ஒன்றிய அமைச்சராகும் ரவீந்திரநாத்? ப்ரஸர் கொடுக்கும் ஓபிஎஸ்! இடஞ்சல் செய்யும் அன்புமணி!

ஒன்றிய அமைச்சர் ஆவாரா ரவீந்திரநாத்?

ஒன்றிய அமைச்சராகும் ரவீந்திரநாத்? ப்ரஸர் கொடுக்கும் ஓபிஎஸ்! இடஞ்சல் செய்யும் அன்புமணி!
உத்தரப் பிரேதசம், குஜராத், உத்ரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும், அதனை தொடர்ந்து மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ளதால், மத்திய அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்து மாநிலங்களில் வெற்றியை பெற முயற்சி எடுத்து வருகிறது பாஜக மேலிடம்..
 
மத்திய அமைச்சர்களில் சிலரை சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பி கட்சி பணியாற்றுவதற்காக அனுப்பி வைத்து, புதிய அமைச்சர்களை நியமிக்கலாம் என திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. 
 
அப்படி மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டால் தமிழ்நாட்டிலிருந்தும் சிலர் அமைச்சராக வாய்ப்புள்ளதாக கிசு கிசுக்கப்படுகிறது. பாஜகவுடன் அதிமுக இணக்கமாக இருந்து வரும் நிலையில், ஓபிஎஸ் தனது மகனான ரவீந்திரநாத்குமாரை எப்படியாவது மத்திய அமைச்சரவையில் இடம் பெற வைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியது நாம் அறிந்ததே.
இந்த நிலையில், தற்போது அல்வா போல் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது ரவீந்திரநாத் குமாரை மத்திய அமைச்சரவையில் அமர வைத்து விடுவது என தீர்க்கமாக காய் நகர்த்தி வருகிறார் ஓபிஎஸ். இதற்காக அவர் இழந்தது கொஞ்ச நஞ்சம் இல்லை. சசிகலாவை ஒதுக்கி எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த பிறகு, கட்சியிலிருந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை தவிர்த்து, வேறு எந்த ஒரு பதவியையும் அவர் அடையவில்லை. துணை முதலமைச்சராக இருந்தவர் மீண்டும் தேர்தலில் முதலமைச்சராகி விடுவார் என்ற கனவு கண்ட போது, அதில் மின்னலை தாக்கி முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் தோற்றப் பிறகு எதிர்க்கட்சி தலைவர் பதவியாது கிடைக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், மிஞ்சியது துணை எதிர்க்கட்சி தலைவர் மட்டுமே. இத்தனையையும் பொருத்துக் கொண்டு அதிமுகவில் அதிகாரமின்றி இருப்பதற்கு ஒரே காரணம் எப்படியாவது மகனை மத்திய அமைச்சரவையில் இடம் பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே.
தந்தையின் கனவை மெய்பிக்க, எம்.பியாக வெற்றி பெற்ற பிறகு அதிமுகவிலேயே மோடியின் புகழ் பாடுபவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் ரவீந்திரநாத் குமார். கட்சியில் சீனியர்களான வைத்திலிங்கம், தம்பிதுரை போன்றோர் இருக்கையில் எப்படி ரவீந்திரநாத் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என எடப்பாடி முட்டுக்கட்டை போடுவதாக கிசுகிசுக்கப்பட்டது. 
 
என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் சசிகலாவுடன் இணைந்து விடுவோமா? அல்லது தர்ம யுத்தம் தொடங்குவோமா? என சிந்தித்துக் கொண்டிருந்து ஓபிஎஸ்க்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால், போட்டியின்றி ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சரவையில் அமர வைக்க தீவிரமாக களமிறங்கியுள்ளார் ஓ.பி.எஸ்.
அதிமுக ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் அன்புமணி மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார். ஏற்கனவே மன்மோகன் சிங் அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி, தற்போதுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தனுக்கு ஆலோசனைகளும் கூறி வந்தார். சுகாதாரம் இல்லை என்றாலும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக டாப் லெவலில் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.