கே.டி.ராகவனுக்கு செக் வைத்த அடுத்த அடி..! சிவசங்கர் பாபாவின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக புகார்..!

பகவானே இந்த லோகத்துல யாருக்குமே அக்கறை இல்லையா?

கே.டி.ராகவனுக்கு செக் வைத்த அடுத்த அடி..! சிவசங்கர் பாபாவின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக புகார்..!

பாஜகவின் மாநில பொது செயலாளராக இருந்து வந்தவர் கே.டி.செல்வராகவன். வகுடு எடுத்த தலை, கிளீன் சேவ் செய்த முகம், கண்ணாடி என பார்ப்பதற்கு அப்பாவியாக காட்சியளிக்கும் இவரை நாம் அடிக்கடி டிவி விவாத நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். பாஜக அறிவிக்கும் அனைத்து விதமான திட்டங்களுக்கும் சாதகமாக பேசி வந்தவர். இப்படியிருக்க, இந்த பூனையும் பால் குடிக்குமா? என்ற அளவுக்கு யோசிக்க வைத்தவரின் மதிப்பும், மரியாதையும் ஒரே ஒரு வீடியோவால் அதள பாதாளத்திற்கு சென்றிருக்கிறது. 

இளம் பெண்ணுடன் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொண்டது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்தா கே.டி.ராகவன். இந்த குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன் என சபதம் எடுத்து விட்டு செய்வதறியாது இருக்கும் அவருக்கு, அடுத்த அடியாக அமைந்திருக்கிறது சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு. அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என சிந்திக்கத் தோன்றுகிறதா? வாருங்கள் பார்ப்போம். 

கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் என்ற பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா, மாணவிகளிடம் பாலியல் ரீதியாக சீண்டல்களை செய்து வந்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார். சிவசங்கர் ஆசிரமத்தில் கே.டி.ராகவனின் மனைவி நடனம் கற்க சென்றதன் மூல, ஆரம்பித்திருக்கிறது ஆசிரமத்திற்கும், ராகவனுக்கும் இடையேயான தொடர்பு. சிவசங்கர் பாபா கைதானதற்கு பிறகு, அவரது அறநெறி இயக்கம் என ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, அவரது ஆதரவாளர்கள் சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக பேசி வந்தனர். குறிப்பாக திரைப்பட நடிகரும், சிவசங்கர் பாபாவின் ஆதரவாளருமான சண்முகராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசி வந்தார். 

சிவசங்கரின் பள்ளி மற்றும் அறக்கட்டளை நிர்வாகியாக செயல்பட்டு வரும் ஜானகி சீனிவாசன், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை ராகவன் மீது முன்வைத்தார். சிவசங்கர் பாபா சிறையில் இருக்கும் சமயத்தில், கேடி.ராகவன் ஆதரவுடன் ஜானகி குழுவினர் பிராமணர் அல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்து பாபாவின் சொத்துக்களை அபரிக்க முயற்சி செய்து வருவதாக அந்த இயக்கத்தினர் குற்றம் சுமத்தினர். மேலும், ஜானகி சீனிவாசன் சாதிய மனோபாவத்துடன் கடந்த 20 ஆண்டுகளாக பாபா மீது பக்தியுடன் இருந்த அடித்தள மக்களை விரட்டி அடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததுடன், பல்வேறூ பணிகளில் ஊழல் செய்ததாகவும், இதற்கு கே.டி.ராகவனும் உடந்தை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

சிவசங்கர் கைதுக்கு முன்னரே பத்திரிகைகளில் இதுதொடர்பான செய்தி வந்ததும், ஆசிரம நிர்வாகத்திடம் இதுபற்றி கேட்டதாகவும், அதற்கு இந்த மேட்டரை கே.டி.ராகவன் அமித்ஷா வரை கொண்டு சென்று விட்டார். கைது நடவடிக்கை இருக்காது என்று நிர்வாகத்தில் இருக்கும் ஜானகி சீனிவாசன் தெரிவித்ததாக சிவசங்கர் பாபா அறநெறி இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். சிவசங்கர் பாபாவின் வழக்கை நடத்துவது உள்ளிட்ட அனைத்து விதமான பொறுப்புகளையும் கே.டி.ராகவனின் மனைவி மீனாட்சி ராகவன் கவனித்து வருவதாகவும், இவர்கள் அனைவரும் சேர்ந்து சிவசங்கரை வெளியில் வராமல் தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.சிவசங்கர் கைது செய்யப்படும் 3 நாளில் வெளியே வந்துவிடுவார் என்று அவர்கள் கூறியதை சுட்டிக்காட்டும் அறநெறி இயக்கத்தினர், கே.டி.ராகவனின் அடியாளட்கள் பாபாவின் ஆசிரமத்தில் தங்கி, மற்றவர்களை மிரட்டி வருவதாகவும், பாபா மீது பொய் வழக்குகளை போட்டு, அவரது சொத்துக்களை கைப்பற்றும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த நிலையில், சிவசங்கர் பாபாவை கைது செய்யாமல் பாதுகாப்பதாகக் கூறி 3 கோடி ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியதாக பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி ராகவன் மீது சிவசங்கர் பாபா அறநெறி இயக்கத்தினர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர். பட்டக் காலிலே படும் என்பதற்கு இணங்க.. கே.டி.ராகவன் மீது அடுத்தடுத்து புகார்களும், சர்ச்சைகளும் கிளம்பத் துவங்கியுள்ளன. இனி என்ன என்ன புகார்கள், குற்றச்சாட்டுகள் வரும் என மக்களும், கமான் கமான், பத்தல, பத்தல, என நெட்டிசன்களும் காத்துக் கிடக்கின்றனர். பாஜகவினர் இதுவரை இதற்கு எந்தவிதமான கண்டனங்களோ அல்லது கருத்தோ தெரிவிக்காதது ஏன் எனவும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்ப நா உங்ககிட்ட என்ன சொல்றது..? என பாஜகவினரின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது...