ஆப்கானிஸ்தனை ஆட்டிபடைக்கும் தலிபான்கள்.. யார் இந்த தலிபான்கள்..?

ஆப்கானிஸ்தனை ஆட்டிபடைக்கும் தலிபான்கள்.. யார் இந்த தலிபான்கள்..?

ஈரக்குலையை நடுங்க வைக்கும் துப்பாக்கி சத்ததும், அப்பாவி மக்களின் அழுகுரலும் உலகம் முழுக்க எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தாலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால், மீண்டும் அந்நாட்டுக்குள் மறுபடியும் குறி வைத்து உள்ளே நுழைந்தனர் தாலிபான்கள். 

அமெரிக்கப்படைகளின் பாதுகாப்பில் இருந்து வந்ததால், தப்பித்த ஆப்கானிஸ்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிரடியால் பதுங்கியிருந்த தாலிபான்கள் வெளியே வந்தனர். வெறும் ஏழே நாட்களில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர் தாலிபான்கள். இறுதியாக தலைநகர் காபூலையும் நேற்று கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி செய்வது உறுதியாகிவிட்ட நிலையில், எங்கே மறுபடியும் பழைமைவாத நிலை தலைதூக்கிவிடுமோ என்ற அச்சத்தில், மக்கள் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைய கூட்டம் கூட்டமாக ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறி வருகின்றனர். என்னதான் ஆட்சி மாறினாலும் பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படாது. எங்களைப்பார்த்து பயப்பட வேண்டாம் என்று தாலிபான்கள் சொன்னாலும், அதை மக்கள் நம்பத்தயாராக இல்லை.

இதற்கு காரணம், தாலிபான்களின் பழமைவாதம் மீண்டும் தலைதூக்கிவிடும் என்ற அச்சம்தான். அதாவது, தாலிபான்களின் கைகளில் ஆட்சி கிடைத்துவிட்டால், கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் அமலுக்கு வரும் என்பதால்தான் மக்களுக்கு இந்த அச்சம்.

ஆம் யார் இந்த தாலிபான்கள், இவர்களின் தலைவன் யார் என்கின்ற ஹிஸ்டிரியை தோண்டிப் பார்த்தால், சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் இருந்து வந்ததில் இருந்துதான் தொடங்க வேண்டும். பல்வேறு நாடுகளை ஒன்றிணைத்து சோவியத் யூனியன் அல்லது சோவியத் ஒன்றித்திற்கும் அமெரிக்காவுக்கும் நெடுநாட்களாக யுத்தம் நடந்து வந்தது. 

உலக நாடுகள், அமெரிக்கவின் பக்கமும் சோவியத் பக்கமும் இருபிரிவாக பிரிந்து நின்றது. இந்தியாவைப் போலவே இரண்டு பக்கமும் சேராமல் பல நாடுகள் இருந்தது. இந்நிலையில் 1978ல் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவில் ஆட்சி அமைத்தது இடதுசாரிகள் கம்யூனிஸ்ட். ஆட்சியை அமைத்த ஒரே வருடத்தில் அரசு கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டுக்குள் நுழைந்த சோவியத் படைகள் அந்நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக யுத்தம் செய்ய அமெரிக்காவின் ஆதரவுடன் வளர்க்கப்பட்டவர்களே முஜாகிதீன்கள். அப்போது சோவியத் ஒன்றியத்திற்கு இடையூறுகளை உண்டாக்க அமெரிக்கா இஸ்லாமிய தீவிரவாத கோட்பாட்டை உருவாக்கியது. அங்கிருந்துதான் ஜிகாத் புனிதப்போர் என்கின்ற இன்றைய அமெரிக்கா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் சொற்கள் உருவானது.

சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக, இஸ்லாம் போராளிகள் கொரில்லா தாக்குதலை நடத்தினார்கள்.  இதை அமெரிக்காவும் ஊக்குவித்தது. ஆனால் அமெரிக்காவுக்கு அப்போது தெரியாது, தாமும் அந்தப் படுகுழியில் தள்ளப்படுவோம், சிக்கி சின்னாபின்னமாவோம் என்று. சுமார் 10 ஆண்டுகள் சமாளித்து பார்த்த சோவியத் ஒன்றியம், லட்சக்கணக்கில் மக்களையும், பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களையும் காவுக் கொடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற உலகளவில் நெருக்கடியும் கூடியது. இதனால் 1988ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியது சோவியத் ஒன்றியம்.

அப்போது, அமெரிக்கா உருவாக்கி வைத்திருந்த இஸ்லாமிய போராளிகளுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த சண்டையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தில் பாகிஸ்தான் பேராதரவுடன் உருவாகியதுதான் உலகையே நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த தாலிபான்கள்.

ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் முகாமிட்டிருந்த தாலிபான்களை பாகிஸ்தான் அரவணைத்துக் கொண்டது. மதரஸாக்களில் படித்தவர்கள் தாலிபான் இயக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இப்படியே படிப்படியாக தாலிபான்கள் ஆப்காஸ்தானைச் சுற்றி பரந்து விரிந்தது. 1998 ஆம் ஆண்டு தலைநகர் காபூலை கைப்பற்றியது. அப்போது அமெரிக்க ஆதரவுடன் இருந்த புர்ஹானுதீன் ரப்பானியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்திற்கு வந்தனர் தாலிபான்கள். 

