கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவின் வளர்ச்சி.. இத்தனை கோடி மக்களுக்கு இப்போதைய தலைவர்களை பிடிக்கவில்லையா?

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் நோட்டாவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளதாம்..!

கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவின் வளர்ச்சி.. இத்தனை கோடி மக்களுக்கு இப்போதைய தலைவர்களை பிடிக்கவில்லையா?

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் 1.29 கோடி பேர் நோட்டாவிற்கு ஓட்டு போட்டிருப்பதாக வெளியான தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்தல் என்றாலே எவ்வித தேர்தலாக இருந்தாலும், அதில் பெரும்பான்மையாக இரண்டு கட்சிகள் மட்டும் தான் ஆளுமை வகிப்பதாக இருக்கும். உதாரணத்திற்கு சட்டமன்றம் என்றால் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக தான் கடந்த 50 ஆண்டுகளாக. அதேபோல மத்திய அரசு என்றால் பாஜக, காங்கிரஸ் தான். பிற கட்சிகள் இருந்தாலும் கூட அவற்றின் செயல்பாடுகளோ அல்லது நடவடிக்கைகளோ வெளியே தெரிய ஆரம்பிக்க சில காலம் பிடிக்கும். மக்கள் மத்தியில் அந்த புதிய கட்சிக்கு எப்படி மக்களின் ஆதரவு கிடைக்கின்றது என்பதை தேர்தலின் போது வாங்கும் வாக்குகளை வைத்து தான் கணக்கிட முடியும்.  மக்களுக்கு ஒரு தேர்தலில் நிற்கக் கூடிய எந்த ஒரு கட்சியினையும் பிடிக்கவில்லை என்றால் வாக்குப் பதிவை செய்யாமல் வீட்டிலேயே இருப்பர். 

அப்படி தேர்தலில் போட்டியிடுபவர்களை பிடிக்கவில்லை, அல்லது இவர்களில் யாரையும் தேர்ந்தெடுக்க எங்களுக்கு விருப்பம் இல்லை என்பதை தெரிந்து கொள்வதற்காகவே உருவாகப்பட்டது தான் நோட்டா. 2013-ம் ஆண்டு  அறிமுகம் செய்யப்பட்டது இந்த நோட்டா. இந்த நோட்டா தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமடைய காரணமாய் இருந்தது பாஜக கட்சி தான். எப்படி என்றால் 2017-ம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக சார்பில் போட்டியிட்ட கருநாகராஜன் 626 ஓட்டுகள் மட்டுமே வாங்கி டெபாசிட்டை இழந்திருந்தார். அதே தேர்தலில் நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் 1,151. அந்த சமயத்திலும், அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் இந்த வாக்கு விகிதம் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்வதற்கு ஏதுவாக இருந்தது. 

நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பாஜக என பிற கட்சிகள் வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர். இதற்கு அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தராஜன், நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற தேசிய கட்சி என்ற கூற்று பாஜகவுக்கு பொருந்தாது என விளக்கம் கொடுத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் நோட்டா என்றால் என்ன? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது. அதேபோல 2018-ம் ஆண்டில் கூட மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தலின் போது, குவாலியர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நாராயணன் சிங் குஷ்வாஹா 121 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். இங்கு நோட்டா பெற்ற வாக்குகள் 1,550. 

இப்படி தேசிய கட்சிகளை தாண்டியும் நோட்டா பெற்ற வாக்குகள் ஆங்காங்கே அதிகரிக்கத் துவங்கியது. இதன் மூலம் மக்கள் மனதில் கட்சிகள் மற்றும் தலைவர்களின் செல்வாக்கு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த நிலையில், கடந்த 2018 முதல் 2022 வரை நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் நோட்டாவுக்கு பதிவான வாக்குகள் குறித்த ஏ.டி.ஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ஆய்வு மேற்கொண்டது. 

அதில், கடந்த 5 ஆண்டுகளில் 1 கோடியே 29 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. சட்டசபை தேர்தல்களில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 65 லட்சத்து 23 ஆயிரத்து 975. மகாராஷ்ட்ராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நோட்டாவுக்கு 7 லட்சத்து 42 ஆயிரத்து 134 வாக்குகள் கிடைத்தது. இதுவே நோட்டாவுக்கு கிடைத்த அதிகபட்ச வாக்குகள் ஆகும். அதேபோல கடந்த 2018-ம் ஆண்டு மிசோரத்தில் நடந்த தேர்தலில் 2 ஆயிரத்து 917 ஓட்டுகள் கிடைத்தது. இதுவே நோட்டாவுக்கு கிடைத்த குறைந்தபட்ச வாக்குகள் ஆகும். 

நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை அதிகபட்சமாக நோட்டாவுக்கு, பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில், 51 ஆயிரத்து 600 வாக்குகள் கிடைத்தது. அதேபோல குறைந்தபட்சமாக லட்சத்தீவு தொகுதியில் 100 வாக்குகள் கிடைத்ததாக ஏ.டி.ஆர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.