பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையில் ஈபிஎஸ் , ஓபிஎஸ் இருவரையும் தனித்தனியே சந்தித்தது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் :
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அதிமுக தரப்பில் இருந்து ஈபிஎஸ் அணி கே.எஸ். தென்னரசையும், ஓபிஎஸ் அணி செந்தில் முருகனையும் அறிவித்தது.
ஈபிஎஸ்சை மறுத்த தேர்தல் ஆணையம் :
ஆனால், அதிமுக பொதுக்குழு வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்குமாறு ஈபிஎஸ் தரப்பு மனுதாக்கல் செய்தனர். இதற்கு ஓபிஎஸ்சிடம் பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்ததால், ஈபிஎஸ் சின் மனுவை ஏற்க கூடாது என்று ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். இதனிடையே தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்க மறுத்துவிட்டது.
அண்ணாமலை சந்திப்பு :
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக தரப்பில் இருந்து இரண்டு அணிகளாக போட்டியிடவுள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் தனித்தனியே நேரில் சந்தித்து பேசினார். இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை நிராகரித்த நிலையில், நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
சி.டி.ரவி பேச்சு :
பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அதற்கு முன்னதாக, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தீயசக்தி திமுகவை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும், அதற்காக அதிமுகவை ஒருங்கிணைக்க தொடர்ந்து முயற்சி செய்வோம் என்று கூறினார்.
அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் :
அதன்பின் பேசிய அண்ணாமலை, சொத்துவரி, மின்கட்டணம் உள்ளிட்டவற்றை ஏற்றி தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உறுதியான, நிலையான, வலுவான ஒரு வேட்பாளர் தேவை. அதற்கு அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதனால் தான், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியையும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நேரில் சந்தித்து தனித்தனியாக நிற்காமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி வந்ததாக கூறினார்.
ஒரே வேட்பாளர் :
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் நிலைப்பாடு எதிர்க்கட்சியாக தனித்தனியாக நிற்காமல் ஒரே கட்சியாக இருந்து, ஒரே வேட்பாளரை நிறுத்தி திமுகவை ஜெயிக்க வேண்டும் என்பது தான் அகில இந்திய பாஜகவின் கருத்தும் கூட என்று அண்ணாமலை தெரிவித்தார். ஏற்கனவே, அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னம் யார் பக்கமோ அவர்களுக்கு தான் எங்கள் ஆதரவு என்றும் அதிமுக தோழமை கட்சிகள் தெரிவித்து வந்த நிலையில், இன்று பாஜகவும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற அதே நிலைப்பாட்டை தான் அதிமுகவுக்கு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.