ஈ.பி.எஸ் க்கு நீதிபதிகள் வைத்த கேள்வியும்...அதற்கு ஈ.பி.எஸ் அளித்த பதிலும்...!

ஈ.பி.எஸ் க்கு நீதிபதிகள் வைத்த கேள்வியும்...அதற்கு ஈ.பி.எஸ் அளித்த பதிலும்...!

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறுவதற்கு தடைக்கோரி ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில் இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடந்தது. அப்போது முதல் அமர்வில் நீதிபதிகள் ஈபிஎஸ் தரப்புக்கு வைத்த நான்கு கேள்விகளும், அதற்கு ஈ.பி.எஸ் தரப்பினர் இன்று கூறிய பதில் குறித்து தற்போது பார்க்கலாம்:

கேள்வி 1 - ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதியாகிவிட்டதா?  

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை. கட்சி விதிகளை திருத்தம் செய்ய ஒட்டுமொத்த தொண்டர்களையும் அழைக்கும் வலிமை பொதுக்குழுவிற்கு உண்டு. பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சிக்கு எதிராகவும் பொதுக்குழுவுக்கும் எதிராகவும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரே வழக்கு தொடர்ந்துள்ளார்.  

கேள்வி 2 - ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ள போது பொதுவக்குழுவை அவைத்தலைவர் எப்படி கூட்ட முடியும்? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழகம் எப்படி கடிதம் அனுப்ப முடியும். 

மொத்த கட்சியும் தனக்கு எதிராக இருப்பதாக நினைத்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இன்னும் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை. அதாவது அந்த பதவிகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்படவில்லை. இந்த பதவிகளுக்கு பொதுக்குழுவிற்கு ஒப்புதல் பெறப்படவில்லை என்று தேர்தல் ஆணையத்தில் குறிப்பிட்டு இருக்கிறோம். இதனால் பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையில் கூட்டத்தை கூட்ட முடியும். தடைகேட்ட ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்க.

அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களில் கோர்ட் தலையிட முடியாது. கட்சி பொதுக்குழு விவகாரங்களை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வரைவு நிகழ்ச்சிகளுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தரவில்லை. தற்போது வெளியிடப்படும் வரைவு நிகழ்ச்சிகள் கட்சி அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டவை . பொதுக்குழுவை கூட்ட பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் : ஈபிஎஸ் தரப்பு

கேள்வி 3 - பொதுக்குழுவை கூட்ட எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்?

பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர், பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரைக் கோரினால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் 30-க்குள் அவ்வாறு செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து நடத்தும் பொதுக்குழு கூட்டத்திற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும். இதை தமிழில் உள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மிகத் தெளிவாக கூறுகிறது.