ஏறினால் ரயில்.. இறங்கினால் ஜெயில்..! நூற்றாண்டு காணும் சங்கரய்யா...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவின் 100ஆவது பிறந்த நாள் இன்று.

ஏறினால் ரயில்.. இறங்கினால் ஜெயில்..! நூற்றாண்டு காணும் சங்கரய்யா...

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவின் 15 ஆவது மாநிலச் செயலாளராகவும, இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவருமான சங்கரய்யா 1922, ஜூன் 22ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் பிறந்தார். பள்ளிபடிப்புக்குப்பின் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1937ஆண்டில் சேர்ந்தார்.

1938ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் அமைக்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் மாணவர்கள். இதேபோல் ததுரையிலும் மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1940ஆம் ஆண்டில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அந்தக் கிளையில் காங்கிரஸ் சோசலிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏ.செல்லய்யா, எஸ்.குருசாமி உள்ளிட்ட 8 பேர்களுடன் என் சங்கரய்யாவும் ஓர் உறுப்பினரானார். 

மாணவர் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோது இருந்த 36 தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர். தமிழ்நாடு சட்டமன்ற மதுரை மேற்கு சட்டமன்றத்தொகுதிக்கு 1967ஆம் ஆண்டிலும், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 1977, 1980ஆம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டர்ர். 1957, 1962ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

வறுமையின் நிறம் சிவப்பு அல்ல. வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு என்று முழக்கமிட்டவர் சங்கரய்யா. இவரது முதல் போராட்டமே இந்தி திணிப்பை எதிர்த்துதான். இந்திய போராட்டம் தொடங்கி மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்குமான போராட்டங்களும் இவரில்லாமல் நடந்ததில்லை என்றே சொல்லலாம்.

8 ஆண்டுகள் ஜெயில், 5 வருடம் தலைமறைவு வாழ்க்கை என்ற பல்வேறு தியாகங்களுக்கு சொந்தக்காரர். எண்ணில்லா அடக்குமுறைகளுக்கும் ஆளானவர். எண்ணற்ற தடியடிகளும் இவர் வசமானது. பேச்சினால் இளைஞர்களை கட்டிப்போட்டவர் இவர். இவர் பேச ஆரம்பித்தாலே இளைஞர் கூட்டத்துக்கு நரம்புகள் புடைக்கும். அந்த அளவுக்கு  வார்த்தைகளில் அனல் பறக்கும். மிகச்சிறந்த இலக்கியவாதி மட்டுமல்லாமல் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தார். ஜனசக்தி, தீக்கதிர் போன்றவற்றின் ஆசிரியராக இருந்தவர் சங்கரய்யா.

சாதி மறுப்புக் கொள்கையில் அதீத உடன்பாடு கொண்ட சங்கரய்யா எந்த மேடையில் ஏறினாலும் சாதி மறுப்பு திருமணங்களை பேசாமல் இருந்ததில்லை. குடும்பத்தில் சலசலப்புகள், விரோதங்கள் வந்தாலும் சாதி மதம் பார்க்காமல் உங்கள் வீட்டுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தவர்.

கலைஞர் கருணாநிதி மீது அளவிலாத பாசம் கொண்டவர் சங்கரய்யா. இவர்களின் நட்பு மிக நீளமானது மட்டுமல்லாமல் ஆழமானதும் கூட. இவர்களின் நட்புக்கு வானமே எல்லை. இவருக்கும் கருணாநிதிக்கும் 3 வயது மட்டுமே வித்தியாசம். கருணாநிதி அமைச்சராக இருந்தபோதே சங்கரய்யாவின் எத்தனையோ கோரிகைகளை நிறைவேற்றி தந்தவர். முதலமைச்சரான பிறகு சுயமரியாதைத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டங்களை கொண்டுவந்தபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சங்கரய்யா தான்.

சங்கரய்யா ஒரு பேட்டியில், ஜூலை 15ஆம் தேதி எனக்கு பிறந்தநாள். அன்னைக்கு காலைல 6 மணிக்கு எனக்கு ஒரு போன் தவறாமல் வந்துவிடும். அது நிச்சயம் கருணாநிதியிடமிருந்து வரும் போனாகத்தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

ஏறினால் ரயில்... இறங்கினால் ஜெயில் என்று வாழ்ந்தவர் சங்கரய்யா.  வரலாறு என்பதே வர்க்க போராட்டங்களின் தொகுப்புதான் என்ற காரல் மார்க்ஸின் கூற்றுக்கேற்ப ஒரு வரலாற்று வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் மூத்த தலைவர் சங்கரய்யா. இந்திய வரலாற்றில் மார்க்சிய இயக்கம் பெருமை பெற்றதென்றால் அது சங்கரய்யா போன்றவர்களின் ரத்தத்தாலும், உழைப்பாலும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.