கலைமகனே எழுந்து வா..! கதறி அழுத கர்நாடக முதலமைச்சர்..!

புனித் ராஜ்குமாரின் நெத்தியில் முத்தமிட்டு உருக்கம்..!

கலைமகனே எழுந்து வா..! கதறி அழுத கர்நாடக முதலமைச்சர்..!

கன்னட சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் கடந்த 29-ம் தேதி உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு, பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி புனித் ராஜ் உயிரிழந்தார். 46 வயதில், கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிரிழந்தது திரையுலகினரையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்றவுடனேயே கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மருத்துவமனை சென்று அவரை நலம் விசாரிக்க சென்றார். ஆனால் அங்கு அவர் உயிரிழந்து விட்டார் என்றவுடன் அங்கேயே அவருக்கு அஞ்சலி செலுத்தினார். ஒரு நடிகர் இறந்ததற்கு எதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று தோனலாம். ஆனா புனித் வெறும் நடிகராக மட்டும் இல்லை. அவர் நூற்றுக்கணக்கான படங்களை நடித்து தள்ளவில்லை. குறைந்த அளவிலான படங்கள் மட்டும் தான் நடித்திருக்கிறார். நடிப்பையும் தாண்டி, 48 இலவச பள்ளிக்கூடங்கள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 1,800 மாணவ, மாணவியரின் கல்வி  என வருமானத்தை தனக்கு மட்டுமில்லாமல் மக்களுக்காகவும்  வாழ்ந்து வந்த கன்னட திரையுலகின் மன்னன் புனித் ராஜ்குமார். 

ஒரு அரசியல் தலைவருக்கு எந்த அளவுக்கு மக்கள் கூட்டம் கூடுமோ அதை விட பல மடங்கான மக்கள் இன்று புனித் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கூடினர். அதையும் தாண்டி, அம்மாநில முதலமைச்சர் புனித் ராஜ்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் அவரது உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் தூரம் வரை கொட்டும் மழையில் நின்றப்படி ரசிகர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுத பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் குறிப்பாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, புனித் ராஜ்குமாரின் நெத்தியில் முத்தமிட்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. 

கண்டீவரா ஸ்டேடியத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, புனித்தின் உடலுக்கு அருகாமையில் வந்த பிறகு, அவர் மேல் வைக்கப்பட்டிருந்த அந்த பெட்டியை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதன் படி புனித் உடல் மீது வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியை எடுத்த பிறகு அவரது நெத்தியில் முத்தமிட்ட படி, கலைமகனே எழுந்து வா என கதறி அழுது புலம்பினார் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தனிப்பட்ட முறையில் அப்பு குடும்பத்தினருடன் எனக்கு பிணைப்பு இருந்தது. நான் அவரை சிறுவனாக பார்த்திருக்கிறேன். அந்த நாட்களில் இருந்தே எங்களுக்குள் நெருங்கிய உறவு இருந்தது. எனவே, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்துகிறேன். நிச்சயமாக, நான் உணர்ச்சிவசப்பட்டேன். இது எனக்கு தனிப்பட்ட இழப்பு. சிறந்த திறமைசாலியை இழந்துவிட்டோம்" என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.

அவர் மட்டுமின்றி, முன்னாள் முதலமைச்சர்கள் எடியூரப்பா, சித்தராமையா, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். கன்னட திரையுலகினர் மட்டுமின்றி, இந்திய திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வருத்தத்தை இணையதளம் வாயிலாக பகிர்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். நடிகர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ஜூனியர் என்டிஆர், யஷ் மற்றும் நடிகைகள் சுமலதா, ரம்யா, ரக்ஷிதா உட்பட 100-க்கும் மேற்பட்டோரும், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று காலை கண்டீவரா ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கியது. ரசிகர்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனத்திற்கு பின்னால் ஓடி சென்றனர். யஷ்வந்த்பூர் அருகிலுள்ள கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் புனித் ராஜ்குமாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. புனித் ராஜ்குமார் நம்மை விட்டு மறைந்திருந்தாலும் அவர் செய்திருந்த கண் தானம் மூலம், இரண்டு பேரின் கண் வழியாக நம்மை பார்த்துக் கொண்டே தான் இருப்பார்.