சூடுபிடித்த மகாராஷ்டிரா அரசியல் களம்...சிவசேனா கட்சி, சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

சூடுபிடித்த மகாராஷ்டிரா அரசியல் களம்...சிவசேனா கட்சி, சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிக்கு, வில் அம்பு சின்னத்தை வழங்கியுள்ளதன் மூலம், அந்த அணியே உண்மையான சிவசேனா கட்சி என்பதை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் உட்கட்சி மோதலால் பிளவு ஏற்பட்டது. இந்த பிளவு காரணமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள், உத்தவ் தாக்கரேவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார். இதையடுத்து கடந்தாண்டு ஜூன் மாதம் பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணியில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே. துணை முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார்.

இதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அதிமுகவும், அதிமுக சின்னமும் எங்களுக்கு தான் என்று ஈபிஎஸ்க்கும், ஓபிஎஸ்க்கும் நடக்கும் மோதல் போக்கை போலவே, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் சின்னம் யாருக்கு என்ற போட்டி நிகழ்ந்து வருகிறது. இதனால் சிவசேனா கட்சி மற்றும் வில் அம்பு சின்னத்திற்காக ஷின்டே தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகியது.

இதையும் படிக்க : மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மக்களுக்கு 28 லட்சம் கோடி பரிமாறப்பட்டுள்ளது - பிரதமர் பேச்சு!

அப்போது, சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றதும், அக்கட்சியின் சின்னமான வில் அம்பு சின்னம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய உரிய சான்றுகளை சமர்பிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, சின்னம் தொடர்பான ஆவணங்களை இரு தரப்பும் சமர்பித்தது. அதில் நாங்கள்தான் உண்மையான சிவசேனா என்பதால், ஷிண்டே இதில் உரிமை கோர முடியாது என உத்தவ் தாக்ரே தரப்பு குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் ஆணையம் யாருக்கு சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னம் ஒதுக்குவது குறித்த ஆணையை வெளியிட்டுள்ளது. அதில் சிவசேனா கட்சியில் இருக்கும் 55 எம்.எல்.ஏக்களில் 40 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவிற்கு தான் ஆதரவு அளிப்பதாலும், கட்சி அமைப்புகளில் அவர்களுக்கு உள்ள ஆதரவு குறித்த ஆவணங்களின் அடிப்படையிலும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா எனவும், அவர்களுக்கே கட்சியி வில் அம்பு சின்னம் ஒதுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் சிவசேனா கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தான் என்பது உறுதியாகி இருந்தாலும், இந்த அறிவிப்பு உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவையே காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த பின்னணியில், தமிழ்நாட்டில் அதிமுகவிலும் இதுபோன்ற ஒரு சூழல் தான் நிகழ்ந்து வருவதால், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு அதிமுகவில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விகள் அரசியல் பார்வையாளர்களிடையே நிலவி வருகிறது.