாரசாமிக்கு போட்டியிட வாய்ப்பு மறுத்துள்ள நிலையில் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதிவியை ராஜினாமா செய்வதாகவும் பாஜக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த பிறகு அவர் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 'சொகடு சிவன்னா' -வும்  தேர்தலில் போட்டியிட பாஜக மறுத்துள்ள நிலையில்  அவரும் கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாகப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 

 ஒரே நாளில் பாஜக கட்சியில் மூன்று முக்கிய தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதும்  பாஜக கட்சிக்கு எதிராக மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதும்,  பாஜக கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 
இந்நிலையில் சில தலைவர்கள் மட்டுமே கட்சியில் இருந்து விலகி வருவதாகவும் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் கட்சியில் தொடர்ந்து பயணிப்பதாகவும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் "சில இடங்களில் தேர்தல் பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள் பதவியை  ராஜினாமா செய்துள்ளனர். நான் அனைவரிடமும் சமாதானம் செய்து வருகின்றேன். கட்சி தலைமையும் சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அனைத்தும் சரியாகும் என்று நம்பிக்கை உள்ளது"; என்றும் தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com