அப்போது அரங்கேற்றிய சட்டதிட்டங்களைக் கண்டுதான் இன்று மக்கள் நடுநடுங்கிக் கொண்டு வெளியேறி வருகின்றனர். உலகையே நடுநடுங்க வைக்கும் அந்த சட்டதிட்டங்கள் தான் என்ன?

முதலில் தொலைக்காட்சி, சினிமா என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் தடைவிதித்ததது.  பெண்கள் கட்டாயம் முகத்தை மூட வேண்டும். ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும். குற்றவாளிகளுக்கு பகிரங்கமாக மக்கள் கண்முன்னே தண்டனைகள் நிறைவேற்றுவது என உலக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

அவ்வளவு ஏன்? 2001ஆம் ஆண்டு பாமியான் புத்தர்சிலையை தாலிபான்கள் வெடிவைத்து சிதைத்தது இன்றும் நம்மால் மறக்க முடியாது. இதனால் தாலிபான் அரசை உலக நாடுகள் ஏற்க மறுத்தது. ஆனால், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரெட்ஸ், சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் மட்டுமே அரவணைத்துக் கொண்டது.  ஒருகாலத்தில் பாகிஸ்தான் அரவணைப்பில் உருவான இந்த தாலிபான்கள் பிற்காலத்தில் பாகிஸ்தானுக்கே அச்சுறுத்தலாக மாறினர். இதே ஆப்கானிஸ்தானில் அபின் போன்ற போதைப் பொருட்களை தடைசெய்ததும் இதே தாலிபான்கள்தான்.

அப்போதைய தாலிபான் ஆட்சிகாலத்தில்தான் ஒசாமா பின்லேடன் கண்ட்ரோலில் இருந்த அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் உருவானது. இதன் தொடர்ச்சியாக 2001ஆம் ஆண்டு உலகையே அதிர வைத்த இரட்டைகோபுர தாக்குதலையும் நடத்தியது இதே அல்கொய்தாதான்.  19 பேர் கொண்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலால் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டனர். இப்படியான பயங்கரவாதம் உலகம் முழுக்க உலக ஒழுங்கு என்பது பெரிய அளவில் பரவியது. இதனால் தனிநாடு, சுதந்திரம், விடுதலை, யுத்தம் என எந்தப் போராட்டமானாலும் அது பயங்கரவாத லிஸ்டில் சேர்க்கப்பட்டது. இதில் விடுதலைப்புலிகள் இயக்கமும் அதில் சேர்க்கப்பட்டு சிதைந்துப்போனது.

இந்த இரட்டைகோபுரத்தாக்குதலைத் தொடர்ந்து ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நோட்டோ படைகள் களமிறங்கியது. அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட தாலிபான்கள் கடந்த 19 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கப்படைகள் வெளியேறியதால் மீண்டும்  நாட்டைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளனர். காபூலை கைப்பற்றி ஆட்சியை உருவாக்க இருக்கிறது.  அதோடு நாட்டின் பெயரையும் இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று மாற்றிவிட்டனர்.

ஆனால் யார் இந்த தலிபான்கள் என்று பார்த்தால், 
தலிபான்கள் இயக்கத்தை உருவாக்கியது ஒற்றை கண் முல்லா ஒமர். அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் 2016-ல் முல்லா ஒமர் கொல்லப்பட்டார். தற்போது தலிபான்கள் இயக்கத்தின் தலைவராக இருப்பது  Haibatullah Akhundzada. அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஐமன் அல் ஜவஹிரியின் தீவிர விசுவாசி. முல்லா ஒமரின் மரணத்துக்குப் பின்னர் தாலிபான்கள் இயக்கம் சிதறிப் போகாமல் இருக்கச் செய்தவர் இவர். தாலிபான்கள் தலைவர்களில் முக்கியமானவர் முல்லா பார்தார். ஒற்றை கண் முல்லா ஒமரின் நெருங்கிய நண்பரான பார்தார், 2010-ல் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டார். 

தாலிபான்களின் அரசியல் பிரிவு தலைவர்தான் இந்த பார்தார். சோவியத்துக்கு எதிராக அமெரிக்கா ஆதரவுடன் ஆட்சியை பிடித்த ரப்பானியின் மகன் சிராஜூதீன் ஹக்கானி. தாலிபான்கள் இயக்கத்தின் துணைத்தலைவர் ஹக்கானி. அத்துடன் ஹக்கானி நெட்வொர்க் என்கிற பயங்கரவாத இயக்கத்தின் தலைவர். இந்த அமைப்பு அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகும். ஒற்றைக் கண் முல்லா ஒமரின் மகன் முல்லா யாகூப், தாலிபான்களின் ராணுவ பிரிவு தளபதி. இவர்களின் கட்டுப்பாட்டில்தான் தாலிபான்கள் இயக்கம் இருக்கிறது. இப்போது அமைதி வழியில் ஆட்சிப் பெற முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் தாலிபான்கள். உலக நாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து கொண்டும் இருக்கின்றன. தாலிபான்கள் அரசாளப் போகும் இருண்ட காலத்தை நோக்கி ஆப்கானிஸ்தான் தள்ளப்பட்டுவிட்டது!