முகத்தை சிதைத்து கொடூரக்கொலை.. ஒருதலைக்காதலனின் ஆத்திர முடிவு !!

முகத்தை சிதைத்து கொடூரக்கொலை..  ஒருதலைக்காதலனின் ஆத்திர முடிவு !!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியின் முகத்தில் கல்லை தூக்கிப்போட்டு ஒரு இளைஞன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. முதலில் மண்ணெண்ணெய் ஊற்றவே, இளம்பெண் சேற்றில் புரண்டதால் தீப்பற்ற வைக்க முடியாத ஆத்திரத்தில் கல்லைப் போட்டு கொலை செய்த கொடூர இளைஞன் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.....

கெங்கவல்லி அருகே கூடமலையில் குத்தகைக்கு நிலத்தை எடுத்து முருகேசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவரின் 19 வயதான மகள் ரோஜா ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ தமிழ் இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் ரோஜாவும் அவர் சகோதரியான 21 வயது நந்தினியும் விவசாயத் தோட்டத்தில் வேலை செய்து வந்தனர்.

அப்போது  ரோஜாவை ஒருதலையாக காதலித்து வந்த 22 வயதான சாமிதுரை என்பவர் அங்கு சென்று ரோஜாவிடம் பேசியபோது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடவே, ஆத்திரமடைந்த சாமிதுரை கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை இருவர் மீதும் ஊற்றியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தீப்பற்ற முயற்சிக்கவே, தடுத்துப் பார்த்தும் முடியாததால் அக்காவான நந்தினி அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது.

அதற்குள் அருகிலிருந்த சேற்றுக்குள் உருண்டதால் ரோஜா மீது சாமிதுரையால் தீப்பற்ற வைக்க முடியாத நிலையில், கோவத்தின் உச்சிக்கு சென்ற சாமிதுரை அருகில் இருந்த கல்லை ரோஜாவின் முகத்தில் போட்டதாக சொல்லப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ரோஜா பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இந்நிலையில், தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய சாமித்துரையை தேடி வருகின்றனர். 

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 3 ஆண்டுகளாக ரோஜாவை ஒருதலையாக காதலித்து வந்த சாமித்துரை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவர் சென்ற கல்லூரிப் பேருந்தை வழிமறித்து தகராறு செய்தது தெரியவந்தது. புகாரின் பேரில் சாமித்துரையின் உறவினர்களை அழைத்துப் பேசி எச்சரித்து அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அக்கா நந்தினியின் திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ரோஜாவை கொடூரமாக கொன்றுள்ளார் சாமிதுரை.

விருப்பமில்லை என தெரிந்த பின்னரும் என்னை எப்படி ஒரு பெண் வேண்டாம் என சொல்லலாம் என்ற அர்த்தமற்ற எண்ணமே, அவரை கொடூரமாக கொலை செய்யும் பயங்கர எண்ணத்துக்கு தள்ளியுள்ளது. காதலிக்க மறுப்பு என்ற காரணத்தினால் பெண்களுக்கு மட்டும் இக்கொடூர முடிவுகள் நேர்வது தொடர்கதையாகி வரும் நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.