பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை..ஆதாரத்தின் அடிப்படையில் உத்தரவு..!

கேரளாவில் இயங்கும் ரெகாப் இந்தியா பவுண்டேஷன் அமைப்பு நிதி திரட்டியது கண்டுப்பிடிப்பு..!

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை..ஆதாரத்தின் அடிப்படையில் உத்தரவு..!

5 ஆண்டுகள் செயல்பட தடை:

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து 5 ஆண்டுகள் செயல்பட தடைவிதித்துள்ள நிலையில், ஆதாரத்தின் அடிப்படையிலேயே அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

8 இயக்கங்கள் செயல்பட்டது:

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், பிஎப்ஐ என்ற அந்த அமைப்பின் கீழ் 8 இயக்கங்கள் செயல்பட்டதாகவும், இதன் தலைவர்களாக பிஎப்ஐ உறுப்பினர்களே இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. 

பிஎஃப்ஐ உடன் நெருங்கிய தொடர்பு:

மேலும் பிஎப்ஐ மற்றும் அதன் கீழ் செயல்படும் 8 அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், இதனை பிஎப்ஐ தான் உருவாக்கியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், இமான்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உள்ளனர்.

நிதி திரட்ட தீவிரம்:

உறுப்பினர்களை சேர்க்கவும், அவர்கள் மூலம் நிதி திரட்டவும் பிஎப்ஐ தீவிரம் காட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிஎப்ஐ உறுப்பினர்களே  அதன் கீழ் செயல்படும் அமைப்புகளுக்கு தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்திற்கு எதிரானது:

பிஎப்ஐ உறுப்பினர்கள் மூலம் கேரளாவில் இயங்கும் ரெகாப் இந்தியா பவுண்டேஷன் அமைப்பு நிதி திரட்டியது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட்டு வந்த இந்த அமைப்புகள், வெளியே  ஜனநாயகம் என்ற பெயரில்  கல்வியல், அரசியல், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு:

இதுதவிர நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்திடும் வகையில், இந்த அமைப்பு சொந்த நாட்டிலேயே பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு என்றால் என்ன?

ஐஎஸ்ஐஎஸ்-உடன் பிஎஃப்ஐக்கு தொடர்பு:

மேலும் பிஎப்ஐ தலைவர்கள் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் அமைப்பின் தலைவர்களாக இருந்ததோடு, ஜமத் உல் முகாஹிதீன்  இயக்கத்துடனும் தொடர்பில் இருந்துள்ளது. ஈராக், சிரியாவில் செயல்படும் சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்-யுடன் பிஎப்ஐ அமைப்புக்கு தொடர்பு இருந்ததும் உறுதியாகியுள்ளது. 

பயங்கரவாத அமைப்புகளில் சேர்க்கை:

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் அந்த அமைப்பை சேர்ந்த சிலர் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் இணைந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.