1935 முதல் சிங்கப்பூர் தமிழர்களின் குரலாக ஒலிக்கும் ”தமிழ் முரசு” நாளிதழ் - முதலமைச்சர்!

1935 முதல் சிங்கப்பூர் தமிழர்களின் குரலாக ஒலிக்கும் ”தமிழ் முரசு” நாளிதழ் - முதலமைச்சர்!

இன்று சென்னை திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சிங்கப்பூர் - ஜப்பான் பயணம் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

மே 25 - வியாழக்கிழமை :

உதயசூரியனின் கதிர்க் கைகள் ஹோட்டல் அறைக்குள் நுழைந்து, பணிகளை நினைவுபடுத்தி எழுப்பின. காலைப் பொழுதில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் திரு.சண்முகம் அவர்களைச் சந்தித்தேன்.  இங்குள்ள தமிழர்கள் தாய்த்தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் வந்து பண்பாட்டுப் பெருமையை அறிந்து கொள்ளவும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உதவிடவும் ஆர்வமாக இருப்பதை எடுத்துக்கூறிய அவர், மதுரைக்கும் சிங்கப்பூருக்குமிடையே நேரடி விமானச் சேவை போதுமான அளவில் அமைந்தால் அவர்களின் ஆர்வம், செயல்பாடாக நிறைவேறும் என்பதைத் தெரிவித்தார். இந்திய மத்திய அரசிடம் இதனை வலியுறுத்தி, விரைவில் உரிய அளவில் விமானச் சேவைக்கு ஏற்பாடு செய்வதாக அவரிடம் தெரிவித்து, அவரையும் முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைத்தேன். சிங்கப்பூரின் முன்னாள் அதிபரான தமிழர் எஸ்.ஆர்.நாதன் அவர்களுக்குத் தமிழ்ப் பாடம் நடத்தியவர் முனைவர் சுப.திண்ணப்பன். தான் தமிழ் மேல் கொண்ட பற்றுக்குக் காரணமே, திருவாரூரில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேச்சுதான் எனப் பூரிப்பாகச் சொன்னார். சிங்கையில் தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர். அவரது தமிழ்ச் சேவையைப் பாராட்டி அவருக்குச் சிறப்பு செய்தேன். கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதை அவர் பாராட்டி, தமிழர் பெருமைக்கு இது ஒன்று போதும் என்று மனதாரப் புகழ்ந்தார்.

இதையும் படிக்க : மே 24 ல் நடந்த நிகழ்வை உணர்வுபூர்வமாக எழுதிய முதலமைச்சர்... !

சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’ நாளிதழ் அந்நாட்டுத் தமிழர்களின் குரலாக 1935 முதல் ஒலித்து வருகிறது. திருவாரூரில் பிறந்து, சிங்கப்பூரில் வளர்ந்து, அந்நாட்டு அரசுடன் இணைந்து தொண்டாற்றிய தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களால் வார ஏடாகத்  தொடங்கப்பட்ட இந்த இதழ் இன்று நாளேடாக சிங்கப்பூர்-மலேசியா தமிழர்களிடம் தனி இடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர் பயணம் பற்றி ‘தமிழ் முரசு’ இதழுக்கு ஒரு நேர்காணல் அளித்தேன். 

தமிழர்கள் நிறைந்துள்ள சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்று, அங்கு தமிழர்களுடன் தேநீர் அருந்தியும், அவர்களுடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தேன். சிங்கப்பூர் பயணம் முழுவதுமே சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. அந்த உணர்வுடன், சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் நாட்டின் ஒசாகா நகருக்கு விமானத்தில் புறப்பட்டோம். 7 மணி நேரப் பயணம்.  பல ஆயிரம் மைல்கள் கடந்திருந்தாலும் மனது தமிழ்நாட்டையே சுற்றி வந்தது. வெளிநாட்டில் இருநதாலும், டி.வி. சேனல்கள், சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப், செல்போன் கால்கள் வழியாக தமிழ்நாட்டின் நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொண்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கியபடியேதான் இருந்தேன். இரவு 11 மணிக்கு ஜப்பான் நாட்டின் முக்கிய நகரமான ஒசாகா சென்றடைந்தோம். விமான நிலையத்தில், இந்தியத் தூதரகத்தின் கான்சல் ஜெனரல் திரு.நிகிலேஷ் கிரி வரவேற்பளித்தார்.

கடிதம் தொடரும்...