அரசின் சலுகையில் ஏற்பட்ட குளறுபடியால் தவிடுபெடியாகிய மாணவியின் மருத்துவக் கனவு!! மாணவியின் மருத்தவப் படிப்பு நனவாகுமா...?

அரசின் சலுகையில் ஏற்பட்ட குளறுபடியால் தவிடுபெடியாகிய  மாணவியின் மருத்துவக் கனவு!! மாணவியின் மருத்தவப் படிப்பு  நனவாகுமா...?

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருநெல்லிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தூய்மை பணியாளர் முனுசாமி. இவரது மகள் ராகவி ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கோபாலபுரத்தில் உள்ள அரசு பள்ளியில், தமிழ் வழிக்கல்வி படித்து வந்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 481 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த இந்த மாணவிக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசின் சலுகையில் தனியார் பள்ளியில் படிக்க அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. 

இதனையடுத்து அரசின் உதவியோடு மேல்நிலை கல்வியான 11 மற்றும் 12-ம் வகுப்புகளை, தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். அத்துடன், கடந்த 2021-ம் ஆண்டில் நீட் தேர்வு எழுதிய மாணவி அதில் 297 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி எடுத்துள்ள மதிப்பெண்களுக்கு தமிழக அரசின் 7 புள்ளி 5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் 23-வது இடம் கிடைத்துள்ளது. ஆனால், தனியார்ப் பள்ளியில் பயின்ற காரணத்திற்காக மாணவிக்கு உள் ஒதுக்கீடு மூலம் இடம் கிடைக்காமல் போனது. இதன் காரணமாக மாணவி ராகவி, நீட் தேர்வில் 2ஆயிரத்து,36-வது இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளார். 

இதனால் மாணவியின் நீண்ட நாள் மருத்துவ கனவு தவிடு பொடியாகியுள்ளது. கிராமத்தில் ஏழைமை நிலையில், அரசு பள்ளியில் படித்து வந்த மாணவியை, அரசின் சலுகையால், தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளது அரசாங்கம். ஆனால், அந்த சலுகையே, மருத்துவப் படிப்பிற்கு தடையாய் வந்து நிற்கும் என்று ராகவி, அப்போது நினைத்திருக்கமாட்டார்.

தமிழக அரசின் 7 புள்ளி 5 சதவீதம் உள் ஒதுக்கீடு என்பது தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடையாது என்பது அரசின் விதி. ஆனால் பணம் கட்டி படிக்க வேண்டியிருந்தால், இந்த மாணவியால் கண்டிப்பாக தனியார் பள்ளியில் படித்திருக்க முடியாது. அரசே பணம் செலுத்தி தனியார் பள்ளியில் படிக்க வைத்துவிட்டு, இறுதியில் இதையே காரணம் காட்டி உள் ஒதுக்கீடு இல்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று வேதனை தெரிவிக்கிறார் மாணவி ராகவி. ஆர்.டி.இ. மூலம் தனியார் பள்ளியில் படித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் படித்த தனக்கு மட்டும் இடமளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பும் மாணவி, இந்த குளறுபடியால், பாதிக்கப்பட்ட தன்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு முதலமைச்சர் தலையிட்டு, நல்ல தீர்வு காண வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளர். 

மாணவியின் கனவான மருத்துவப் படிப்பை நனவாக்கித் தர வேண்டும் என்பதே இந்த ஏழைத் தந்தையின் வேண்டுகோளாக உள்ளது. இதுபோன்ற குளறுபடியால் ராகவி போன்ற ஏராளமான  மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே அரசு இதனை  உரிய முறையில் ஆய்வு செய்து, மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.