வாரிசு அரசியல் - யுக்தியை மாற்றிய காங்கிரஸ்...!

வாரிசு அரசியல் - யுக்தியை மாற்றிய காங்கிரஸ்...!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மறைவையடுத்து , பிப்ரவரி மாதம் 27-ந் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்.  அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிய நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், கட்சி மற்றும் பதவிகளில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர். 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி. ரவீந்திரநாத் குமாரிடம் தோல்வியடைந்தார். பின் பெரிதாக கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில் 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தனது மூத்த மகனான திருமகன் ஈ.வெ.ராவை ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கினார். 

இதையும் படிக்க : இடைத்தேர்தல்: தேர்தல் பணிக்குழுவை அமைத்த திமுக...யார் யார் தெரியுமா?

தன்னை எதிர்த்து போட்டியிட்ட தாமகா வேட்பாளர் யுவராஜை 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திருமகன் ஈ.வெ.ரா. கடந்த ஜனவரி 4ம் தேதி திடீரென உடல்நல குறைவால் காலமானார். அதனை தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானதையடுத்து, 3 மாநில தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் அறிவித்தது தேர்தல் ஆணையம். மீண்டும் திமுக அத்தொகுதியை காங்கிரஸிக்கு ஒதுக்கிய நிலையில், வேட்பாளர் யார் என்ற கேள்வி கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய்தான் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் எனது இளைய மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன் என தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெற்ற நிலையில்,  தீவிர கட்சி பணியாற்றியவர்களுக்கே வருங்காலங்களில் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும். வாரிசாக இருந்தாலும் கட்சி பணிகளில் 5 வருடங்களுக்கு மேல் தொண்டராக பணிசெய்திருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கருத்து கட்சி வட்டாரங்களில் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு வழங்க முடியாது வேண்டுமென்றால் கட்சிக்கு உழைத்தவர் என்ற அடிப்படையில் ஈவிகேஎஸ் -க்கு  வழங்கலாம் அவர் விரும்பாதபட்சத்தில் வேறு யாருக்காவது வழங்கப்படும் என்ற நிலை வந்ததாகவும், தொடர்ந்து தாமே போட்டியிடுகிறேன் என விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை நேற்று வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ் தலைமை.

மேலும் 2024 தேர்தலுக்கும் தற்போது பணியை தொடங்கிய காங்கிரஸ் பல முக்கிய முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

- மா.நிருபன் சக்கரவர்த்தி