பெரியார் சிலை உடைக்கப்படும் நாள் இந்து எழுச்சி நாள்.. தலைமறைவான கனல் கண்ணனுக்கு போலீசார் வலைவீச்சு..!

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எழும் ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை விவகாரம்..!

பெரியார் சிலை உடைக்கப்படும் நாள் இந்து எழுச்சி நாள்.. தலைமறைவான கனல் கண்ணனுக்கு போலீசார் வலைவீச்சு..!

பெரியார் சிலை அமைக்க தீர்மானம்: 108  திவ்ய தேசங்களில் ஒன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாத பெருமாள் கோவில். நாள் ஒன்றுக்கு சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து செல்லும் இடம். தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களின் லிஸ்ட்டில் நிச்சயம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அமைந்திருக்கும். ஒவ்வொரு நாளும் பூஜைகளும், புனஷ்காரங்களும் தவறாமல் நடைபெறும். அப்படிப்பட்ட கோவில் முன்பு கடவுள் மறுப்பாளரும், பகுத்தறிவாளருமான பெரியாரின் சிலை வைக்க வேண்டும் என 1973-ம் ஆண்டே முனிசிபல் கவுன்சில் தலைவரான வெங்கடேஷ்வர தீக்‌ஷிதர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு 144 சதுர அடியில் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே நிலம் ஒதுக்கப்பட்டது. 

2-வது முறையாக சிலை அமைப்பு: ஆனால் இதற்கு பல இந்து அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இந்த பணி கிடப்பில் போடப்பட்டது. அதனை தொடர்ந்து 1996-ம் ஆண்டு பெரியார் சிலை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி இந்த பணியினை துவக்கி வைத்தார். ஆள் உயர சிலை வைக்கப்பட்ட போது, சிலை திறப்பிற்கு முன்பே மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இருப்பினும் மீண்டும் அங்கு சிலை வைக்க திராவிட கழகத்தினர் முடிவு செய்து, இம்முறை வெண்கல சிலையை நிறுவினர். 

இரும்பு வேலி அமைக்க தி.கவினர் எதிர்ப்பு: திராவிடர் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இந்த வெண்கல சிலை திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு போராட்டங்களை நடைபெற்றதால் காவல்துறையினர் முழுவதும் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்னதாக வைத்திருந்த பெரியார் சிலையை தங்களது பாதுகாப்பு வளையத்தில்  கொண்டுவந்தனர். ஆயினும் அந்த சமயத்தில் பல இடங்களில் பெரியாரின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வந்ததால், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு இரும்பு வேலி அமைக்க காவல்துறையினர் முடிவு செய்து அதற்கான பணியினை தொடங்கினார். ஆயினும் இதற்கு திராவிட கழகத்தினரே எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களுக்கு சொந்தமான இடத்தில் நாங்கள் சிலை வைத்துள்ளோம் அதற்கு எப்படி நீங்கள் இரும்பு வேலி அமைக்கலாம் என வாக்குவாதம் செய்தனர். 

மீண்டும் வெடிக்கும் சர்ச்சை: நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலுக்கு முன்னே கடவுளே இல்லை எனக் கூறிவந்தவரின் சிலையை வைப்பது, இந்துக்கள் மீதான வெறுப்புணர்வை வெளிப்படுத்துவது போன்று இருப்பதாக இந்து அமைப்பினர் இன்று வரையிலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பிரபல திரைப்பட ஸ்டெண்ட் மாஸ்டரான கனல் கண்ணனின் பேச்சு மீண்டும் இந்த பிரச்னையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. 

சிலை உடைக்கும் நாள் தான் இந்து எழுச்சி நாள்: கடந்த 1ம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார். அவரது சர்ச்சைக்குரிய இந்த பேச்சுக்கு, சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு: இதுகுறித்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் அளித்தார். அதில், இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கனல்கண்ணன் பேசியுள்ளதால் அவர் மீதும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

தலைமறைவாக உள்ள கனல்கண்ணன்: இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  பின்னர், கனல் கண்ணனை கைது செய்ய மதுரவாயல் வீட்டிற்குச் சென்ற சைபர் கிரைம் போலீசார், அங்கு அவர் இல்லாததால் வடபழனி, வளசரவாக்கம் வீடுகளிலும் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அங்கும் அவர் இல்லை. ஆகையால் தலைமறைவாக உள்ள கனல் கண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை விவகாரம், கனல் கண்ணனின் பேச்சால் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.