இனி நடிக்கமாட்டேன்...தமிழகத்தை இந்தியாவின்...மாற்றுவதே இலக்கு...உதயநிதி பேட்டி!

இனி நடிக்கமாட்டேன்...தமிழகத்தை இந்தியாவின்...மாற்றுவதே இலக்கு...உதயநிதி பேட்டி!

தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்றுவதே இலக்கு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பரபரப்பு பேச்சு:

தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில நாட்களாகவே, ஏற்பட்ட பரபரப்பான பேச்சு என்னவென்றால் அது உதயநிதியின் அமைச்சர் பதவி தான். எப்போது உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சுகள் அடிப்பட்டது. 

அதிகாரப்பூர்வ அறிக்கை:

இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி இரவு அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியானது. முதலமைச்சர் முகஸ்டாலின் பரிந்துரையின் பேரில் ஒப்புதல் வழங்கிய ஆளுநர், டிசம்பர் 14 ஆம் தேதி சென்னை ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் சேப்பாக்கம் - திருவல்லிகேணி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ உதயநிதி அமைச்சராக பொறுபேற்பார் என்று ஆளுநர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமைச்சரான உதயநிதி:

அதன்படி, டிசம்பர் 14 ஆம் தேதியான இன்று ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி பதவியேற்றார்.

இதையும் படிக்க: உதயநிதியின் திறமைக்கு...இது காலதாமதமே...அமைச்சர் பகீர்!

மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை:

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி, தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபடி ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதன்மூலம் தமிழகத்தை இந்திய விளையாட்டுத்துறையின் தலைநகரமாக மாற்றுவதே இலக்கு எனவும் உறுதியளித்தார். மேலும், முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன்; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

இனி நடிக்கமாட்டேன்:

தொடர்ந்து பேசிய அவர், திரைப்படங்களில் இனி நடிக்கப்போவதில்லை எனவும் ,மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள மாமன்னன் படமே எனது கடைசி திரைப்படம் எனவும், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். 

வாரிசு அரசியல் கேள்வி:

வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி,  முதலில் இருந்தே இந்த வாரிசு அரசியல் என்ற விமர்சனங்கள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போதும் அதே விமர்சனம் தான் எழுந்து வருகிறது. அதனால் வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என்று கூறினார்.