ஒரு சூறாவளி கிளம்பியதே... மாண்டஸை காட்டிலும் வேகமாக சுழலும் முதலமைச்சர்..

மக்களின் நலனை கருதியும், தமிழ்நாட்டின் நலனை கருதியும் தொடர்ந்து ஓய்வின்றி உழைத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய உழைப்பு பாராட்டுதலுக்குரியது.

ஒரு சூறாவளி கிளம்பியதே... மாண்டஸை காட்டிலும் வேகமாக சுழலும் முதலமைச்சர்..

மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மதுரை, தென்காசி சென்று நேற்று மாலை சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின் சென்னை விமான நிலையத்திலிருந்து நேராக எழிலகம் சென்ற முதலமைச்சர், அங்குள்ள அவசர கட்டுப்பாட்டு அறைக்கு சென்று மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளிடம் விசாரித்தார்.

அதற்கு பின்னர் வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரவு நேரங்களிலும் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாண்டஸ் புயலின் நிலவரங்கள் குறித்தும், மக்களின் பாதுகாப்பு குறித்தும் விசாரித்து வந்தார்.

ஓய்வறியா முதலமைச்சர்

இரண்டுநாள் சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பிய முதலமைச்சர், இன்று காலை விடிந்ததும் மழையாலும் புயலாலும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சிறு சிறு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வரும் முதலமைச்சரை ஓய்வெடுக்கும் படி அவரது மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாது மக்களின் நலனை கருதியும், தமிழ்நாட்டின் நலனை கருதியும் தொடர்ந்து ஓய்வின்றி உழைத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய உழைப்பு பாராட்டுதலுக்குரியது.

மாண்டஸ் ஏற்படுத்திய பாதிப்பு

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரை மாமல்லபுரம் அருகில் கரையைக் கடந்த நிலையில், மீனவர்கள் அதிகம் உள்ள கிழக்கு கடற்கரை சாலைப் பகுதிகளில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும், சென்னையில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்த நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள், பேரிடர் மீட்பு படையினர் இடைவிடாது மேற்கொண்டு வருகின்றனர்.

களத்தில் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வுவினை மேற்கொண்டார். மேலும் மக்களிடம் நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனே அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர். பின்பு கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து புறப்பட்டு பட்டினம்பாக்கம் வந்த மு.க.ஸ்டாலின் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பிரட் மற்றும் போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

சேதமடைந்த விசை படகுகள்

பட்டினம்பாக்கத்தில் இருந்து காசிமேடு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புயலால் சேதமடைந்த 100 விசைப்படகுகளையும் மற்றும் நீரில் மூழ்கிய 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் பார்வையிட்ட முதலமைச்சர் அங்கிருந்த பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது எ.வ.வேலு, சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிக்க | ”இன்று மதியத்திற்குள் மின்சாரம் சீராகும்...” அமைச்சர் செந்தில் பாலாஜி

இழப்பீடு கோரிய மீனவர்கள்

மாண்டஸ் புயலால் நீரில் மூழ்கி சேதமடைந்த தங்களது விசைப்படகுகளுக்கு தகுந்த இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டுமென்று முதலமைச்சரிடம் மீனவர்கள் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து மீனவர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் சேதமடைந்த விசைப்படகுகள் கணக்கெடுக்கப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

வியப்பில் ஆழ்த்திய முதலமைச்சர்

பொதுவாக 60 வயதைக் கடந்தவர்கள் அதனை ஓய்வெடுப்பதற்கான வயது என்பார்கள். ஆனால், 70 வயதை தொட இருக்கும் ஒருவர் தனது வயதும், உடல் நிலையும் ஒத்துழைக்காத நிலையிலும், பெருங்காற்றும், கடுங்குளிரும் வீசுகின்ற சூழலில், உயர் அதிகாரிகளுக்கோ,  அமைச்சர்களுக்கோ ஆணையிட்டு விட்டு வீட்டில் ஓய்வெடுக்க எண்ணாமல், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற பின்னிரவு தொடங்கி சூறாவளி போல் சுழன்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உழைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

-அறிவுமதி அன்பரசன்