ஓடும் ரயில் முன் குதித்து இளம்பெண்ணை காப்பாற்றிய அசல் ஹீரோ!! இணையத்தில் செம வைரல்

ஓடும் ரயில் முன் குதித்து இளம்பெண்ணை காப்பாற்றிய அசல் ஹீரோ!! இணையத்தில் செம வைரல்

சரக்கு ரயில் எதிரே வர, தண்டவாளத்தில் தவறி விழுந்து ஓடமுடியாமல் தவித்த பெண்ணை கண்ணிமைக்கும் நொடியில் உண்மையான ஹீரோ போல் குதித்து காப்பாற்றிய துணிச்சல்மிக்க மனிதரை மத்திய பிரதேச மாநிலமே கொண்டாடி வருகிறது.

சமீப காலமாகவே யாரோ ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுவதும்,  யாரோ ஒருவர் அவர்களை ஒரு சில வினாடிகளில் காப்பாற்றி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தண்டவாளத்தில்  மின்னல் வேகத்தில் வந்த ரயில் முன் நின்ற இளம்பெண்ணை கடைசி நொடியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டது. இதேபோன்று இன்னொரு சம்பவம் கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்றது. ரயில்வே பிளாட்பாரமில் தனது தாயுடன் நடந்து சென்றிருந்த குழந்தை திடீரென்று  தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது மின்னல் வேகத்தில் ரயில் வருவதை பார்த்து குழந்தையின் தாய் திக்குமுக்காடி போன நேரத்தில், யாரோ ஒரு இளைஞர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் இறங்கி குழந்தையை காப்பாற்றி நொடி பொழுதில் தன்னையும் காப்பாற்றிக்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலானது. இதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது மத்திய பிரதேசத்திலும் அரங்கேறியுள்ளது.

ஆம். மத்திய பிரதேச மாநிலம், போபால் அருகேயுள்ள பர்கேடியில் அமைந்துள்ள மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு முகமது மெகபூப் என்பவர், ரெயில் தண்டவாளம் பாதை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இளம்பெண் ஒருவர் முதுகில் பையை சுமந்தவாறு தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தார். அந்த சமயம் தண்டவாளத்தில் அதிவேகத்தில் ஒரு சரக்கு ரயில் வரதொடங்கியுள்ளது. அதைப்பார்த்து பீதியடைந்த அந்தப்பெண் அலறியவாறே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். ஆனால் பயத்தில் அந்தப்பெண் முதுகில் வைத்திருந்த பையுடன் தவறி கீழே விழுந்து விட்டார். மீண்டும் அவரால் எழுந்து ஓட முடியாமல் தண்டவாளத்தில் அழுதபடியே கிடந்துள்ளார். அந்த வழியே சென்றுக்கொண்டிருந்த  பலரும் சரக்கு ரயில் அருகில் வருவதை பார்த்துக்கொண்டு செய்வதறியாது திகைத்து போய் நின்றனர்.

இந்நிலையில்  முகமது மெகபூப், தண்டவாளத்தில் சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்ததை கொஞ்சமும் யோசிக்காமல் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஒரு உண்மையான ஹீரோ போல் ரெயில் முன் குதித்து, மின்னல் வேகத்தில் அந்தப் பெண்ணை தண்டவாளங்களுக்கு நடுவே இழுத்து படுக்கப்போட்டு, அவரது தலைக்கு நேராக தானும் தலை வைத்துப்படுத்துக்கொண்டு அந்தப் பெண்ணை தலையைத் தூக்க விடாமல் பார்த்துக்கொண்டார். ரயிலின் 28 பெட்டிகளும் கடந்து செல்லும் வரை அவர்கள் எழுந்து விடாமல் இருக்க அருகில் இருந்தவர்கள் எச்சரித்துக்கொண்டே இருந்தனர். இதனையடுத்து ரெயில் முழுமையாக கடந்து சென்ற பின்னர் இருவரும் தண்டவாளத்தை விட்டு எழுந்து வந்து பெருமூச்சு விட்டனர்.

கிட்டதட்ட மரணத்தின் விளிம்பின் வரை சென்று வந்த அந்தபெண், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ரயிலின் முன் குதித்து தன்னை காப்பாற்றிய முகமது மெகபூப்-பை கட்டித்தழுவி கண் கலங்கினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 5-ந் தேதி சரியாக இரவு  8 மணியளவில் நடந்த இந்த சம்பவம், தற்போதுதான் முகமது மெகபூப்பின் நண்பர் சோயப் ஹாஸ்மி மூலம் ஊடக உலகுக்கு வந்துள்ளது. மேலும், மரணத்தின் விளிம்பில் இருந்த பெண்ணை நொடிபொழுதில் காப்பாற்றிய முகமது மெகபூப்பை “இவர்தான் அசல் ஹீரோ” என்று மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.