எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவின் அரசியல் பயணம்...!

பாஜகவில் இருந்து பிரிந்து வந்த யஷ்வந்த் சின்ஹா, அக்கட்சிக்கு எதிராகவே குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்...

எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவின் அரசியல் பயணம்...!

யஷ்வந்த் சின்ஹா:
         
குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக இருக்கும் யஷ்வந்த் சின்ஹா, பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் பிறந்தவர். தற்போது 84 வயதாகும் இவர், முதலில் ஐஏஎஸ் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் தனது பதவியை 1984 - ல் ராஜினாமா செய்ததை அடுத்து தனது முதல் அரசியல் பயணத்தை ஜனதா தளம் கட்சியில் ஆரம்பித்தார். மேலும் 1988 ல் ராஜ்யசபா உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார். 

இதனையடுத்து பாஜாகவில் மிகப்பெரிய புகழை பெற்ற இவர், பாகிஸ்தான் பயணத்தின் போது முகமது அலி ஜின்னாவைப் புகழ்ந்ததற்காக தனது வழிகாட்டியான அத்வானியை எதிர்க்கட்சித் தலைவரிலிருந்து பதவி விலகக் கோரி குரல் எழுப்பியதால் 2005 க்கு பிறகு கட்சியில் யஷ்வந்த் சின்ஹாவின் ஓரங்கட்டல் தொடங்கியது. 

இதனிடையே 1998 க்கும் 2002 க்கும் இடையில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில்  2 முறை மத்திய நிதித்துறை அமைச்சராகவும், பிரதமர் சந்திர சேகர் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, பாஜக தலைமையில் மோடி பதவி ஏறியதைத்தொடர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகினார். 

அதைத் தொடர்ந்து, 2021- ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட யஷ்வந்த் சின்ஹா கட்சியின் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். இவர் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர். தற்போது பெரிய தேசிய நோக்கத்திற்காக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதாகக் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தற்போது களமிறக்கப்பட்டுள்ளார். அதற்கான வேட்புமனுவையும் இன்று யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்துள்ளார். இவர் மோடி அரசாங்கத்தின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஒரு பெரிய போட்டியாளராக இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.