6000 செவிலியர்களுக்கு...உடனடியாக ஆணை வழங்க வேண்டும்...தவறினால் பாஜக...அண்ணாமலை ஆவேசம்!

6000 செவிலியர்களுக்கு...உடனடியாக ஆணை வழங்க வேண்டும்...தவறினால் பாஜக...அண்ணாமலை ஆவேசம்!

செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய திமுக அரசு, உடனடியாக அவர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்காவிட்டால், தமிழக பாரதிய ஜனதா கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செவிலியர்களுக்கு தற்காலிக பணிநியமன ஆணை:

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செவிலியர்களின் நிரந்தர பணி ஆணை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா பெருந்தொற்று நம்மை ஆட்டிப்படைத்த காலத்தில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் தொய்வின்றி உழைத்து நோய் தொற்று உள்ளவர்கள் குணமடைய அயராது பாடுபட்டவர்களில் செவிலியர்களின் பங்களிப்பு அளப்பரியது. 

கொரோனா பெருந்தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி செய்ய செவிலியர்களுக்கு தற்காலிக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறு தமிழகத்தில் 14000 ரூபாய் மாத சம்பளத்திற்கு சுமார் 6000 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணை 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கான ஆணை கொரோனா தொற்று பெருகிவந்த காரணத்தால், 31-12-2022 வரையில் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது.

 திமுகவின் வாக்குறுதி;

திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 356ல், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. 

இதையும் படிக்க: ஆங்கில புத்தாண்டு...வாழ்த்து தெரிவிக்கும் தலைவர்கள்...!

இதற்குமுன் பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் போராட்டம் நடத்தியபோது, பணி நிரந்தரம் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் “விரைவில் நல்ல செய்தி வரும்” என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.

பணிநிரந்தரம் வழங்கப்படாது:

அதன்படி, புத்தாண்டு தினத்தன்று பணி நிரந்தர ஆணை வரும் என்று எதிர்பார்த்திருந்த 6000 செவிலியர்களுக்கு இடியாக வந்து இறங்கியது சுகாதாரத்துறையின் அரசாணை. 31.12.2022க்கு பிறகு தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படாது என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அண்ணாமலை கேள்வி:

தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்றாத திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றுவார்களா என்ன? தங்கள் உயிரை துச்சமாக கருதி பணிசெய்த செவிலியர்களுக்கு திறனற்ற திமுக அரசு கொடுத்த புத்தாண்டு பரிசு இதுதானா? என்று கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, உடனடியாக 6000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கப்பட வேண்டும். தவறினால், அவர்களுக்காக தமிழக பாரதிய ஜனதா கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.