‘வந்தே பாரத்’ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...!

‘வந்தே பாரத்’ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...!
Published on
Updated on
2 min read

சென்னை - கோவை இடையேயான  ’வந்தே பாரத் ரயில்’ சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனையம், சென்னை கோவை இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவை உள்ளிட்ட  பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி, முதலில் சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதையடுத்து சென்னை - கோவை இடையேயான ’வந்தே பாரத் ரயில்’ சேவையை தொடங்கி வைப்பதற்காக தனி ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ என் எஸ் கடற்படை தளத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கிருந்து காரின் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புறப்பட்டார். அப்போது வழிநெடுகிலும் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் சாலை முழுவதும் மலர்கள் தூவி சிறப்பு வரவேற்பு  அளிக்கப்பட்ட நிலையில், வழிநெடுக உள்ள தொண்டர்களுக்கு கையசைத்தபடியே பயணம் மேற்கொண்டார். 

தொடர்ந்து பிரமாண்ட வரவேற்புடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, ரயில் சேவையை திறந்து வைப்பதற்காக பேட்டரி கார் மூலம் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் பயணம் மேற்கொண்டார். 

பின்னர் விழா மேடைக்கு சென்ற பிரதமர் மோடி, சென்னை - கோவை இடையேயான 12 வது ‘வந்தே பாரத் ரயில்’ நிலையத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த ரயில் சென்னையில் இருந்து கோவைக்கு 490 கி.மீ தூரத்தை 5.50 மணி நேரத்தில் சென்றடையும் என்றும், சேவையின் முதல் நாளான இன்று பெரம்பூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம் , ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று கூறப்படுகிறது. 

இதற்கிடையில் ரயில் சேவையை துவங்கி வைத்த பிரதமர் மோடி, ரயில் செல்லும் போது பயணிகளுக்கு கையசைத்து உற்சாகம் காட்டினார். முன்னதாக, ரயிலில் பயணம் செய்யவிருந்த பயணிகளிடம் உரையாற்றியவர், ஒரு சிறுவனிடம் ரயில் குறித்து கேட்டறிந்தார்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com