மீண்டும் மகாராஜாவை தன் வசப்படுத்திய டாடா..! கடனில் இருந்து மீளுமா ஏர் இந்தியா..?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி கொடுத்து, மீண்டும் அதன் தாய் வீடான டாடா குழுமம் மீட்டெடுத்துள்ளது. ஏர் இந்தியா கடந்து வந்த பாதை மற்றும் அதன் நீண்ட தூர பயணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

மீண்டும் மகாராஜாவை தன் வசப்படுத்திய டாடா..!  கடனில் இருந்து மீளுமா ஏர் இந்தியா..?

பரந்து விரிந்த இந்திய துணைக் கண்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளையும் விரைவாக இணைப்பதற்கு விமானப் போக்குவரத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் விமானத் துறை வரலாறு பாரம்பரிய சுவை நிறைந்தது. 1903-ல் ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டறிந்த நிலையில், அதற்கு அடுத்த வெகு சில ஆண்டுகளிலிருந்தே, இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையின் வரலாறும் துவங்கியிருக்கிறது. முதலில் தங்களது சொந்த தேவைகளுக்காக சில பணக்காரர்கள் மட்டுமே விமானங்கள் வைத்திருந்தனர்.

அப்படிப்பட்ட விமான போக்குவரத்தை இந்தியாவில் முதன்முதலாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது டாடா குழுமம்தான். ஆம், உலகில் பணக்காரர்கள் பட்டியலில் தழைத்தோங்கி நிற்கும் டாடா குழுமம் முதன்முதலாக விமான போக்குவரத்தை தொடங்கியது.. 1932-ம் ஆண்டு அக்டோபர் 15 அன்று ஏர் மெயில் என்ற பெயரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இதைத் தொடங்கியவர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா. இவர்தான் நமது நாட்டில் முதல் வணிக விமான ஓட்டுனர் உரிமம் பெற்றவர்.

சரக்கு விமானச் சேவையாகத் தொடங்கிய டாடா ஏர் மெயில் மிக விரைவில் லாபமீட்டும் நிறுவனமாக மாறியது. 1933-ஆம் ஆண்டு 60 ஆயிரம் ரூபாய் லாபமீட்டிய டாடா ஏர் மெயில், 1937-ஆம் ஆண்டு 6 லட்சம்  ரூபாயை லாபமாக ஈட்டியது. 1938-ஆம் ஆண்டு டாடா ஏர் மெயில் நிறுவனத்தின் பெயர் டாடா ஏர்லைன்ஸ் என மாற்றப்பட்டது. அந்தச் சமயத்தில் 2-ஆம் உலகப் போர் ஏற்படவே டாடா ஏர்லைன்ஸின் முழு கட்டுப்படும் பிரிட்டனிடம் சென்று, போர் முடிந்த பின்பு மீண்டும் டாடா கைகளுக்கு வந்தது.

இந்நிலையில், 1946-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டு ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை இந்திய அரசு கையகப்படுத்தி, பின்பு 1953-ம் ஆண்டு இந்திய அரசு ஏர் கார்ப்பரேஷன் சட்டத்தை நிறைவேற்றி ஏர் இந்தியாவை நேரு அரசு முழுமையாக கைப்பற்றியது.

1994-ம் ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான சேவை வழங்கும் நிறுவனமாக ஏர் இந்தியா மட்டுமே இருந்தது. அதன் பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை லாபத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா தனியார் துறையின் போட்டி காரணமாக படிப்படியாக நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்த ஏர் இந்தியாவை மீட்க கடந்த 2011ம் ஆண்டு மத்திய அரசு 30 ஆயிரம் கோடி பங்களிப்பு செய்து பலனில்லாமல் போனது. இதன் தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாகத் தனியாருக்கு விற்பனை செய்தால் மட்டுமே பிரச்னை தீரும் என்று எண்ணிய மத்திய அரசு கொள்கை ரீதியான முடிவை எடுத்தது.

இதன் தொடர்ச்சியாகப் பல நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டியில் இறங்கின. இந்த டெண்டர் உள்துறை அமைச்சர் அமித்ஷா  தலைமையில் நடைபெற்றது. இதில் டாடா சன்ஸ் நிறுவனம் அதிக தொகையைத் தனது டெண்டரில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நேற்று இதனை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆம், ஏர் இந்தியாவை விற்பதில் டாடாவின் ஏல விருப்பம் ஏற்கப்பட்டுள்ளதாக இந்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

கடந்த 1953-ஆம் ஆண்டில் டாடா குழுமத்திடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு 2 புள்ளி 8 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலையில், தற்போது 68 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 18 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த விற்பனை ஒப்பந்தப்படி 5 ஆண்டு காலத்துக்கு ஏர் இந்தியாவின் பிராண்டை டாடா வேறு எந்த நிறுவனத்திற்கும் வழங்க கூடாது, ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் குறைந்தபட்சம் ஓர் ஆண்டிற்கு பணியில் வைத்திருக்க வேண்டும், 5 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ஓர் இந்தியருக்கு மட்டுமே இந்நிறுவனத்தை மாற்றித் தரலாம் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் 60 ஆயிரம் கோடி அளவில் நஷ்டத்தில் இருக்கும் ஏர் இந்தியாவை, டாடா குழுமம் மீண்டும் லாபமீட்டும் நிறுவனமாக மாற்றுமா..? என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.