போரை நிறுத்த சம்மதித்த புடின்..! அதற்கான நிபந்தனைகள் என்ன?

உக்ரைன் ரஷ்யா போர் தொடர்ந்து நான்காவது வாரமாக தொடர்ந்து நடந்து வருகிறது. போரை நிறுத்தப் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற போதும் கூட எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், போரை நிறுத்த ரஷ்யா அதிபர் புடின் ஒப்புக் கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கு பல நிபந்தனைகளையும் அறிவித்து உள்ளார். 

போரை நிறுத்த சம்மதித்த புடின்..! அதற்கான நிபந்தனைகள்  என்ன?

உலக நாடுகள் அனைத்தும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றே விரும்புகிறது. அதிலும் துருக்கி தான் இரு நாடுகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. அதுவும் கை கொடுக்க வில்லை. இந்த போரில் இந்தியா நடுநிலை வகித்து வரும் நிலையில்,சமீபத்தில் அமெரிக்கா, இந்தியா தான் தன்னுடைய ராஜாங்க ரீதியான செயல்பாடுகள் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தது.

இதற்கு இடையில், பொருளாதாரத் தடைகள் மூலம் பல்வேறு இறக்கங்களை சந்தித்து வரும் ரஷ்யா அதிபர் புடின், போரை நிறுத்த ஒப்புக்கொண்டு உள்ளார். உக்ரைனை கைப்பற்ற எந்த எல்லைக்கும் போக தயார் என்று புடின் கூறி இருந்த நிலையில், நேற்று துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் தொலைபேசி வாயிலாக உரையாடி உள்ளார். போரை நிறுத்துவதற்கான தனது நிபந்தனைகளையும் கூறி உள்ளார். புடினின் இந்த மாற்றம் போரை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அவரது நிபந்தனைகள் இரண்டு வகைகளில் உள்ளது. அதில் ஒன்றை உக்ரைன் எளிதாக நிறைவேற்றி விடும். அதில் முக்கியமானது உக்ரைன் நடுநிலையாக இருக்க வேண்டும் நேட்டோவில் சேரக்கூடாது எனபது. ஏற்கனவே ஜெலன்ஸ்கி சமீபத்தில் இனி உக்ரைன் நேட்டோவில் இணைய வலியுறுத்தாது எனக் கூறி இருந்தார், ஆகையால் இதை உக்ரைன் எளிதாக ஏற்றுக்கொள்ளும். அடுத்ததாக, உக்ரைன் ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என உறுதி அளிக்கும் வகையில் உக்ரைன்  ராணுவம் ஆயுத குறைப்புக்கு உட்படுத்த படவேண்டும், மற்றும் ரஷ்யா மொழிக்கு சட்டப்படி பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும், ரஷ்யா மொழி பேசும் மக்களை குறி வைத்து தாக்கும் நாஜி கலாச்சாரத்தை உக்ரைன் கைவிட்ட வேண்டும் என்ற நிபந்தனைகள் வைக்கப்பட்டு உள்ளது. இவற்றை உக்ரைன் எளிதாக நிறைவேற்றி விடும். ஆனால் புடின் சற்று சிக்கலான நிபந்தனையையும் வைத்துள்ளார். அதாவது, அமைதி ஒப்பந்தம் கையெழுத்து இடும் முன்பு, ஜெலன்ஸ்கியை நேருக்கு நேர் சந்தித்து பேச வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். மேலும், கடந்த 2014 ஆன் ஆண்டு கிரிமியா தீபகற்பத்தை சட்டத்திற்கு எதிரான முறையில் தன்னுடன் இணைத்துக் கொண்டது ரஷ்யா, அதை தற்போது அதிகாரபூர்வமாக ரஷ்யாவின் பகுதியாக உக்ரைன் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும் கிழக்கு பகுதியில் உள்ள டான்பாஸ் பகுதி குறித்தும் சில நிபந்தனைகளை வைத்து உள்ளார். 

இது சற்று கடினமான நிபந்தனை தான் என்றாலும் கூட, நிறைவேற்ற முடியாதது என்று கூறவிட முடியாது. ஏன் என்றால் ஜெலன்ஸ்கி தற்போது தனது நாட்டையும் தனது மக்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆகையால் அவர் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்து போரை நிறுத்த சம்மதிப்பார் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டு போர் நிறுத்தப்பட்டால் அதை புடின் தனது வெற்றியாகக் கருதலாம். ஆனால் உண்மையில் இந்த போர் ரஷ்யாவின் ராணுவ பலத்தை உலக அரங்கில் குறைத்தே காண்பித்து உள்ளது. உக்ரைன் உள்ளே ரஷ்யா படைகள் கீவை கைப்பற்ற முடியாமல் திணறியது எனபது மறுக்க முடியாத உண்மையே. அப்படி இருக்கும் பட்சத்தில், நிபந்தனைகள்  ஏற்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி போர் நிறுத்தப்பட்டாலும் அது புடினின் முழு வெற்றியாக அறியப்படாது.