"உனக்கு முன்னாடி, இவருக்கு பின்னாடி.." வடிவேலு பட பாணியில் ஒரு நிஜ சம்பவம் !!

"உனக்கு முன்னாடி, இவருக்கு பின்னாடி.."  வடிவேலு பட பாணியில் ஒரு நிஜ சம்பவம் !!

தூத்துக்குடியில் வடிவேலு பட பாணியில் கர்ப்பிணி மனைவியை அவரின் விருப்பத்துக்கிணங்க மற்றொருவருடன் காவல் ஆய்வாளர் அனுப்பி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக கர்ப்பிணியின் கணவரும், அவரை அழைத்துச் சென்ற நபரின் மனைவியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் கண்ணீருடன் புகாரளித்துள்ளனர். காதல் திருமணம் செய்த மனைவி திருமணமான ஒரே ஆண்டில் எடுத்த முடிவு, நால்வரின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்....

மருதமலை படத்தில் பதற்றத்துடன் வந்த புதுமண தம்பதிக்கு பாதுகாப்பு அளித்து இருவரையும் சேர்த்து வைக்க முற்படும் வடிவேலுவின் காட்சிகள் தான் இவை. அடுத்தடுத்து கணவர் என கூறிக்கொண்டு பலர் வரவே, குழப்பத்தில் உறைந்து போவார் வைகைப்புயல். கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு சம்பவம் தூத்துக்குடியில் தற்போது நடந்தேறியுள்ளது..

தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவிலைச் சேர்ந்த அந்தோணி முத்துவும் அதே பகுதியைச் சேர்ந்த ஞானதீபம் என்பவரும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த ஞானதீபம், கடந்த 15ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிகிறது. மனைவி திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த அந்தோணி முத்து இதுதொடர்பாக முத்தையாபுரம் காவல்நிலையம் சென்று  புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஒருசில நாட்களுக்குப்பின் அந்தோணி முத்துவுக்கு போன் செய்த முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன், ஞானதீபம் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இளைஞரான பிரதீப்புடன் காவல் நிலையத்துக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து ஞானதீபத்தின் கர்ப்பத்துக்கு பிரதீப் தான் காரணம் எனவும் அவருடன் செல்ல ஞானதீபம் விருப்பம் தெரிவித்ததால் இருவரையும் அனுப்பி வைப்பதாகவும் குறிப்பிட்டார். இதனால் அதிர்ச்சிடைந்து அந்தோணி முத்து காவல்நிலையம் சென்று தட்டிக்கேட்டபோது, ஞானதீபத்துடன் பேச முற்பட்ட அந்தோணி முத்துவின் தந்தையை காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், தந்தையை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி அந்தோணி முத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் வேறொருவரின் மனைவியை அழைத்துச் சென்ற தன் கணவன் பிரதீப்பை மீட்டுத் தருமாறு அவரின் மனைவி ஐஸ்வர்யாவும் புகாரளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஞானதீபத்துடன் ஏற்பட்ட தொடர்பால் கணவன் பிரதீப் தன்னை விட்டு பிரிந்து அவருடன் சென்றதாகவும் கண்ணீருடன் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் விவாகரத்து பெறாமல் திருமணமான கர்ப்பிணியை வேறொருவருடன் அனுப்பி வைத்து தாக்குதலும் நடத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கணவனை இழந்து நிர்கதியாய் நிற்கும் மனைவிக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. வடிவேலு பட பாணி ரீதியில் கேட்பதற்கு இச்சம்பவம் நகைச்சுவையாய் இருக்கும் போதும், திருமணத்தை மீறிய உறவின் தகாத முடிவால் இருவரின் வாழ்வு திக்கற்று நிற்பதும் கவனிக்கத்தக்கது.