பாய்ந்து வந்த முதலையை தோசைக் கல்லால் அடித்து விரட்டிய முதியவர்..! 

ஆவேசமாக பாய்ந்து வந்த முதலையை முதியவர் ஒருவர் தோசைக் கல்லால் அடித்து காட்டுக்குள் அனுப்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாய்ந்து வந்த முதலையை தோசைக் கல்லால் அடித்து விரட்டிய முதியவர்..! 

வயதானவர்கள் என்றாலே ஏதாவது பேசிக்கொண்டு, கிடைப்பர்வர்களுக்கெல்லாம் அறிவுரை கூறிக் கொண்டு இருப்பார்கள் என்ற எண்ணம் தான் முதலில் அனைவருக்கும் வரும். ஆனால், அவர்கள் ஆவேசமானால் அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பதை அவ்வப்போது யாராவது  நிரூபித்துக் கொண்டு தான் உள்ளனர். 

உலகில் மற்ற நிலப்பரப்புகளுடன் இல்லாமல் தனித்து விடப்பட்டு இருக்கும் பகுதிகளில் ஒன்று ஆஸ்திரேலியா. இப்படித் தனித்து விடப்பட்டு இருப்பதாலேயே அங்கு பல அபூர்வ விலங்குகள் இருக்கும். கங்காருகள் முதல் பெரிய பெரிய முதலைகள் வரை பலவற்றை நாம் அங்குப் பார்க்க முடியும். இதனால் ஆஸ்திரேலியாவில் நகர்ப் பகுதிகளைத் தவிர்த்துப் பிற பகுதிகளில் மனித-மிருக மோதல்கள் அடிக்கடி ஏற்படும். அங்கு நகரங்களுக்கு வெளியே வசிப்பவர்கள் கங்காருகளைச் சந்திப்பதோ அல்லது முதலை, பாம்பு போன்ற பயங்கர உயிரினங்களை வீட்டில் எதிர்கொள்வதோ அதிசயமான நிகழ்வு இல்லை.

இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் விலங்குகளை விரட்ட எப்போதும்  ஆயுதங்களை வைத்திருப்பர். ஆனால், சில நேரங்களில் எதிர்பாராத நேரத்தில் விலங்குளை எதிர்க்க ஆயுதங்கள் கிடைக்காது. அப்போது, கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தான் நிலைமையை சமாளிக்க வேண்டும். அது போன்ற ஒரு சம்பவத்தின் வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகின்றது.

ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன்னை ராட்சத முதலை தாக்க வந்த போது, கையில் இருந்த தோசைக் கல்லையே ஆயுதமாக மாற்றி இருக்கிறார். வாயைப் பிளந்து ஆவேசமாக கடிக்க வரும் முதலையைக் கண்டு துளியும் அஞ்சாமல் தோசைக் கல்லைக் கொண்டு முதலையின் தலையில் அடிக்க, அந்த முதலை அப்படியே திரும்பி காட்டிற்குள் சென்றுவிட்டது.  இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் அந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த முதியவரின் தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர்.