உலக வரலாற்றின் கருப்பு நாள்: இரட்டை கோபுர தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்....

நியூயார்க் நகரின் இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 20 வருடங்கள் ஆனது அடுத்து பொதுமக்கள் பலரும் மலர்வளையம் வைத்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உலக வரலாற்றின் கருப்பு நாள்: இரட்டை கோபுர தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்....

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நேரப்படி காலை 08.46 மணிக்கு நியூயார்க் நகரின் அடையாளமான வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு மைய கோபுரம் மீது விமானம் ஒன்று மோதியது. பின்னர் 17 நிமிடங்களில் மற்றொரு விமானம் உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தின் மீது மோதியது. கட்டடம் தீப்பற்றி எரிந்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் மீது ஒரு விமானம் மோதியது. அமெரிக்கா மட்டுமல்ல உலகமே இந்தக் காட்சிகளைக் கண்டு உறைந்து போனது. என்ன நடக்கிறதென்று தெரியாமல் அமெரிக்கர்கள் நிலைகுலைந்து போயினர்.இந்த தாக்குதல்களில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். 

ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல்-கெய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டு இந்த தாக்குதலை அரங்கேற்றியது பின்னர் தெரியவந்தது. 19 பயங்கரவாதிகள் குழுக்களாகப் பிரிந்து, விமான நிலையங்களில் பாதுகாப்பு வளையங்களை மீறி விமானங்களுக்குள் நுழைந்து நடுவானில் அவற்றைக் கடத்தி இந்த தாக்குதலை நேர்த்தியாகத் திட்டமிட்டு அரங்கேற்றியது கண்டறியப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாததிகளை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் ஆப்கானிஸ்தான் மண்ணில் கால்பதிக்க இது முக்கிய காரணமாக அமைந்தது. அதுமட்டுமல்ல, 2001ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இந்த 20 ஆண்டு கால சர்வதேச அரசியலைத் தீர்மானித்ததும், இந்த தாக்குதல்தான். தலிபான்களிடம் ஒசாமா பின் லேடன் தஞ்சம் புகுந்த நிலையில், அவரை ஒப்படைக்க தலிபான்கள் மறுத்ததால், ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒழித்துக் கட்டியது தீவிரம் காட்டியது அமெரிக்கா.

10 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஒசாமா பின் லேடன் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டு, அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். ஆனால் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் எண்ணம் நிறைவேறவில்லை. அமெரிக்காவின் வர்த்தக மையத்தின் மீதான தாக்குதல் நடந்து 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (11.09.2021) அனுசரிக்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள் பலரும் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.